பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பூரண மதுவிலக்கை நோக்கி...

நாடு இன்று இருக்கும் நிலையில், நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய காந்தியக் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:31 am

திருப்​பூர் கிருஷ்​ணன்

நாடு இன்று இருக்கும் நிலையில், நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய காந்தியக் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று மதுவிலக்கு. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்றது மட்டும் போதாது. மதுவிலிருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும்.

திருப்பூர் குமரன், மதுவுக்கு எதிராகப் போராடினான் என்பதையும் அவன் தலையிலேயே மதுப் பானைகளைப் போட்டு உடைத்தார்கள் என்பதையும் வரலாற்றில் பார்க்கிறோம். அப்படி உடைக்கப்பட்ட பானையின் கழுத்துப் பகுதியைத் தன் கழுத்தில் மாலைபோல் அணிந்து திருப்பூர் வீதிகளில் பெருமிதத்தோடு அவன் வலம் வந்தான் என்கிறது சரித்திரம்.

ராஜாஜி, மதுவிலக்கு என்ற ஒரே உள்ளடக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு "விமோசனம்' என்ற ஒரு பத்திரிகையை மதுவுக்கு எதிராக நடத்தியிருக்கிறார். கொட்டும் மழையில் கையில் குடையோடு அவர் யாரைப் போய்ச் சந்தித்து என்ன வேண்டுகோள் வைத்தார் என்பதை நாடறியும்.

நாம் எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால் நாடு முழுவதும் மதுவிலக்கு என்ற உன்னத லட்சியத்தை நோக்கி நாம் நடக்க வேண்டியது அவசியம்.

மதுவால் அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் வருமானம் வருகிறது என்றும், மது விற்பனை இல்லாவிட்டால் அரசாங்கத்தையே நடத்த இயலாமல் போய்விடும் என்றும் மது ஆதரவாளர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள்.

அப்படியானால், மது வருவாய் இல்லாமல் அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்பது பற்றிப் பொருளாதார வல்லுநர்களுடன் கலந்து பேசி ஆராய வேண்டும். பிற துறைகளில் அரசின் வருவாயை எப்படிப் பெருக்குவது எனத் திட்டமிட வேண்டும். குஜராத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு சாத்தியமாயிற்று என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வருமானால், காவல் துறைக்கு அரசாங்கம் செய்யும் செலவு கணிசமாகக் குறையும். மதுவை ஒழித்தால் பாலியல் வன்முறை, திருட்டு என்ற இரண்டு தீமைகளும் பெருமளவில் குறைந்து போகும். 

மதுவை ஒழிப்பதென்பது கள்ளச் சாராயத்தை ஊக்குவிப்பதாகும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்தினால் தமிழகமெங்கும் கள்ளச் சாராயம் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். காவல்துறையின் சரியான கண்காணிப்பு இருந்தால் கள்ளச் சாராயம் ஏன் வருகிறது? நம் காவல் துறையினர் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

கள்ளச் சாராயத்தை ஒடுக்குவதற்கு எல்லா முனைகளிலிருந்தும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமானால், அதைத் தடுப்பது அத்தனை சிரமமானதா என்ன? திருட்டை ஒழிக்க முடியவில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் திருடலாம் என்று சட்டம் போட்டு விடுவது போலிருக்கிறது கள்ளச் சாராயம் வரும் என்பதால் மதுவிலக்கு சாத்தியமில்லை என்கிற வாதம்.

காந்தியவாதி பொள்ளாச்சி நா. மகாலிங்கம், மது விற்பனைத் தொடர்பாக ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார். மதுவைக் கடைகளில் வாங்கலாமே அன்றி, அதே கடைகளிலோ, கடைகளை ஒட்டிய இடங்களிலோ மது அருந்த அனுமதிக்கக் கூடாது என்கிறார் அவர். பூரண மதுவிலக்கு என்ற லட்சியத்தை அடைவதற்கு முன் நாம் நடந்துசெல்லக் கூடிய ஒரு நடைமுறை சாத்தியமான பாதை இது.

இப்படியொரு சட்டம் வகுத்தால், மது விற்பனை மளமளவென்று குறையத் தொடங்கும். தன் கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதையே சகித்துக் கொள்ள இயலாத மனைவி எப்படித் தன் வீட்டிலேயே அவனை மது அருந்த அனுமதிப்பாள்?

ஆனால், பண்டிகை தினங்களில் பல லட்சம் ரூபாய் மது விற்பனையாயிற்று என்று மகிழ்ச்சியுடன் மது விற்ற பணத்தை எண்ணிப் பார்ப்பவர்கள்,, இதுபோன்ற விஷயங்களை எண்ணிப் பார்ப்பார்களா?

மதுக் கடைகளின் அருகே மது வாங்குவதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதைப் பேருந்துகளில் செல்லும்போது நாம் பார்க்கிறோம். முன்பெல்லாம் மது அருந்தினாலும், தான் குடிகாரன் என்பது அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தார்கள். அதனால், முக்காடு போட்டுக் கொண்டு மதுக்கடைகளுக்கு இரவு நேரங்களில் ரகசியமாகக் கூச்சத்தோடு சென்றார்கள்.

இப்போது அப்படிப்பட்ட கூச்ச உணர்வு எவரிடமும் இல்லை. எவன்தான் மது அருந்துவதில்லை? இதை நாம் மறைவாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமென்ன என்கிற அலட்சியம் தோன்றிவிட்டது.

இத்தகைய போக்கு அபாயகரமானது. எந்தத் தவறையும் பகிரங்கமாகச் செய்யும் மனப்பான்மை தோன்றிவிட்டால், பின் தவறிழைக்கும் மனிதர்கள் திருந்த வழியே இல்லை.

"ஐயப்ப பக்தர்களுக்குத் தனி டம்ளர் வசதி உண்டு' என ஒரு மதுக் கடையில் விளம்பரப் பலகை வைத்திருந்ததாக ஒரு செய்தி வந்தது. நம் ஆன்மிகத்தின் லட்சணம் இப்படியாகி விட்டது.

சமயமும் பக்தியும் தனி மனித ஒழுக்கத்தையும் சமுதாய ஒழுக்கத்தையும் வலிமைப் படுத்துவதற்கான சக்திகள் என்ற கருத்தோட்டம் இன்று மாறத் தொடங்கிவிட்டது. சமயம் வெறும் கேளிக்கையாகவும் வெற்றுப் பொழுதுபோக்காகவும் உருமாறி வருகிறது.

இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளிப் பிள்ளைகள்கூட டாஸ்மாக் கடைகளில் நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது ஆங்காங்கே தென்படும் இத்தகைய காட்சி விரைவில் பரவலாகி விடும் என்பதை எண்ணினால் மனம் பகீர் என்கிறது. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்?

காந்தியத்தின் சின்னமான கதர்ச் சட்டையை அணிந்துகொண்டு சில நேரங்களில் சிலர் டாஸ்மாக் கடைகளில் தென்படுகிறார்களே, அது கொடுமையிலும் கொடுமை.

திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு கண்டிப்பாகத் தடை விதிக்க வேண்டும்.

தற்போது பூரண மதுவிலக்கிற்கு ஆதரவாக ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும்தான் உரக்கக் குரல்கொடுத்து வருகிறார்கள். மற்ற பெரும்பாலானத் தலைவர்களின் குரல்களில் அத்தகைய வலிமை இல்லை.

ஆனால், அந்தத் தலைவர்கள் யாரும் மதுவுக்கு ஆதரவாகவும் இல்லை. பூரண மதுவிலக்கு நடைமுறை சாத்தியமில்லை என்றுதான் கூறி வருகிறார்கள்.

இப்போது நம்முன் உள்ள பிரச்னை பூரண மதுவிலக்கை எப்படி நடைமுறை சாத்தியமாக்குவது என்பதுதான். அதுகுறித்து எல்லாக் கட்சியினரும் கூடி ஆராய வேண்டும். நாட்டு மக்களின் நலன் என்ற ஒரு சிறந்த லட்சியத்தின் பொருட்டாக மதுவிலக்குக் கொள்கையை அனைத்துக் கட்சிகளும் ஏற்பது அனைத்துக் கட்சிகளுக்கும் பெருமையையே தரும்.

திருட்டுக்கு ஆதரவாகவோ பாலியல் வன்முறைக்கு ஆதரவாகவோ யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை. எனவே, மதுவுக்கு ஆதரவாகவும் யாரும் குரல் கொடுக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க மதுவிலக்கிற்கு ஆதரவாக எல்லாக் கட்சிகளும் ஒன்று கூடிக் குரல்கொடுத்தால் என்ன?

சில பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் மதுவிலக்கைத் தங்களால் இயன்ற அளவு ஊக்குவித்து வருகிறார்கள். சென்னை மேயர், ஓராண்டு மது அருந்தாமல் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டறிந்து பரிசுகள் வழங்குகிறார். இத்தகைய செயல்களை இன்னும் பலரும் மேற்கொள்ளலாம்.

மகாத்மா உள்ளிட்ட சுதந்திரத் தியாகிகள் அனைவரும் மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களே. நாம் கனவு காணும் லட்சிய சுதந்திர இந்தியா உருவாகத் தடையாக இருப்பது இந்த மது என்னும் கொடூரமான அரக்கன்தான்.

நரகாசுரனை அழித்ததை தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். மது என்கிற அசுரனை வதம் செய்தால்தான் நாம் நம் சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் விமரிசையாகக் கொண்டாட உரிமை பெற்றவர்கள் ஆவோம். 

அரசு மதுவிலக்கை அமல்படுத்துவது இருக்கட்டும். மது விற்பனை நடைபெறாததால்தான் மதுக் கடைகள் மூடப்பட்டன என்ற நிலை ஏற்படுமாறு "குடி'மகன்கள் ஏன் நடந்துகொள்ளக் கூடாது?

அரசின் மது விற்பனையைத் தடைசெய்வது நம் கையில் இல்லை. ஆனால், நாம் மதுக் கடைப் பக்கம் போகாமல் இருப்பது என்பது நூறு சதவீதம் நம் கையில் தானே இருக்கிறது?

கட்டுரையாளர்: ஆசிரியர், "அமுதசுரபி' மாத இதழ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.