பணச்சலவைக் குற்றங்கள்
அரசாங்கத்துக்கு முறைப்படி செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பதுக்கப்படும் பணமும் அழுக்குப் பண வகையறாவில் சேர்ந்ததுதான். அழுக்குச் சொத்தின் உற்பத்தி தலத்தை


துணிச் சலவை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். பணச் சலவை என்றால் என்னவென்று தெரியுமா?
ஊக்க மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், லஞ்சம், கம்ப்யூட்டர் குற்றங்கள் போன்ற சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சம்பாதிக்கப்படும் பணத்தை (Dirty money) முறைப்படுத்தும் முயற்சிகள், பொருளாதார வட்டாரங்களில் பணச்சலவை (Money Laundering) என்றழைக்கப்படுகிறது.
அம்மாதிரியான பணத்தை வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும், வழிமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, முதலீடு செய்து, அவற்றின் குற்றக்கறையை போக்குவதன் மூலம், அழுக்குச் சொத்து, சுத்தமாக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட், தங்கம், பங்கு சந்தை, பிட்காயின் போன்ற முதலீடுகள் மூலமும் அழுக்குப்பணம் தன் சுயரூபத்தை மறைக்க முயல்கிறது.
அரசாங்கத்துக்கு முறைப்படி செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பதுக்கப்படும் பணமும் அழுக்குப் பண வகையறாவில் சேர்ந்ததுதான். அழுக்குச் சொத்தின் உற்பத்தி தலத்தை (Source) ஏதாவது ஒரு வழியில் மறைக்க முயல்வதுதான் அதன் உரிமையாளரின் நோக்கமாகும்.
சமீப காலங்களில், சமூகத்தில் அமைதியை குலைத்து, மக்களிடையே பீதியை பரப்பி, உலக நாடுகளின் பொருளாதாரத்தை குலைக்க முயலும் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்க அழுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வளர்ந்த நாடுகள் பணச் சலவை முயற்சிகளை முறியடிக்க, தங்களுக்குள் பரஸ்பர உடன்பாடுகள் மூலம், பல வழிமுறைகளை வகுத்து, பண பரிவர்த்தனை கொள்கைகளை இறுக்கியும், கண்காணிப்புகளை பலப்படுத்தியும் செயல்படுகின்றன.
உலக நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்பில் (Gross worldproduct) 5 சதவீதத்திற்கு மேல் (சுமார் 300 லட்சம் கோடிகளுக்கு மேல்) அழுக்குப்பணம் உலவுவதாக சமீபத்திய சர்வே ஒன்று தெரிவிக்கிறது. இம்மாதிரி பணப்புழக்க மதிப்பீட்டில், 140 உலக நாடுகளின் பட்டியலில், இந்தியா 70ஆவது இடத்தை வகிக்கிறது.
இது போன்ற குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க, கடுமையான கட்டுப்பாட்டு வேலிகளை அமைத்திருக்கும் நார்வே, முதல் இடத்தில் இருக்கிறது. மறைக்கப்படும் பல குற்றங்களிலிருந்து தோன்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு தடயங்கள் இருக்க வாய்ப்பில்லாததால், இந்தப் புள்ளிவிவரம் குத்து மதிப்பான ஒன்றுதான்.
எனவே, அழுக்குப்பணத்தின் உண்மையான உருவ அளவை துல்லியமாக அளக்கமுடியாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அதன் பொருளாதார தீங்குகள், நாட்டின் சாதாரணக் குடிமகனையும் பாதிக்கும் வல்லமை படைத்ததாகும்.
கருப்புப் பண உலகின் அடித்தளங்களில் ஒன்றான அழுக்குப் பணம், பெரும்பாலும் ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால், அது நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே சீர்குலைக்கிறது.
நாட்டில் உற்பத்தியாகும் அம்மாதிரி பணத்தின் அளவு, குற்றங்களை தடுப்பதிலும், வரிகளை வசூலிப்பதிலும் அரசாங்க கண்காணிப்பின் பலவீனத்தை அடையாளமிட்டுக் காட்டுகின்றன.
ஏற்றுமதிகளை குறைத்து மதிப்பிடுதல், இறக்குமதிகளை அதிக மதிப்பீடு செய்தல் போன்ற செயல்களின் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை வெளிநாடுகளில் பதுக்குவதும் பணச்சலவை வகையைச் சார்ந்த குற்றச் செயலாகும்.
ராணுவத் தளவாடக் கொள்முதல் மற்றும் அரசாங்க காண்ட்ராக்ட்டுகளில் பெறப்படும் கமிஷன் தொகைகளின் கறைகளை மறைக்க, அவை பெரும்பாலும் வெளிநாட்டு வங்கிகளில் டெபாஸிட் செய்யப்படுகின்றன.
சுவிட்சர்லாந்து, லீக்டென்ஸ்டென் லக்ஸம்பர்க், சேனல் தீவுகள் போன்ற பன்னாட்டு மையங்களில் இயங்கும் நிதி நிறுவனங்கள், குற்றப் பின்னணியுள்ள பணத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பெற்றுக்கொண்டு, ரகசியம் காக்கின்றன.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பாதிப்பு, பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி போன்ற இதன் பக்க விளைவுகள் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கின்றன.
குற்றப் பின்னணியுடன் கூடிய பண பரிவர்த்தனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டம், Anti Money Laundering Act 2002 என்றழைக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின்படி, நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு சந்தை சார்ந்த கணக்குகளைத் துவக்க, விலாச ஆவணம், புகைப்பட அடையாள அட்டை போன்றவை கோரப்படுகின்றன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் (Pannumber) கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
பங்குச் சந்தை சார்ந்த கணக்குகளில் கணக்கு வைத்திருப்பவர் தவிர மற்றவர்களிடமிருந்து பண பரிவர்த்தனை தடை செய்யப்பட்டிருக்கிறது. தீவிரவாத அமைப்புகளின் விவரங்கள், நிதி நிறுவனங்களிடையே ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
நிதி நிறுவனங்கள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள், அரசாங்கப் புலனாய்வுத் துறைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. வங்கிக் கணக்குகளில், ஒரே சமயத்தில் அல்லது ஒரு மாதத்திற்குள் (Cumulative amount) பத்து லட்ச ரூபாய்க்கு மேல் டெபாஸிட் செய்யப்படும் தொகைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு Financial Intelligence Unit என்ற அமைப்புக்கு தகவல் அளிக்கப்படுகிறது.
தொகைகளை பிரித்து டெபாஸிட் செய்து, கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு செக் வைக்கவே இம்மாதிரி வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
வரி ஏய்ப்பு மற்றும் குற்றங்களில் விளைந்த இந்தியர்களின் பணம், சுவிட்சர்லாந்து வங்கிகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டிருக்கும் செய்தி, அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது. 500 பில்லியன் டாலர் அளவில் (சுமார் 30 லட்சம் கோடி) பேசப்பட்ட அம்மாதிரி முதலீடுகளின் அளவு, தற்போது சில பில்லியன் டாலர் அளவில் தேய்ந்து நிற்கிறது.
கடந்த காலங்களில் முதலீடு செய்தவர்கள், தற்போது அவற்றை மற்ற பாதுகாப்பான பன்னாட்டு நிதி மையங்களுக்கு (Safe havens) மாற்றியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
வரி ஏய்ப்பு மற்றும் குற்றப் பின்னணியுள்ள முதலீட்டார்களின் விவரங்களைப் பரிமாற்றத்திற்கு வழி செய்யும் வகையில், 2010ஆம் வருடம், சுவிஸ் அரசுடன், இந்திய அரசு ஒரு வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
2011, ஜனவரி மாதத்திலிருந்து செயல்பட்டிருக்க வேண்டிய இந்த ஒப்பந்தம், சில சட்டச் சிக்கல்களால் நடைமுறைக்கு வரவில்லை. இம்மாதிரி ஒரு ஒப்பந்தம், கடத்தப்பட்ட இந்தியப் பணத்தை மீட்க உதவியாக இருக்கும் என்றாலும், அதற்கு பல தடைக்கற்கள் உள்ளன.
சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்கள், தங்கள் சொந்த பெயரில் நேரடியாக அதை செய்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு முகமூடிகளாகச் செயல்படும் வெளிநாட்டினர் மற்றும் டிரஸ்ட் அமைப்புகள் போன்ற எளிதில் அடையாளம் காணமுடியாத பெயர்களில்தான் அந்தக் கணக்குகள் இருக்கும். மேலும், பணத்தைப் பாதுகாப்பு பெட்டகங்களில் பதுக்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.
இம்மாதிரி தந்திரமாக செயல்படும் குற்றவாளிகளை வரி ஒப்பந்தங்கள் மூலம் அடையாளம் காண முடியாது. மேலும், ஒப்பந்தப்படி, சந்தேகப்படும் நபர் பற்றிய முழு விவரங்களை சுவிஸ் அரசுக்கு அளித்தால் மட்டும்தான் அங்கு அது பரிசீலிக்கப்படும்.
சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வரப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது நாட்டின் பொதுச் சொத்துகளை கொள்ளை அடித்த பணம். இது நம்மை மிரள வைக்கும் மாபெரும் தேச துரோகக் குற்றமாகும் என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.
நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷாவின் தலைமையில், 11 நபர் கொண்ட புலனாய்வு குழுவை அமைத்து, சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய பணத்தை மீட்க முதல் கட்ட நடவடிக்கை எடுத்திருப்பது சற்று ஆறுதலான விஷயமாகும். அரசின் முயற்சிகள் வெற்றி பெற யாவரும் வாழ்த்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...