டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மனிதர்களும் உரிமைகளும்

மனித உரிமைகள் என்பது புதிய சொல்லாட்சி. ஆனால் மனித உரிமைகள் பழைமையானது. மனிதர்கள் பிறப்பின் வழியாகப் பெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:38 am

சா.கந்தசாமி

மனித உரிமைகள் என்பது புதிய சொல்லாட்சி. ஆனால் மனித உரிமைகள் பழைமையானது. மனிதர்கள் பிறப்பின் வழியாகப் பெற்றது. பல்லாயிரம் ஆண்டுகளாகச் சமூகத்தின் பண்பாக இருந்து வருகிறது. ஞானிகள் சொல்லி வருவதிலும், சமயங்கள் பிரசாரம் செய்து வருவதிலும் அடிநாதமாக இருந்து வருவது மனித உரிமைகள்தான்.

உலகம் என்பது பூமிதான். அதாவது, பூமி உண்டே தவிர நாடுகள் கிடையாது. பின்னால், அரசு என்று ஒன்று ஏற்பட்டபோது, பூமிக்கு எல்லை போட்டார்கள். மனிதர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை முடக்கினார்கள். ஆறுகள், மலைகள், சமுத்திரங்களைத் தங்களுடையது என்று வசப்படுத்திக் கொண்டார்கள்.

மனிதர்களின் இயற்கை நீதி அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஒவ்வொரு சமூகமும், சமயமும் தனக்கு உகந்த மாதிரி இயற்கை நீதி, மனித உரிமைகள் என்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தன. எல்லா நாகரிக சமூகங்களிலும் மனித உரிமைகள் பேணப்பட்டது போலவே, மனித உரிமைகள் மீறலும் நடைபெற்றது.

உயர்ந்த நாகரிகம், பண்பாடு கொண்ட சமூகம் என்றறியப்பட்டதில்கூட பலர் மனிதனை அடிமையாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மனித உரிமைகள் என்பதை அறிந்து கொள்வதும், அதனை அனுபவிக்கச் செய்வதும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஏனெனில், ஒரு நாட்டின் சட்டதிட்டங்களே, மனித உரிமைகள் என்பதற்கு முதல் தடையாக இருக்கின்றன.

மனித உரிமைகள் என்பவை தனிப்பட்ட மனிதனின் உரிமைகள் என்றால் அவை மற்றொரு மனிதனையோ, சமூகத்தையோ பாதிக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். சேர்ந்து வாழ்வதென்றால் பிணக்கும், சண்டையும் உடன் வருகிறது. சில நேரங்களில் பேசி சமாதானம் செய்து கொண்டார்கள். பல சமயங்களில் வாளெடுத்துப் போரிட்டு அதன்பின் சமாதானத்தை அடைந்தார்கள்.

பேச்சுவார்த்தை என்றாலும் சரி, போர் என்றாலும் சரி, கடைசியில் சமாதானம் ஏற்பட்டது. போர்தான் நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டு வருகிறது. எனவே போரை விட முடியாது என்று சொல்லப்பட்டு வருகிறது.

இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல நாடுகள் ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருக்கு எதிராகப் போரிட்டன. ஹிட்லர் ஆறு லட்சம் யூத இன மக்களை வதை முகாம்களில் போட்டுக் கொன்றான்.

ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகளைப் போரில் வென்று முன்னேறிக் கொண்டிருந்தது. அது திடீரென்று பசிபிக் சமுத்திரத்தில் இருந்த அமெரிக்காவிற்குச் சொந்தமான பெல் துறைமுகத்தைத் தாக்கி பெரும் சேத்தை ஏற்படுத்தியது. அதனால் அமெரிக்கா இரண்டாவது உலகப் போரில் நேரடியாக இறங்கியது.

ஹிரோஷிமா, நாகசாகி - ஆகிய ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டை வீசியது. அது புது ஆயுதம். முதன்முறையாக ஜப்பானிய நகரங்களில் அமெரிக்கா குண்டு வீசி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது. ஜெர்மனியின் ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்றால், ஜனநாயக அமெரிக்கா முரட்டுத்தனமாக அணுகுண்டு வீசி சர்வநாசத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போர், நாடுகளுக்கிடையிலான போர். மனித உயிர்களை அதிகமாகப் பலி வாங்கியது. மனிதர்கள் அறிவால் கண்டுபிடித்த ஆயுதங்கள், போரோடு சம்பந்தமே இல்லாத எளிய மனிதர்களைக் கொன்று குவிந்தன. அது மனித உரிமை மீறல், பல நாடுகளிலும் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தது.

இனி வருங்காலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அதற்கென சட்டங்கள் வகுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி வந்தார்கள். அதற்கான முன் முயற்சியை ஐ.நா. சபை எடுத்துக் கொண்டது. பல கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது.

ஐ.நா. சபை, டிசம்பர் - 10-ஆம் தேதியை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்று அறிவித்தது. அதன் பிரகடனத்தில், மனித உரிமைகள் முப்பதென்று வரையறுத்தது. அதனை ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. அதன் முக்கிய ஐந்து வாசகங்கள்:

  • எல்லா மனிதர்களும் சுதந்திர மானவர்கள்; சமமானவர்கள்.
  • எவரிடமும் வேறுபாடு காட்டக் கூடாது.
  • எல்லா மனிதர்களும் வாழ உரிமையுடையவர்கள்.
  • எவர் ஒருவரும் அடிமை இல்லை.
  • எவரையும் கொடுமைப்படுத்துதல் கூடாது.

மேலும், உள்நாட்டில் சுதந்திரமாக வாழ முடியவில்லையென்றால் புலம்பெயர்ந்து செல்ல உரிமை உண்டு என்கிறது மனித உரிமைகள் பிரகடனம். அதற்கு முன்னோடியாக இருந்தது, பிரான்ஸ் நாட்டில் 1789-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மனிதர்கள், குடிமக்கள் உரிமைகள் பிரகடனம்.

பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் பிரெஞ்சு அரசின் நிதியமைச்சராகஇருந்த ஜாக்குலஸ் நச்சர் என்பவர் மனித உரிமை சாசனம் வெளியிட முயற்சி எடுத்துக்கொண்டார்.

அமெரிக்க அரசியல் சாசனம் எழுதிய தாமஸ் ஜெபர்சன், மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி நூல் எழுதிய தாமஸ் பெபின் ஆகியோர் ஜாக்குலஸ் நச்சர் பிரகடனம் தயாரிக்க உதவியாக இருந்தார்கள்.

பிரான்ஸின் மன்னராக இருந்த பதினாறாம் லூயிஸ் அதனைப் படிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. கடைசியாக மன்னர் படித்துவிட்டு கையெழுத்திட்டார். அதன் பின்னர் பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சியில் மன்னர் தலை கெலட்டினில் வைத்து வெட்டப்பட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் இனத்தாலும், சமயத்தாலும், மொழியாலும், நிறத்தாலும் வேறுபட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அரசு தேர்தல் வழியாக மக்கள் ஆதரவைப் பெற எங்கள் இனம், எங்கள் சமயம், எங்கள் மொழி, எங்கள் நிறம் என்று முதன்மைப்படுத்துகிறது.

எங்கள் நாட்டில் வாழ வேண்டுமானால், எங்களின் மைய நீரோட்டத்தில் கலந்துவிடுங்கள்; ஒரு மதம்தான் அரசு மதம். ஒரு மொழிதான் ஆட்சி மொழி என்று அதிகாரம் செய்கிறார்கள். இன ரீதியாகப் படிப்பை - வேலைவாய்ப்புகளை மறுக்கிறார்கள். எதிர்த்து உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தால் வன்முறையாளர்கள், தேசத் துரோகிகள், தேசப்பற்று அற்றவர்கள் என்று கூறி சிறையில் அடைக்கிறார்கள்; சுட்டுத் தள்ளுகிறார்கள்.

மனித உரிமைகள் என்பது பல நாடுகளில் கடைசி இடத்தில்தான் இருக்கிறது. அது ஆட்சி, அதிகாரத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. மனிதன் தான் பிறந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம். தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம் என்றால், சொத்து தனியுடைமை சமுதாயம் சார்ந்தது. அதனை ஏற்க முடியாது என்கிறார்கள் பொதுவுடைமைவாதிகள்.

விரும்பிய சமயத்தைப் பின்பற்ற சுதந்திரம் என்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த நாடுகளில் நாங்கள் அதனை ஏற்க முடியாது. எங்கள் நாடு பாரம்பரிய மதம் சார்ந்தது. அதில் இன்னொரு மதம் புகுந்து கொள்வதை சகிக்க முடியாது என்கிறார்கள். ஒரே மதத்தில் பல பிரிவுகள் இருந்தால் அவற்றுக்கிடையில் பெரும் சர்ச்சைகளும், சண்டைகளும் ஏற்படுகின்றன.

மனித உரிமைகள் பற்றி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கருத்து இருக்கிறது. தன் கருத்து மற்றவர்கள் கருத்துகளைவிட மேலானது, மக்கள் சுபிட்சம் சார்ந்தது என்று கருது

கிறது. மனித உரிமைகள் என்று சொல்லப்படுபவை ஐரோப்பிய நாடுகளின் தனிப்பட்ட மனிதன் சார்ந்தது. ஒரு மனிதனின் செயற்பாடுகள் சார்ந்தது.

ஒருவன் அராஜகவாதி. தன் விருப்பம் போல செயற்பட உரிமைகள் உண்டென சொல்கிறான். அப்போதுதான் பொதுச் சட்டத்தை மீறுவது வருகிறது.

சமூகத்திற்குத் தீங்கான - இயற்கைக்கு மாறாக ஒரு பாலுறவு எங்கள் உரிமையென பெண்கள் - ஆண்கள் கூட்டம் கூடிக்கொண்டு கோஷம் போடுகிறார்கள். திருமணம் செய்து கொள்வோம் என்று சட்டப் பாதுகாப்பு கேட்கிறார்கள். அது எங்கள் தனிப்பட்ட சுதந்திரமான வாழ்க்கை என்று சொல்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். சினிமா படம் எடுத்து இளைஞர்களைக் கெடுக்கிறார்கள்.

எவையெல்லாம் சமூகத்திற்குத் தீமையானதென்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அவற்றையெல்லாம் பொதுவில் வைத்து மனித உரிமைகள் என்கிறார்கள். தனி மனித உரிமைகள் முக்கியம்தான். ஆனால், அது வரையறைக்குள் கட்டுப்பட்டது.

சமூக நலன், நாகரிக கலாசாரம் என்பவை பல நூற்றாண்டுகளில் பொது பண்பின் செயற்பாட்டில் கட்டமைக்கப்பட்டன. அவற்றுக்கு மாறானதை எல்லாம் மனித உரிமைகளுக்குள் கொண்டுவர முடியாது என்கிறார்கள்.

மனிதர்களை ஞானிகள் என்றும், பேரறிவும் பெருந்தன்மையுங் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தாலும், கொடுமைகள் செய்வதில் அவர்களே முதல் ஜீவராசியாக இருக்கிறார்கள். உலகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளைவிட, விலங்குகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைவிட மனிதர்கள் சக மனிதர்களுக்குப் புரிந்த கொடுமைகள் அதிகம்.

மனிதர்களுக்குப் புலியைப்போல வேகமாக ஓடும் திறனோ, நாயைப் போன்று மோப்ப சக்தியோ, யானையைப்போல பலமோ, கழுகுபோல பறக்கும் ஆற்றலோ இல்லை. ஆனாலும் அவன் அறிவு என்னும் மகத்தான ஆற்றல் பெற்றிருக்கிறான். அற்புதமான நினைவாற்றல் பெற்றிருக்கிறான். பேசவும், எழுதவும் கற்றிருக்கிறான். விலங்குகள், பறவைகளுக்கு இல்லாத ஆற்றலால் உலகத்தை வதம் செய்திருக்கிறான்.

மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தாலும், பல அம்சங்களில் ஒரே மாதிரி செயல்பட்டாலும் - சில அம்சங்களில் நுட்பமாக மாறுபடுகிறார்கள். அதில் மனித உரிமைகள் என்பதும் அடங்குகிறது.

ஆனால், ஆசிய நாடுகள் சமூகம் சார்ந்து பேசுகின்றன. சமூகத்தின் நலன் என்பதில் மனித உரிமைகள் வந்துவிடுகின்றன. சமூக நலன், மனித உரிமைகள் என்பது ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. பிரிக்க வேண்டியது இல்லை என்கின்றன.

சிங்கப்பூரின் முதல் பிரதமராக இருந்த லீ குவான் யூ ஒருமுறை மனித உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டார். "ஐரோப்பிய நாடுகள் தனிமனித உரிமைகளை மனித உரிமைகள் என்று முன் வைக்கின்றன.

ஆனால், ஓர் ஆசிய சீனன் என்ற வகையில் நேர்மையான ஆட்சி, வெளிப்படையான, தூய்மையான நிர்வாகம் என்பதையே மனித உரிமைகளைப் பாதுகாக்கும் என்பது எனது கருத்து என்று கூறினார்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.