சாத்திரம் வளருது... சூத்திரம் தெரியுது...
ராஜ "நமோ' வெற்றிக்குப் பின், ராஜிநாமாக்கள் குடும்ப முற்றங்களில் அரங்கேறுகின்றன. மத்திய, மாநிலத் தலைநகரங்களில், வட பண்டிதர் மாநிலத்தில், வடக்குப் பிரதேசத்தில் இதே காட்சிகள்.


ராஜ "நமோ' வெற்றிக்குப் பின், ராஜிநாமாக்கள் குடும்ப முற்றங்களில் அரங்கேறுகின்றன. மத்திய, மாநிலத் தலைநகரங்களில், வட பண்டிதர் மாநிலத்தில், வடக்குப் பிரதேசத்தில் இதே காட்சிகள். ஒரு காலத்தில் கட்சிக் கணக்கு கேட்டதே கொள்கை விரோதம் என்று நினைத்தவர்கள், கட்சிச் சொத்து எல்லாம் விட்டுவிட்டு யார்தான் விலகுவார்கள்? கட்சிப் பொருளாதாரத்தை அடைகாக்க வேண்டும்.
தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் போடும் உரிமை நல்ல காலம், தேர்தலில் கிடைக்கிறது. மகேசன் பெயர் தீர்ப்பு வரும்போது மட்டும் பலர் நினைவுக்கு வருகிறது. பொழுதுபோக்கு அரசியல் நடத்தும் அரண்மனை சுகவாசிகளுக்கு இது நல்ல பாடம்.
ஏதாயினும், ஒருவர் கடந்த சில மாதங்களில் நூறு கோடி ஜனங்களின் "வாக்கு' பெற்றார் என்பது கின்னஸ் சாதனை. நேர்மறை, எதிர்மறையாக அவர் நாமகரணத்தை உச்சரிக்காத இந்தியரே இல்லை. உண்மையில் அவருக்கு வாக்களித்தோர் எண்ணிக்கை அமெரிக்க ஜனத்தொகையைவிட அதிகம் என்றால் பாருங்களேன்.
டாக்டர் கலாம் குறிப்பிட்ட வளர்ந்த இந்தியாவின் மூன்று மந்திரங்கள் - பொருளாதார உயர்வு, தேசப் பாதுகாப்பு, சர்வதேச அரங்கில் பெருமை. பாருங்கள், தேர்தல் முடிவு அறிவிப்பாகும் நாளிலேயே ரூபாயின் மதிப்பு உயர்கிறது.
பதவி ஏற்கும் முன்னமேயே அண்டை நாட்டில் இருந்து நிபந்தனை அற்றப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வருகிறது. விசா மறுத்த நாட்டு அதிபர் தன் வீட்டுக்கே வரவேற்கிறது. "நல்ல காலம் வருகுது' என்ற பாரதி வரிகளே நினைவுக்கு வருகின்றன.
ஜன சார்பற்ற ஜனநாயக ஆட்சி நடத்தியவர்கள் 2014ஆம் ஆண்டில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்- "மத சார்பற்ற மதம்'.
எப்படி இருந்த கட்சி இப்படி ஆயிற்றே என்று சுய பரிசீலனை வேறு. சாதனைத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லாத மக்கள் தொடர்பு ஊடகங்களால் வந்த வினையாம். ஊழல் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதுதான் உலக நியதி.
வாக்குகள் குறைந்தால் என்ன? வங்கிக் கணக்குகள் பத்திரமாக இருக்கும் வரை லாபம்தான் என்று சமாதானம் அடைபவர்கள். உலக அரங்கில் நாட்டை உயர்த்தாமல், உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த சாமர்த்திய சாலிகள்.
தில்லி வீதிகளில் விளக்குமாறும் கையுமாக அலைந்த இன்னொரு தலைவர் பற்றி பலருக்குத் தெரியாது. நாட்டைச் சுத்தப்படுத்தக் கிளம்பிய சாமானியர். முன்னாள் இந்திய அரசு வருவாய்ப் பணி அதிகாரி. அரசுப் பணியாற்றும்போது இரண்டு வருட காலம் மக்கள் வரிப் பணத்தில் அரசுச் செலவில் படிக்கப் போனவர். அதுவும் வெளிநாட்டில்.
திரும்பி வந்த பின் 3 ஆண்டுகளேனும் பழைய பணியில் தொடர ஒப்பந்தம் அளித்தவர். வந்ததும் வராததுமாக ஊதியம் இல்லா அவசிய விடுப்போ, அனுமதி பெறாத அனாமத்து விடுப்போ, 18 மாதங்கள் வேலைக்கே வரவில்லையாம். எங்கே என்ன பணி செய்தாரோ? தொடர்ந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு, ஒப்புதல் எதிர்பார்க்காமல் தில்லி மைதானங்களில் ஊழல் எதிர்ப்புக் கொடி அசைக்கப் போய்விட்டார். நல்ல பொறுப்பு மிக்க அதிகாரி.
மற்றவர்கள் வருமானத்தையே நோண்டி நோண்டிக் கணக்குப் பார்த்து வாங்கும் இவருக்கே வருவாய்த் துறை தாக்கீது அனுப்பியது. அனுமதி பெறா விடுப்பில் சென்றதால் அரசுக்குத் திருப்பித்தர வேண்டிய சம்பளத் தொகை 9 லட்சத்திற்கும் அதிகம். பணத்தைக் கட்டாமல், வில்லங்கம் பேசி 10 ஆண்டுகள் இழுத்து அடித்த நேர்மையாளர். நெருக்கடி முற்றியதால் பணத்தைச் செலுத்தியவர். நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக சூளுரைத்தார். எல்லாம் காற்றோடு போய் ஆயிற்று. வழக்கு என்று வந்தால் அரசு அதிகாரி விதிமீறல்களுக்கு நிச்சயம் மாட்டிக்கொள்வார்.
இதற்கு மத்தியில், "மாற்றம்' என்ற தனியார் அமைப்பு நடத்தினார். அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பிலிப்பைன் நாட்டினரின் சர்வதேச விருதும் பெற்றார். 50,000 டாலர்கள் பரிசுத் தொகைக்கு அரசு இயந்திரம் இவரை மட்டும் எப்படிப் பரிந்துரைத்தோ? இருக்கட்டும்.
பரிசு குறித்து அரசிடம் முறையான அனுமதி பெற்றவரா? நம் இளைஞர்கள் அயல் மண்ணில் இருந்து அசட்டுத்தனங்களைக் கற்றுக்கொண்டு திரும்புவது ஆபத்துதான்.
இன்று தலைநகரில் 80 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இரட்டைக் குடிலில் வசிக்கிறார், இந்த சாதாரண மனிதர். இவரது சகதர்மப் பத்தினி, வெறும் இல்லத்தரசி என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். "தீவிர மோசடிகள் விசாரணை அலுவலக' மத்திய பொதுத் தகவல் அதிகாரி. இது நம் ஊர் நம்பிகளுக்குத் தெரியாது. கணவர் கேட்டதும், அரசியல்வாதிகளின் மோசடிக் கணக்குகளை இல்லத் தலைவி வழங்குவார். இவர் கூட்டம்போட்டு அம்பலப்படுத்துவார். குடும்ப அரசியலின் வேறொரு பரிமாணம்.
எல்லாம் சரிதான். இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி அதிகாரிகள் ஒரே இடத்தில் 3 வருடத்திற்கு மேல் ஆணி அடித்து உட்கார்ந்து வேலை பார்க்கச் சட்டம் இடம் தராதே. இவரோ தம்பதி சமேதராய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரிலேயே நிரந்தர ஜாகை.
கேட்டால், கை சுத்தமானவர்கள் என்பதனால் அரசு இவர்களை விட்டு வைத்து இருக்கிறதாம். முன்னாள் ஆண்ட கட்சிக்கு இவர் தரும் சான்று அறிக்கை இது. பிரபல ராஜ மருமகன் நில விவகாரத்தில், ஒரு அப்பாவி ஆட்சிப் பணியாளர் 20 ஆண்டுகளில் 43 தடவை பணி இடம் மாற்றம் ஆனது இவருக்குத் தெரியாதுபோல.
விளக்கம் கேட்டால், பணி இடம் மாறாத 376 பேர் பட்டியல் தம்மிடம் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம். நம் ஜனங்களுக்கு மூன்று வேளை உணவுக்கு அது போதும். அரசாங்கம் குடைச்சல் கொடுத்தால், இருக்கவே இருக்கிறது ஓர் அஸ்திரம். தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் அருகில் மட்டும் ஒருத்தர் 25 ஆண்டுகளாகவே இடித்த புளி மாதிரி இருக்கிறாரே என்றார். கச்சிப்.
தலைநகரில் மின்கட்டணப் போராட்டத்தில் சட்ட விரோதமாக வீடுகளின் மின் இணைப்பில் கை வைத்தபோதும் அரசு வேடிக்கைதானே பார்த்தது? முன்னாள் அரசினோடு "பங்கு எடுத்து' ஆட்சி செய்து, ராஜிநாமாவும் செய்துவிட்டு, மீண்டும் தலைநகரில் ஆட்சி அமைக்க முயற்சியாம். நீங்களே சொல்லுங்கள், ஒரு முறை எடுத்த பயணச் சீட்டு வாங்கி, வழியில் இறங்கியவர் மீண்டும் வண்டியில் ஏறி, அதே பயணச் சீட்டைக் காட்டி மறுபயணம் தொடர முடியுமா? புனிதரின் நினைப்பைப் பாருங்கள்.
கட்சி தொடங்கிய பிறகு, தலைநகரில் ஆண்ட சட்ட மந்திரியோ, நடுராத்திரியில் அயல்நாட்டுப் பெண்களை கைது செய்ய வாசலில் போய் நின்று உத்தரவு பிறப்பிப்பார். அதே சாமானியக் கட்சி வழக்குரைஞர் ஒருவர் தீவிரவாதிகள் பகுதியில் காவல் துறை அதிகாரிகளின் பந்தோபஸ்து வேண்டாம் என்று வாதாடுகிறார். இன்னொரு சாமானியப் பெண், "மதம் பார்த்து வாக்களியுங்கள்' என்கிறார்.
தமது கட்சி வலைதளத்தில் இந்தியாவின் "தலை'ப் பகுதியை அண்டை நாட்டுக்கு இப்போதே தாரை வார்த்த தயாள உள்ளம். இவர் பிறரிடம் 18 கேள்விகள் கேட்பார். கேள்வி கேட்பது மட்டுமே செய்வார். தாம் ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். தீர்வுக்குத் தெருவில் இறங்கி விடுவார். ஊழல் எதிர்ப்புப் போராட்டமாம். சுத்தமான "நல்லெண்ணை'த் தனம்.
நாடும் வீடும் நாளுக்குநாள் மாறிக்கொண்டு வருகின்றது. நேற்றைய அறிவியல் தொழில்நுட்பம் கூட இன்று காலாவதி ஆகிவிட்டது. அரசியலார் மட்டும் மாற்றம் என்று பழைய பாட்டையே பாடிக்கொண்டு இருப்பானேன்?
குலோத்துங்கச் சோழன் குடவோலை முறை மன்னரைத் தேர்ந்து எடுப்பதற்கு அல்ல. உள்ளூர்த் தலைவர் தேர்தல் அது. இன்று வாக்குச் சீட்டு, வாக்கு இயந்திரம் ஆகிவிட்டது. மேடைப் பிரசாரம் வீட்டில் தொலைக்காட்சியில் காணலாம். இன்று உள்ளங்கை வலைதளங்களிலும், இணையத்திலும் வலம் வருகிறது.
ஒரே தலைவர் பல இடங்களில் சின்னத்திரையில் தோன்றுகிறார். தொலைக்காட்சி இல்லாத குக்கிராமங்களிலும், இன்றைக்கு முப்பரிமாண ஹோலோகிராம் என்கிற மின்முழு ஒளி அவதாரம் வந்துவிட்டது.
அயலூரில் நின்று பேசினாலும், உங்கள் வரவேற்பறையில் அவரே வந்தது போன்ற ஒளி உருத்தோன்றும். "அவர்' உடலை உங்களால் தொட முடியாது. உரையாடலாம். மைக்கல் ஜான்சனுடன் உங்கள் வீட்டு முற்றத்தில் நடனம் செய்யலாம்.
தகவல் தொடர்பு நுட்பங்கள் அசாத்திய வளர்ச்சி பெற்றுவிட்டதால் நம் நாட்டில் இன்று தந்தி நடைமுறையில் இல்லை. தந்தி நிலையத்தில் போய் இந்தியாவில் இறுதித் தந்தி அனுப்பியவர் யார் தெரியுமா? நம்மை ஆண்ட கட்சியின் துணைத் தலைவர் என்பதைச் சிலரேனும் நினைத்துப் பார்க்கலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம். உலகையே உலுக்கிய டைட்டானிக் கப்பல் விபத்திலும் கம்பியில்லாத் தந்திமுறையே உதவ முன்வந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன், 1912 ஏப்ரல் 10 அன்று இங்கிலாந்து செüதாம்டன் துறைமுகத்தில் இருந்து கிளம்பியது அந்தப் பிரம்மாண்ட கப்பல்.
அன்றிரவு அக்கம் பக்கத்துக் கப்பல்களில் இருந்து அட்லாண்டிக் கடலின் பனிப்பாறைகள் அபாயம் குறித்த "மோர்ஸ்' தந்திக் குறியீட்டுத் தகவல்கள் கிடைத்த வண்ணம் இருந்தன.
ஆயினும் கப்பலை வடிவமைத்த "ஒயிட் ஸ்டார் நிறுவன' மேலாளர் புரூஸ் இஸ்மே அந்த முன்னெச்சரிக்கையினை எகத்தாளமாக ஒதுக்கி விட்டாராம்.
கடைசியாக, கப்பல் மூழ்கிக்கொண்டு இருக்குமோதும், இறுதிவரை இருந்தவர் கட்சித்தலைவர் மட்டும்தான்... மன்னிக்கவும், கப்பல் தலைவர் மட்டும்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...