வருமுன் உணர்தல் காவலுக்கழகு
தகவல்கள் உலகம் இது. தகவல்கள் சக்திவாய்ந்தவை. உரிய நேரத்தில் சரியான தகவல் கிடைத்தால் அதன் சக்தி பன்மடங்கு. இத்தகைய தகவல்களுக்குத்தான்


தகவல்கள் உலகம் இது. தகவல்கள் சக்திவாய்ந்தவை. உரிய நேரத்தில் சரியான தகவல் கிடைத்தால் அதன் சக்தி பன்மடங்கு. இத்தகைய தகவல்களுக்குத்தான் எல்லாரும் ஏங்குகிறார்கள். எந்த பொருளை எந்த சமயத்தில் எங்கு எவ்வாறு விற்பனைக்கு சந்தையில் விட வேண்டும் என்பது உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகப் பெரிய சவால்.
மக்களது தற்போதைய ரசனை என்ன, அதற்கு ஏற்றவாறு எவ்வாறு சினிமா படம் எடுப்பது என்பது மற்றொரு சிக்கலான கேள்வி. அறுபதுகளில் "பா' வரிசை தலைப்பில் பல படங்கள் வெற்றி பெற்றன. அதன் வெற்றிப் பின்னணி என்ன? அதே போல் எப்போது எத்தகைய குற்றங்கள் நிகழும்? நடந்த குற்றங்களில் ஈடுப்பட்டவர்களை கண்டுபிடிக்க பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்காத காவல்துறையினர் இருக்கமுடியாது. எந்த புற்றிலிருந்து எந்த பாம்பு வரும் என்ற பிரமிப்பால் குறுக்கு வழியைத் தேட துவங்கிவிடுவார்கள்.
என்ன நடக்கும் என்பதை அனுமானிக்க முடியுமா என்றால் இந்த நவீன உலகில் அது ஒரளவு சாத்தியம் என்கிறார்கள் கணினி மென் பொருள் விஞ்ஞானிகள். வானிலை ஆராய்ச்சி முன்போல் இல்லை. இப்போது சாட்டிலைட் மூலமாக, வெப்ப நிலை வானிலை மாற்றங்கள், மழை வரும் நிலை பற்றிய விவரங்கள் அறியப்படுகின்றன.
மென்பொருள் உலகில் ஸ்மாக் (நஙஅஇ), சமூக வளையம், செல்போன், பகுத்தாய்தல், தகவல் மேகப்பெட்டகம் ஆகியவை வளர்ந்து வரும் மென்பொருள் தளங்களாக கருதப்படுகின்றன. சமூக வலைதளங்கள், மொபைல் போன் மூலமாக பல கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. நிகழ்வுகள், சமுதாய நடவடிக்கைகள், தனி நபரது அன்றாடக் குறிப்புகள் என்று பல தகவல்கள் ஊடகங்கள் மூலமாகவும் இணையதளம் வழியாகவும் பெறப்படுகின்றன. இதனை பகுத்தாய்ந்து காவல் துறையில் குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்தும் முறை அதாவது வருவதறிந்து காவல் செய்யும் முறை (டழ்ங்க்ண்ஸ்ரீற்ண்ஸ்ங் டர்ப்ண்ஸ்ரீண்ய்ஞ்) என்ற தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.
நமது நாட்டை ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை மோசடி வழக்கு இடிபோல் தாக்கியது. நடுத்தர குடும்பத்தினர் பலரது சொற்ப சேமிப்பு, சந்தை சாக்கடையில் கரைந்தது. தொழில் நுட்ப, தகவல் பரிமாற்ற வளர்ச்சியை சமூக விரோதிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர். நாடுகள் கடந்த தீவிரவாதம் தழைத்தது. பல நாடுகளை துளைத்தெடுத்தது.
1993இல் மும்பை தொடர் குண்டு வெடிப்பு, 1998இல் கோயம்புத்தூர் தீவிரவாத தாக்குதல், பெங்களுரூ, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் பல இடங்களில் தீவிரவாதம் தலைதூக்கியது. மரண அடியாக 2008இல் மும்பை தீவிரவாதிகளின் படையெடுப்பில் 168 உயிர்களை பலி கொண்ட கோர நிகழ்வு, "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று எல்லோரையும் அசர வைத்தது.
2006இல் இருந்து உலக நாடுகளை பீடித்த மற்றொரு நோய் பொருளாதார வீழ்ச்சி. அமெரிக்காவில் துவங்கி ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய நாடுகளையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிய பொருளாதார பின்னடைவின் கோரப்பிடி இன்னும் தளரவில்லை.
இத்தகைய சூழலில் உலகெங்கிலும் குற்றங்கள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமூக குற்றவியல் ஆராய்ச்சியாளர்களும், தேக்கநிலையில் உள்ள சமுதாயத்தில் குற்றவாளிகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஜான் டிலிலீயோ என்ற அமெரிக்க சமுக பல்கலை ஆராய்ச்சியாளர் புத்தி கூர்மையுள்ள ஆனால் விபரீத குணம் கொண்ட நவயுக இளைஞர்கள் சமுதாயத்தை சீரழிப்பார்கள் என்று எச்சரித்தார். அதுபோலவே நடந்தது என்பதை சைபர் குற்றங்கள் அதிகமாகியுள்ளதன் மூலம் உணரலாம். ஹாக்கிங்க் என்ற இணைய தளங்களை தாக்கும் வழிகளும் கணினி மென் பொருள் நிபுணர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்திய அரசின் இணைய தளங்களும் இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்பமுடியவில்லை.
நவீன குற்றங்கள் பெரிய பிரச்னையாக உருவெடுத்தாலும், எப்போதும் நடக்கும் சொத்து சம்பந்தப்பட்ட கொள்ளை, களவு போன்றவை பல நாடுகளில் குறைந்து வருகின்றன என்பது தெரியவந்துள்ளது. வருவதை உணர்ந்து நவீன உத்திகள் அடங்கிய காவல் முறை செயலாக்கமே, குற்றங்கள் குறைந்ததற்கு முக்கிய காரணம். ரோந்து வாகனங்கள் அதிகமாகியுள்ளன. அந்த வாகனங்களில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கணினி மூலமாக குற்ற நிகழ்வுகளை கண்காணித்து ஆராயும் "காம்ப்ஸ்டாட்' முறை நியூயார்க் மாநகர ஆணையர் வில்லியம் ப்ராட்டன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் ஆணையராக பணிபுரிந்து, பிறகு லண்டன் மாநகர காவல்துறைக்கு பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் நியூயார்க் மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது அறுபத்தி ஆறு. அமெரிக்காவில் பணிமூப்பு என்பது கிடையாது. அங்கு திறமைக்கு மதிப்பளிக்கப்படுகிறது.
சிறு குற்றங்களை கண்காணித்து களைந்தால் பெரும் குற்றங்களை தவிர்க்கவும் தடுக்கவும் முடியும் என்பது ப்ராட்டனின் அணுகுமுறை. அதில் வெற்றியும் கண்டார். நம் ஊரிலும் உள்ளூர் அனுபவம் வாய்த்த காவல்துறை அதிகாரிகள் மாமியார் நச்சரிப்பு போல சிறு குற்றங்களை கடிந்து முனைப்பாக செயல்படுவார்கள். அவ்வாறு செய்வதால் சரகத்தில் பெரிதாக ஒன்றும் நிகழாது.
வீரப்பன் வேட்டையின்போது அவன் எங்கு எப்போது தோன்றுவான் யாரோடு தொடர்பு வைத்திருக்கிறான் என்பதை வருமுன் உணரும் வகையில் விசாரணையும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அவனைப் பற்றிய தகவல் எப்போதும் காலம் கடந்து வரும் அல்லது அதிரடிப்படை தொல்லை பொறுக்காமல் அவர்களை வேறு திசையில் திருப்புவதற்கு பொய் தகவல்கள் கொடுக்கப்படும்.
பரந்த வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் எவரிடம் தொடர்பு வைத்திருந்தான், முன்பு எங்கெல்லாம் தங்கியிருந்தான் என்பது அவன் சம்மந்தப்பட்ட வழக்கு. புலன் விசாரணையில் கண்டறியப்பட்டதை தொகுத்து எந்தப்பகுதிக்கு எந்த மாதத்தில் செல்வான், அங்கு யாரிடம் தொடர்பு கொள்வான் என்பதையெல்லாம் கணினியில் பதிவு செய்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் அவன் கர்நாடக வனப்பகுதியில் கோபி நத்தம் கிராமத்திற்கு வடக்கே இருக்ககக் கூடும் என்று இந்த ஆராய்வு மூலம் கணித்தது சரியாக இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிலத்தடி நீர்தளம் உணரும் சக்தி உள்ள ஒருவர் வனப்பகுதி வரைபடத்தில் கையில் வைத்திருந்த மணியை பல இடங்களில் கண்பித்தார். சரியாக கணினி ஆராய்வு மூலம் அனுமானித்த இடத்தில் மணியை வைத்த போது அவரது கை வேகமாக அதிர்ந்து மணியை ஒலிக்கச் செய்தது. இது எங்களது கணிப்பை உறுதி செய்தது.
நடந்த நிகழ்வுகளை கணினியில் பதிவு செய்து, விசேஷமான மென்பொருள் மூலம் அதை ஆராய்ந்து எந்தெந்த இடங்களில் குற்றங்கள் நிகழக்கூடும், ஒரு நாளின் எந்த நேரத்தை குற்ற நிகழ்வுக்கு அனுகூலமாக குற்றம் புரிபவர்கள் தெரிவு செய்கிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு அந்த இடங்களுக்கு காவல் ரோந்துப்பணியை தீவிரப்படுத்துவதன் மூலம் குற்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.
இத்தகையை சீர்மிகு வழிகள் மூலம் நியூயார்க் மாநகரத்தில் 1990லிருந்து நடந்த குற்ற நிகழ்வுகளை ஆராயும்பொழுது 1,47,000 வாகன திருட்டுகள் 1990களில் பதிவானது, அது 2008இல் 10,000ஆக குறைந்தது. அதே வகையில் கொள்ளை, வழிப்பறி குற்றங்களும் வெகுவாக குறைந்தன.
மேலும் அமெரிக்காவில் குற்றம் புரிந்தவருக்கு தண்டனை கடுமை மட்டுமல்ல உறுதியும் கூட. அமெரிக்கர்களில் நூறு பேரில் ஒருவருக்கு சிறைவாசம் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதுவும் குற்றம் குறைவதற்கு காரணம்.
இந்தியாவிலும் ஓரளவு பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைந்திருக்கிறது. இந்த வருமுன் உணரும் முறையை புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்தினால் குற்றங்கள் தடுக்கப்பட வாய்ப்பு உண்டு.
குற்றத்தடுப்பிற்கு பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் குற்றங்களை எந்த அளவுக்கு தடுக்கும் என்பது விவாதத்திற்குரியது. ஆயினும் குற்றவாளிகளை அடையாளம் காண நிச்சயம் உதவும். குற்றம் புரிந்தால் பிடிபட வாய்ப்புள்ளது என்பதே குற்றவாளிகளுக்கு அச்சத்தை கொடுக்கும்.
புத்திசாலித்தனமான காவல் பணி மூலம் குற்ற நிகழ்வுகளைக் குறைக்கலாம். காவலர் எண்ணிக்கை பற்றாக்குறை என்று புலம்புவதால் பயனில்லை. இன்று ஆயிரம் காவலர்கள் பதவி அறிவித்தால் கூட அவர்கள் தேர்வு பயிற்சி முடித்து பணியில் அமர்வதற்கு குறைந்தபட்சமாக இரண்டு வருடங்களாகும். அதற்குள் பிரச்னைகள் வேறுவிதமாக வடிவமெடுக்கும்.
விரும்பி வருத்தி உழைப்பதுதான் விவேகமான காவல்பணி அதில் வருமுன் உணரும் நவீன முறையை, முக்கிய தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.
"பார்த்ததை பார்த்தபடி பகிரவும்' என்று மக்களிடம் வேண்டுவது போல காவல்துறையும் "நடந்ததை நடந்தபடி' பதிந்து பணி மேற்கொண்டால் வருமுன் உணரும் காவல் உத்தி வெற்றி பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...