பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சாத்திரங்கள் ஒன்றும் காணார்

திருவண்ணாமலையில் தீபம் அணையும் வரையில் எல்லார் வீட்டு வாசல்களிலும் விளக்குகள் இருக்க வேணும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:48 am

நெல்லை சு. முத்து

திருவண்ணாமலையில் தீபம் அணையும் வரையில் எல்லார் வீட்டு வாசல்களிலும் விளக்குகள் இருக்க வேணும். நமது ஏழ்மையால் வருஷம் முழுவதும் விளக்கு ஏற்ற முடியாவிட்டாலும், தீபாவளியிலிருந்து கார்த்திகை தீபம் வரையில் ஆசாரமாய் விளக்கு ஏற்றினால், பார்வதி, லக்ஷ்மி, கங்கை மூன்று பேரும் நம் வீட்டில் தங்குவார்கள் என்று என் பாட்டி சொன்னார்' என்று மீனா என்னும் சிறுமி சொன்னபோது, ஒருவர் சொன்னார்:

"இதற்குக் காரணமே வேறு. நாம் வழக்கம், சாத்திரம் என்று சொல்லிக்கொண்டு முக்கியமான காரணத்தை மறந்து விடுகிறோம். முன்பு தெருவில் விளக்குகள் கிரமமாக இருக்கவில்லை. இந்த மழைக் காலங்களில் இருட்டு அதிகம்.

எல்லார் வீடுகளிலும் வரிசையாக விளக்கு ஏற்றினால் முக்கால்வாசி ஊரே வெளிச்சமாகி, மேகம், இருட்டு இரண்டும் சேர்த்துச் செய்யும் கும்மிருட்டை நீக்கும். அதற்கு முன்னோர்கள் உபாயம் செய்தார்கள். இப்போது அடிக்கொரு மின்சார விளக்கு இருக்கும்போது இந்த மின்மினி விளக்கு எதற்கு? சொல்லுங்கள்'.

இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல, மகாகவி சுப்பிரமணிய பாரதியார்தான். "இந்தியா' பத்திரிகையின் உரிமையாளர் மண்டயம் சீனிவாச்சாரியரின் புதல்வி யதுகிரி அம்மாள் எழுதிய "பாரதி நினைவுகள்' என்கிற நூலில் இது இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டை பெண் கல்வியின் நூற்றாண்டு என்று கூறலாம். யதுகிரி அம்மாள், "இந்தியாவில் 1914-ஆம் வருஷ வாக்கில் பெண் கல்வி மேல் ஆவல் கிளம்பியது. பெண் சுதந்திரம் என்ற கூக்குரல் கிளம்பியது. சிலர் இதை மறுத்தார்கள்.

அன்று வெள்ளைக் கோபுரத்தின் மீது நின்று யார் கண்டனம் செய்தார்களோ அவர்களே இன்று பெண் கல்விக்கு முதல் இடங்கொடுத்து முன்னுக்கு வருகிறார்கள். ஆனந்த வருஷம் (1914-1915) முதல் எங்கள் உற்றார் உறவினர்களெல்லாம் என் ஜதைப் பெண்களை இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினார்கள்' என்கிறார்.

இதை எல்லாம் நினைத்துப் பார்க்க நேரம் இல்லை. கவி பாரதியார் தொடங்கி, கர்ம வீரர், பகுத்தறிவுத் தந்தை, காஞ்சி அறிஞர் இவர்களையெல்லாம் வேட்டி கட்டியதாலேயே நாம் பின்பற்றுகிற மாதிரி விளம்பரத்தில் காட்டுகிறார்கள்.

வேட்டியின் பெருமையை, நடந்து வந்து நடிகர் சொன்னால்தான் நம்மவர் மனதில் உறைக்குமாம். எவ்வளவு இழிவுபடுத்தப்படுகிறோம் நாம்? மிச்சம் உள்ள நேரத்தில் குடும்பத்திற்குள் "கோள் மூட்டுவது', கொண்டவனைப் "பழி வாங்குவது' இப்படியே தமிழ் மகளிர் பண்பாடு சின்னத்திரைகளில் பதிவாகி வருகின்றன.

பாருங்களேன், 10 ஆண்டுகளுக்கு முன்னமேயே இந்தியாவிற்கு "தொழில்நுட்பத் தொலைநோக்கு-2020' அறிவித்த விஞ்ஞானி டாக்டர் கலாமின் 84-ஆம் வயது சிறப்பாகத் தெரியவில்லை. நாள்முச்சூடும் நடிகரின் 64-ஆம் வயதிற்கு ஆர்ப்பாட்டங்கள். மக்கள் சிந்தனை என்னவோ நடிகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே.

புத்தகத் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்கள். இளமையிலேயே புரட்சி அணி என்ற பட்டை குத்தி, சிலர் கும்பலாகச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அங்கு மேடையில் மூத்த நடிகர் ஒருவர், பெண்களுக்குக் "கற்பு பூட்டு' (சாசிட்டி பெல்ட்) பற்றியும், தம் குடும்பத்தின் நடிக வாரிசுகள் பற்றியும் பேசினார்.

பண்டிகைகளுக்குக் கூட தோள் அல்லது கால் மூடாத நடிகை தான் வந்து வாழ்த்துச் சொல்கிறார். மேனாடுகளில் குளிர் உறைக்காத சீமாட்டிகள் வந்து போகட்டும். நம் நாட்டிலுமா?

ரவிக்கைக்கு கை வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்தால் பரவாயில்லை. ரவிக்கையே வேண்டுமா வேண்டாமா என்றுதான் விவாதிப்பார்கள் போலிருக்கிறது. ஏவாள் உடையின்றி இருந்தாள், என் பாட்டிக்கு ரவிக்கை கிடையாது என்று வக்காலத்துவேறு. தாழ்ந்த சாதிப் பெண்டிர்க்கு அந்த உடை மறுக்கப்பட்டபோது, எதற்காக எதிர்த்தார்களோ?

ஆடை அணிவதில் நாகரிகம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கும் பட்டிமன்றம் வைக்கிறார்கள். ஆண்-பெண் வேற்றுமைகளையே விவாதித்துத் தீர்ப்புகள். அரசியலிலும் ஆணா, பெண்ணா என்றுதான் போட்டி வசனங்கள். அவர்களில் மத்தியப் பெண்களா, மாநிலப் பெண்களா என்றும் தலைப்பு தேடிப் பொங்கலுக்குப் பட்டிமன்றம் வைப்பார்களோ என்னவோ?

ஆரம்பப் பள்ளி மாணவி முதல் ஐ.டி. ஊழியர் வரை அனைவருக்கும் பாலியல் வன்கொடுமைகள். பள்ளிக்கூடங்களில் பாலினப் பாடம் சேர்க்கலாம் என்று ஒரு சிலர். இனி விழாக்காலங்களில் பட்டிமன்றங்கள் வேண்டுமா, வேண்டாமா என்றுதான் மக்கள் உயர்நீதி வழங்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கு அறிவியலே உணவாக வேண்டும். ஊடக அரங்குகளில் அறிவியலே ஒலிக்க வேண்டும்.

"நீங்கள் எல்லோரும் தமிழுக்கு ஒரே முகமாகப் பாடுபட்டால் உலகம் புகழும்படி தமிழ் பரவாதா? யாரோ அத்வானம் என்று சொன்னார்கள் என்று வருந்துவதை விட நாமும் நம் கையாலான உதவியை செய்யலாம் என்று ரோஷத்தோடும் உற்சாகத்தோடும் செய்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

இங்கிலீஷ் படித்து அதிகாரம் செய்வதை விட, தமிழைப் போற்றி அதிகப்படுத்துவது நல்லது. புதிய புதிய நடைகளில் காவியங்களை விவரிப்பது, கோவையான பாசுரங்களைப் பதம் பிரித்து அச்சிடுவது, பெயர் போன பாஷைகளிலிருந்து நல்ல நல்ல கதைகளைப் பிரசுரிப்பது, இயற்கை சாஸ்திரம், செயற்கை சாஸ்திரம், வான சாஸ்திரம், வனப்பொருள் சாஸ்திரம் இவைகளை மொழிபெயர்ப்பது - இதனால் நன்மை உண்டாகும்' என்கிறார் மகாகவி.

காவியம், பாசுரம், சாத்திரம் (அறிவியல்) ஆகியவற்றைத்தானே குறிப்பிடுகிறார். தமிழில் பலரும் தல வரலாறு, புராணங்களை மாற்றி மாற்றி எழுதி வருகின்றனர்.

கனமான புத்தகங்கள் கெளரவிக்கப்படும் என்கிற மாயை உருவாகிவிட்டது. ஐந்து கிலோ எழுதினால் அகாதெமி விருது. பத்து கிலோ எழுதினால் "பத்ம' விருது என்ற நிலை வந்துவிடலாகாது. விஷயகனம் முக்கியம். வீசைக் கனம் அல்ல.

வயதில் மூத்தவர்கள் கெளரவிக்கப்படாமல் இருக்கும்போது காசு பணம் உள்ளவர்கள் "ஸ்பெஷல்' தரிசனம் செய்கிறார்கள். முந்திக்கொண்டு வாங்குகிறார்கள்.

தமிழர் சிந்தனை என்றால் அது ஒரு திரைப்படமாக வரவேண்டும்; எழுத்தாளர் திரைத்துறைப் பிரபலமாக இருக்கவேண்டும் அல்லது அரசியலார் அடிவணங்கி ஆக இருக்கவேண்டும் என்று தகுதி வரையறை வைத்து உள்ளோம்.

ஒரு பக்கம், தமிழ் மரபு என்றும் திராவிடக் கலாசாரம் என்றும் நினைத்துக்கொண்டு வாழ்கிறோம். பணக்காரக் கட்சிகளும், பந்தாக் கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.

தங்கள் சொந்தத் தொலைக்காட்சிகளில் தங்கள் உரிமையாளர்களின் மனைகளை பட்டா போட்டு இலவசமாக வழங்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். மருத்துவமனை தொடங்கி சுடுகாடு வரை பக்கத்தில் இருக்கிற இடங்களுக்கு ஏகக் கிராக்கி.

"எங்களுக்குச் சம்பந்தமில்லை' என்ற முன்னெச்சரிக்கையுடன் உத்தரவாதமற்ற பொருளை விளம்பரப்படுத்துவானேன்?

சுவருக்கு பெயின்ட் அடிப்பது, இடுப்பில் பெல்ட் மாட்டிக்கொண்டு உடல் குலுக்கி மாவு அரைப்பது, அமேசான் காட்டுமிராண்டிகள் போல் முடி வளர தைலம் தருவது - எல்லாம் நமக்குத் தேவைதான். அடுத்த நூற்றாண்டு வரையிலும் இதையே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

நினைவாற்றலை அதிகரிப்பதற்காக மனப்பயிற்சி முக்கியம். அதனால்தான் பொருள் தெரிந்தோ தெரியாமலோ புரியாத வயதிலும் பாராயணங்கள் கற்றுத்

தருகிறோம்.

கருவுற்ற பெண் நல்ல, இனிமையான, அமைதியான பாடல்களை, ராகங்களைக் கேட்டால் பிறக்கிற குழந்தைக்கு இயல்பாகவே நற்பண்புகள் அமையும் என்கிறார்கள். அந்த நேரங்களில் நம் பெண்மணிகள் தொலைக்காட்சிகளின் அனாவசியக் காட்டுக் கத்தல் பாட்டுகளை ரசிப்பது ஏனோ?

சமீபத்தில் சுவிட்சர்லாந்து "தேசிய அறிவியல் அறக்கட்டளை நிறுவனம்' நடத்திய ஆராய்ச்சி இன்னொரு தகவலை அறிவிக்கிறது. மொழியைக் கற்றுக்கொள்ள புதுவழி.

வீட்டில் இயல்பாகக் கற்றுக் கொள்வது தாய்மொழி. பள்ளிக்கூடத்தின் முதல் மொழி. அடுத்து, வேலை நிமித்தம் நாம் கற்க வேண்டியது பொது மொழி.

ஏதாயினும், ஒரு மொழியின் புதிய சொற்களை கற்றுக் கொள்ள வேண்டுமா? உறங்கப் போகும் முன்னதாக, அதே சொற்களை மீண்டும் ஒருமுறை அசைபோட்டுப் பாருங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சூரிச் மற்றும் ஃபிரைபர்க் பல்கலைக்கழக அறிஞர்கள் கருத்து வேறு மாதிரி. ஜெர்மன் மாணவர்கள் உறங்கும்போது, டச்சு மொழிச் சொற்களை தலைமாட்டில் ஓதிக் கொண்டு இருந்தாலே அது மனதில் பதிகிறதாம். இது புது வகை "மொழியணை மந்திரம்'.

இதற்காக, "செரிபரல் கார்ட்டக்ஸ்' என்கிற மூளைப் புறணி ஆய்வு இதழில் தாமஸ் ஷிரைனர் மற்றும் ஜோன் ராஷ்ச் ஆகியோர் 60 பேரைத் தேர்ந்து எடுத்தனர். முதல் 30 பேருக்கு டச்சு மொழிச் சொற்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்புகளை படிக்கச் சொல்லி உறங்கச் செய்தனர்.

அவர்களில் பாதி பேருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு டச்சுச் சொற்களை ஓதினர். இரவு இரண்டு மணிக்கு எழுப்பிக் கேட்டால், அதை அப்படியே ஒப்பித்தார்களாம்.

இன்னொரு பாதிப் பேருக்கு காலையில் கண் விழித்தபோது, முதல் நாள் படித்தது மறந்து போயிற்றாம். உறக்கத்தில் அன்னிய மொழிகள் படிக்கலாம் என்பது அந்த விஞ்ஞானியர் கருத்து.

உலக வர்த்தகத்தில் முன்னேற நினைக்கும் சீனாவின் இன்னொரு கண்டுபிடிப்பு. சீனர்கள் ஆங்கிலம் கற்கும் முறை. ஆங்கிலம் படிக்கும்போது ஏற்கெனவே சீனம் தாய்மொழி ஆகக் கொண்டவர்கள் எளிதில் தங்கள் தாய்மொழியில் ஆங்கிலச் சொற்களை உள்வாங்குகிறார்களாம்.

அதனால்தான் தனியார் தொலைக்காட்சிகளில் தமிழ்நாட்டு மழலைகளுக்கு நாமும் "பர்த் டே விஷ்' பண்ணுகிறோமோ?

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.