மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா உறுதிஅந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாத்திக ஆத்திக நல்லிணக்கம்

கடவுளைப் பற்றிய கோட்பாடுகளில் மூன்று வகையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று கடவுள் இருப்பதை ஏற்கும் ஆத்திகம். இன்னொன்று அவர் இல்லை எனச் சொல்லும் நாத்திகம். மூன்றாவது கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் எனக்கில்லை என்று சொல்லும் கருத்தற்ற நிலை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:02 am

திருப்​பூர் கிருஷ்​ணன்

கடவுளைப் பற்றிய கோட்பாடுகளில் மூன்று வகையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று கடவுள் இருப்பதை ஏற்கும் ஆத்திகம். இன்னொன்று அவர் இல்லை எனச் சொல்லும் நாத்திகம். மூன்றாவது கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் எனக்கில்லை என்று சொல்லும் கருத்தற்ற நிலை.

கடவுள் இல்லை என்பவரை நாத்திகர் என்று சொல்ல வேண்டுமே அன்றிப் பகுத்தறிவாளர் என்பது சரியல்ல. பகுத்துப் பகுத்து ஒருவன் ஆராயும்போது கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ எந்த முடிவுக்கும் வரக்கூடும்.

ஆத்திகம் நாத்திகம் என்கிற இரு கோட்பாடுகளும் பன்னெடுங் காலமாகவே நம்மிடையே இருக்கின்றன. நாத்திகம் ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது.

ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நாத்திகனாகவோ ஆத்திகனாகவோதான் இருப்பான் என்று சொல்ல இயலாது. இந்தக் கருத்து நிலைகளில் அவன் மாற்றமடைவதும் உண்டு.

கவிஞர் கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகரானவர். தாம் ஒரு காலத்தில் நாத்திகராக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன என்று பின்னாளில் கேட்டவர்.

பாரதிதாசன் தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து பிறகு நாத்திகரானவர் (பாரதி சொல்லி, பாரதிதாசன் பாடிய "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாடல் உயர்தரமான சக்தி வணக்கப் பாடல்).

தனது நாத்திக நிலைக்காக "அக்கிரகாரத்து அதிசயப் பிறவி' என்று கொண்டாடப் பட்டவர் வ.ரா. என்கிற வ. ராமசாமி. ஆனால் அவர் தம் இறுதிக் காலத்தில் முருகன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்ததாக கு. அழகிரிசாமி ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு தனிமனிதனே தன் வாழ்நாளில் இருவேறு நிலைப்பாடுகளை எடுக்கும்போது, ஒரு சமுதாயத்தில் எல்லாக் காலத்திலும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் கலந்தே இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உயர்தர ஆத்திகர்களிடையே போலிச் சாமியார்கள் கலந்திருப்பது மாதிரி, உயர்தர நாத்திகர்களிடையே வெறும் நாத்திக வியாபாரிகளும் கலந்தே இருப்பார்கள். நாத்திகக் கொள்கையை வைத்துக் கொண்டு ஆத்திகர்களின் மனத்தைப் புண்படுத்தி நாத்திக வணிகம் செய்பவர்களைக் கண்டறிந்து ஒதுக்க வேண்டியது மொத்த சமுதாயத்தின் பொறுப்பு. ஆத்திகர்களின் மனத்தைப் புண்படுத்தாமல் நாத்திகத்தை ஒரு கோட்பாடாகக் கொண்டு பிரசாரம் செய்பவர்களை சமுதாயம் ஒதுக்க வேண்டியதில்லை. நாத்திகக் கோட்பாட்டுக்கும் சமுதாயத்தில் இடமிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது.

மறைந்த எழுத்தாளர் சின்னக்குத்தூசி ஒரு நாத்திகர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த உயர்நிலை நாத்திகர். அவரது இயல்பால் கவரப்பட்ட எழுத்தாளர் நா. பார்த்தசாரதி, தமது "துளசிமாடம்' நாவலில் சின்னக்குத்தூசியின் சாயல் கொண்ட ஒரு நாத்திகப் பாத்திரத்தை "இறைமுடி மணி' என்ற பெயரில் உலவவிட்டிருக்கிறார்.

மாபெரும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் கடவுள் சக்தியை நம்பும் ஆத்திகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்.

மத நல்லிணக்கம் தேவை என்பதை இப்போது எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத்தவரிடையே இணக்கமான போக்கு நிலவ வேண்டுமானால் ஒருவரின் மதக் கோட்பாடுகளை மற்றவர் விமர்சிக்காமல் இருப்பதே நல்லது. அது அவரவர் மத நெறி என்றுணர்ந்து இணக்கமாக வாழ்ந்தால் இந்தியா தழைக்கும்.

மத நல்லிணக்கம் போலவே ஆத்திக, நாத்திக நல்லிணக்கமும் இன்று அவசியத் தேவை. ஒருவரையொருவர் மனம் புண்படும்படிப் பேசுவதோ எழுதுவதோ சரியல்ல. இது சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைக்கும்.

"கடவுளை நம்புகிறவன் முட்டாள்', "கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி' என்றெல்லாம் எழுதப்படும்போதும் பேசப்படும்போதும் கல்வெட்டில் பொறிக்கப்படும்போதும் ஆத்திகன் திகைக்கிறான். "நான் கடவுளை நம்பவில்லை என்று எழுதலாம். ஆனால் கடவுளை நம்புகிறவனை முட்டாள் என்றும் காட்டுமிராண்டி என்றும் சொல்வது எப்படி நாகரிகமாகும்? கடவுளை நம்பிய விவேகானந்தரும் வள்ளலாரும் முட்டாள்களா? காட்டுமிராண்டிகளா?' இதற்கு பதிலாக, "கடவுளை நம்பாதவன் முட்டாள்; நம்பாதவன் காட்டுமிராண்டி' என்று எழுதினால் சமுதாயத்தில் சிக்கல்தான் எழும்.

கல் வன்முறையை விட மோசமானது சொல் வன்முறை. சொல் வன்முறையை இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம். நாத்திக ஆத்திக நல்லிணக்கம் தேவை என்பதை இருதரப்பினரும் உணர்ந்து செயல்பட்டால் நாடு தழைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.