ஊறிவிட்ட உடைத்தோடல்
திரண்ட தெளிவான ஞானமே ஒரு சமுதாயத்தின் ஒழுங்கு முறைகளை நிர்ணயிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சட்டங்கள் அமைந்தால் அமைதி காக்க முடியும்.


திரண்ட தெளிவான ஞானமே ஒரு சமுதாயத்தின் ஒழுங்கு முறைகளை நிர்ணயிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சட்டங்கள் அமைந்தால் அமைதி காக்க முடியும். ஜனத்தொகை பெருக்கம், எல்லாவற்றையும் உடனே அடைய வேண்டும் என்ற பேராசை, பொறாமை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்ற காரணங்களால் எதற்கெடுத்தாலும் முண்டியடிக்கும் கலாசாரம் வளர்ந்துள்ளது.
மகர ஜோதியை காண்பதற்காக விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் திரளாக குவிகின்றனர். இந்தக் கூட்ட நெரிசலை சமாளிப்பது பெரும் சவால். தள்ளு முள்ளு தவிர்த்து நிதானமாக பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தாலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பது பெரும்பாடு. அனாவசிய அவசரம், தன்னலம் இதனால் சில வருடங்களுக்கு முன்பு நெரிசலில் சிக்கி பலர் மாண்டனர். பம்பா அருகில் வாகனப் போக்குவரத்து நெரிசலில் பலர் இறந்தனர்.
இம்மாதிரி கோயில் உற்சவங்களில் ராஜஸ்தான், பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நெரிசலால் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. போனவருடம் கும்பமேளாவின் போது, அலகாபாத் ரயில் நிலையத்தில் நெருக்கடியில் சிக்கி 36 பயணிகள் இறந்தனர். சுமார் 50 பயணிகள் காயமுற்றனர். இந்த மாதம் ஜனவரி 18ஆம் தேதி மும்பையில் ஒரு இரங்கல் கூட்டத்தில் சிக்கி முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேர் மாண்டனர்; பலர் காயமுற்றனர்.
இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. வரும் வாய்ப்புகளை உடனடியாக பயன்படுத்திக் கொள்ள துடிப்பது மனித இயல்பு. எங்கே அந்த சலுகை தமக்கு கிடைக்காதோ என்ற அச்சம். பொறுமையை கடைபிடித்தால் எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால் தனக்குத்தான் முதலில் கிடைக்க வேண்டும் என்ற ஆசை முண்டியடிக்க தூண்டுகிறது.
இன்னொரு தனி குணமும் சிலருக்கு உண்டு. தனக்கு மட்டும் முதலில் கிடைத்தால் மகிழ்ச்சி, அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்பதில். வரவேண்டியது வராது வருந்துபவர்களைப் பார்த்து ஒரு அலாதியான சந்தோஷம். இவையெல்லாம் அழிமிதித்தடிப்பு பெருகுவதற்கு காரணமாகின்றன.
எங்கிருந்தோ தொத்திக் கொண்ட புதுவருடக் கொண்டாட்டம் வருடா வருடம் விபரீதத்தில்தான் முடிகிறது. புதுவருடம் பிறக்கும் நாள் - அதுவும் ஆங்கிலேய காலண்டர்படி - இன்னொரு நாள், அவ்வளவே. அந்த இரவு மட்டும் எங்கும் ஆட்டமும் பாட்டமும், அளவுக்கு மீறி மது, திரளாக பொது இடங்களில் கூடுவது, வேகமாக வாகனங்களை ஓட்டுவது ஒரு கோரமான கலாசாரமாகவே வளர்ந்துள்ளது.
அன்று இரவுதான் பிறர் நலன் பாராத சில இளம் வட்டங்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக பந்தய களம் போல வளைந்து சென்று மற்றவர்களை பயமுறுத்துவதும் கூச்சலிட்டு அநாகரிகமாக செய்கைகள் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. கேளிக்கைகளின் முடிவு கோரவிபத்திலும் உயிரிழப்பிலும் முடியும் என்பது மறுநாள் தினசரிகளில் வரும் விபத்து செய்திகளை பார்த்தால் தெரியும்.
இத்தகைய நிகழ்வுகளில் பாதுகாப்பு எற்பாடுகளை செய்யும் காவல்துறைக்கு இரண்டு பக்கமும் இடி. மக்கள் சந்தோஷத்தில் ஏன் காவல்துறை குறுக்கிடுகிறது நீதிமதி காவல் எதற்கு என்ற குற்றச்சாட்டு. அதே சமயம் கோர விபத்துகளையும் பொது இடங்களில் அராஜக செயல்களை தடுக்கத் தவறியதற்கும் பழியும் ஏற்க வேண்டிய நிலை. ஆனால் ஒழுங்குப்படுத்துவது காவல்துறையின் கடமை. அசம்பாவிதங்களை தவிர்ப்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நகரங்களில்தான் இத்தகைய முண்டியடிக்கும் செயல்களை அதிகமாக பார்க்கலாம். பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பயணிகள் நிற்பதில்லை. முதலில் பஸ்சில் ஏறிவிட வேண்டும் என்ற துடிப்பில் ஸ்டாப்பிற்கு முன்பே தெருவை அடைத்துக் கொண்டு நிற்கும் பயணிகள் தினசரி காட்சி. வரிசை இருந்தால் அதை உடைப்பதில்தான் அலாதி இன்பம்.
பேருந்துகளும் பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை நடுத்தெருவில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தப்படும். பஸ் ஸ்டாப்பில் ஆட்டோக்களும் ஷேர் ஆட்டோக்களும் வரிசையாக நிற்கும் காட்சி சென்னையில்தான் பார்க்க முடியும். நெறி முறைகளின் ஒரு வித உடைத்தோடல் அன்றாடம் நடக்கிறது.
நேரத்தை விரயமாக்குவது போல் பழியும் பாவமும் வேறொன்றுமில்லை. அதில் பலர் கைதேர்ந்தவர்கள். முக்கியமான பணிகளை தள்ளிப்போடுவது, தாமதிப்பது சர்வ சாதாரணம். கடைசி நிமிடத்தில் முண்டியடித்து ஏனோ தானோ என்று முடிக்கப்படும் பணி முடக்கப்பட்ட பணியாகவே தரம் குறைந்து போகும். காலவரையறைக்குள் செயல்படுபவை நிறைவாக பரிமளிக்கும். அவசரமான செய்கைகளும் இன்னொரு வகையான நெருக்கடி விபத்துதான்.
தேவையில்லா அவசரம் அசம்பாவிதமாகத்தான் முடியும். கோயில்கள் தரிசனம், குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்ள பயணம், விடுமுறையை அனுபவிக்க சுற்றுலா என்று வாகனங்களில் சந்தோஷமாக கிளம்புகிறார்கள். ஆனால் திரும்புகையில் அவசரமாக இரவோடு இரவாக பயணிக்கிறார்கள். இரவு நேரங்களில் பயணம் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியது, ஓட்டுனருக்கு போதிய ஓய்வு, யாராவது ஒருவர் தூங்காமல் ஓட்டுனரோடு இருத்தல்.
ஆனால் நேரக்குறைவால் பயணப் பாதுகாப்பு காற்றில் விடப்படும். இத்தகைய கவனக்குறைவால் பல கோர விபத்துகள் நிகழ்கின்றன. புனித யாத்திரை சென்று திரும்புபவர்களுக்கும் இந்த கதியா என்று நம்மை கதிகலங்க வைக்கும். அவசர முடிவுகளால் மிதிபடுவது மதிப்பிட முடியாத உயிர்கள்.
அகந்தை, அகங்காரம், தன்னலம் இத்தகைய துர்குணங்களால் சமுதாய மதிப்பீடுகள் நசுக்கப்படுகின்றன. மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இது மிகக் கொடுமையான அழித்தொழிப்பு. சாதாரணமாக சாலை சந்திப்புகளில் இத்தகைய விரும்பத்தகாத போக்கினைப் பார்க்கலாம்.
வாகன நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிற நிலையில் பொறுமையாக ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் சென்றால் விரைவில் செல்லாம். ஆனால் எல்லாரும் குறுகிய சாலையில் பக்க பக்கமாக கடந்து செல்ல முற்படும் பொழுது போக்குவரத்து முடங்கிவிடுகிறது. போதாக் குறைக்கு சத்தமாக வாகன ஒலி எழுப்புவது சுற்று சூழலை பாதிக்கிறது.
இவ்வாறு சந்திப்புகளில் வாகன ஒலி எழுப்பும் நடத்தையை மையமாக வைத்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆராயச்சி மேற்கொண்டது. சிவப்பு விளக்கிலிருந்து பச்சை விளக்கு மாறும் போது காத்திருக்கும் வாகனங்கள் உடனே ஒலி எழுப்பி கிளம்பும் நிலையை பார்க்கலாம். இத்தகைய ஒலி எழுப்பும் நடத்தை நான்கு விநாடியிலிருந்து 12 விநாடிவரை, காத்திருக்கும் வாகனங்களின் தன்மை, ஓட்டுனர்களின் வயது, பயணிகளின் பொருளாதார நிலை அவர்களது பணியின் தன்மை இதைப் பொறுத்து வாகன ஓட்டிகளின் எதிர் செயல் அமைகிறது.
குறைந்த வயது ஓட்டுனர்கள் உடனே ஒலி எழுப்பவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதிகமாக ஒலி எழுப்புவது பணக்கார ஓட்டுனர்கள் அல்லது சொகுசு வாகன ஓட்டுனர்கள். பணம் என்ற அகந்தை வாகனத்திலும் தொற்றிக் கொண்டு சாலைகளின் விதிகள் மிதிபடுகின்றன. வாகனங்களில் கறுப்புத்திரைகளை அகற்ற வேண்டும், பதிப்பு பலகை விதிகள் படி அளவாக இருக்க வேண்டும் என்ற சட்ட விதிகளை மிதிப்பது பணம் படைத்தவர்களின் வாகனங்கள். அதில் காவல்துறை, அரசு வாகனங்களும் அடங்கும்.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புதுப்புது நோய்கள் பரவுவதிலிருந்து உணரலாம். சுற்றுச் சூழல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விதிகள் மீறுபவர்களுக்கு கடும் தண்டனையும் உள்ளது. ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச் சூழல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் செயலாக்கத்திலும் இந்தியா 178 நாடுகளில் 155 வது நிலையில் உள்ளது என்று சர்வதேச சுற்றுச் சூழல் செயலாக்க குறியீடு நிறுவனம் தெரித்துள்ளது.
நமது நிலை அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனாவை விட கீழ்மட்டத்தில் இருப்பது வேதனைக்குரியது. தில்லிக்கு அருகில் ஓடும் யமுனை நதியில் தொழில்பட்டரை கழிவுப் பொருள்களின் சேர்க்கையால் நுரை தள்ளுவதையும் அதிலும் மக்கள் அன்றாடம் நீராடுவதையும் ஊடகங்கள் படம்பிடித்து காட்டுகின்றன. சுற்றுப்புற சூழல் விதிகள் நசுக்கப்படுவது பேரழிவில் முடியும் என்பதை உணரும் தருணம் எப்போது வரும் என்று தெரியவில்லை.
ஜனவரி 25 1930 விடுதலை வீரர்கள் மாநாட்டில் காந்திஜி "நாளையே தமது சுதந்திரம் அடைந்து விட்டதாக செயல்படவேண்டும்' என்று அறைகூவல் விடுத்தார். ஜனவரி 26 சுதந்திர தினமாக 1950 வரை தொடர்ந்து அனுசரிக்கப்பட்டது. 1949 நவம்பர் மாதம் அரசியல் சாசனம் ஏற்றுக் கொண்ட பிறகு 1950 முதல் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
ஆனால் காந்தியடிகள் இறப்பதற்கு நான்கு நாள்கள் முன்பு மனம் வேதனையுற்று "எதற்கு வீண் வெளிவேஷ கொண்டாட்டம்? உண்மையாக உணர்ந்து மத நல்லிணக்கத்திற்கும், அறியாமை, வறுமை அகலவும் சேவை செய்யும் தருணமல்லவா இது?' என்று கைப்பட எழுதியுள்ளார். அந்த தருணத்திற்கு இன்னும் காத்திருக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...