நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீதியே வீடு; வானமே கூரை!

இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கடந்தும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற அடிப்படை வசதிகள் பல ஏழைகளுக்கு இன்னும் எட்டாக் கனவாக இருப்பது வேதனை அளிக்கிறது. நடைபாதையே வீடாக

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:40 pm

ஆர். நட​ராஜ்

இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கடந்தும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற அடிப்படை வசதிகள் பல ஏழைகளுக்கு இன்னும் எட்டாக் கனவாக இருப்பது வேதனை அளிக்கிறது. நடைபாதையே வீடாக ஒண்டிக்கொண்டு வெயிலிலும் குளிரிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் எவ்வளவோ ஏழைகள் வாடுகிறார்கள்.

  போக்கிடயில்லாமல், இருக்க இடமின்றி வீடில்லாத ஏழைகளின் எண்ணிக்கை தோராயமாகத்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கணிக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களை விட நகரங்களில் வீடில்லாதவர்களின் பிரச்னை இன்னும் அதிகம்.

  உணவு, வீடு, சுகாதாரம், கல்வி, காவலில் பாதுகாப்பு  இவை அடிப்படை உரிமைகள் என தேசிய மனித உரிமைகள்  ஆணையம் அறிவித்துள்ளது.  சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளுக்கு பிறகுதான் இவற்றை நடைமுறைப்படுத்த சாவகாசமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  வீடில்லாதவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் சுமார் எட்டு கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.  மொத்த ஜனத்தொகையில் இது சுமார் ஏழு சதவிகிதம்.  2011 மக்கள்தொகை கணக்குப்படி 78.89 மில்லியன் அதாவது 7.8 கோடி குடியிருப்புகள் உள்ளன.

  எவ்வளவு குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை என்பதும் நகரங்களில் வீடில்லாதவர்கள் எண்ணிக்கையும் தோராயமாகத்தான் ஊகிக்க முடிகிறது. 

  வீடில்லாதவர்கள் எண்ணிக்கை பெரிய, சிறிய நகரங்களில்தான் அதிகம். கிராமப்புறங்களிலிருந்து வேலை தேடி நகரங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  உடனே அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் கிடைக்கும் வருமானத்தில் வீடு கிடைப்பதில்லை. அதனால், வேலையில்லாதவர்கள், குறைந்த ஊதியத்தில் உழைப்பவர்களின் புகலிடமாக இருப்பவை நடைபாதை மற்றும் பொது இடங்கள்தான்.

 நகரம் வந்தால் எதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்கள் வருகிறார்கள்.  நகரம் வந்த பிறகுதான் நரக வேதனை என்பதை உணர்கிறார்கள்.  உடனே வேலை கிடைக்காது. கிடைத்தாலும் கிடைப்பது கைக்கும் வாய்க்கும் எட்டாது.  தங்குவதற்கு எங்கே போவது, புகலிடம் ஓடையோரமாகவோ, சாலையோரமாகவோ பொது இடமோதான். மூடப்பட்ட கடைகளுக்கு முன்னால், சாக்கடைப் பகுதிகள், ஓடைகளின் கரைப்பகுதிகள் பாலங்களுக்கு அடியில் என பலர் முடங்கிக்கிடப்பதைப் பார்க்கலாம்.

  குடும்பத் தகராறு, புகுந்த வீட்டில் சித்திரவதை, பாலியல் கொடுமை போன்ற காரணங்களுக்காக பெண்கள் தப்பித்து நகருக்கு வருகிறார்கள்.  பலர் குழந்தைகளோடு வருகிறார்கள்.  இம்மாதிரிப் பெண்களை போக்குவரத்து சந்திப்பில் பிச்சையெடுப்பதையும், சில்லரைப் பொருட்களை விற்பதையும் பார்க்கலாம்.  குழந்தைகளுடைய நிலை இன்னும் மோசமானது. அவர்களுக்கு சரியான உணவு, வளரும் வயதுக்கு தேவையான. ஊட்டச்சத்து கிடையாது.  படிக்க, விளையாட வசதி இருக்காது.  மொத்தத்தில் பிள்ளைப் பிராயம் பாழாகும் அவல நிலை.

  வீடில்லாதவர்கள், பேட்டை தாதாக்களின் சட்ட விரோத வலையில் சிக்குவார்கள்.  போதைப் பொருட்கள் விற்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், பிச்சை எடுத்தல்,  பட்டாசு தயாரித்தல், இரும்புப் பட்டறைப் போன்ற அபாயகரமான தொழில்களில் பாதுகாப்பின்றி குறைந்த ஊதியத்தில் பிணைத் தொழிலாளர்களாக சிக்குதல் போன்ற பாதிப்புகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

  கட்டிடத் தொழிளார்கள், எடு பிடி வேலை செய்பவர்கள், வீட்டு வேலைக்கு வருபவர்கள், தெரு ஓரங்களில் சில்லரைப் பொருட்கள் விற்பவர்கள் இவ்வாறு பிழைப்புக்காக நகர்புறம் வரும் ஏழைகள், பல வகையில் நகர் வாழ் மக்களுக்கு சேவை புரிகிறார்கள். இதுபோன்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் பங்களிப்புதான் நகர் நிர்மாணத்திலும், நகர்ப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் மிகப்பெரிய பங்களிப்பை நல்குகின்றன.

  தங்க வீடின்றித் தவிக்கும் நகர்புற ஏழைகளுக்கு மாற்று வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற பொது நல  வழக்கு பியூசில் என்ற தன்னார்வு அமைப்பு உச்ச நீதி மற்றத்தில் 2001-ம்  வருடம் தாக்கல் செய்தது. அதை விசாரிப்பதற்கு சார்பற்ற ஆணையாளர்கள் குழு ஒன்றை அமைத்து நீதிமன்றம் ஆணையிட்டது.  ஆணையாளர்கள் குழு விசாரித்து அறிக்கையும்  சமர்பித்தது.

 அதில் முக்கியமாக எல்லா நகரங்களிலும் போக்கிடமில்லாமல் நகர்புற ஏழைகள் தற்காலிகமாக தங்குவதற்கு சத்திரங்கள் கட்ட வேண்டும் என்றும், தண்ணீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற பல பரிந்துரைகளை ஏற்று அவை குறிப்பிட்ட காலவரைக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

  இத்தகைய தற்காலிக தங்குமிடங்களில் இரவு நேரங்களில் குளிரிலிருந்து  பாதுகாத்துக் கொள்ள போர்வை, மருத்துவ வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  வீடில்லாதவர்களுக்கு முக்கியப் பிரச்னை பாதுகாப்பு. அவர்கள் வைத்திருக்கும் சிறு பொருட்களும் தொலைந்து விடும் அல்லது களவாடப்படும். வெளியில் படுக்கும் போது ஒரு போர்வைதான் உடமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு.

 கொசுத் தொல்லையும் ஒரு பிரச்சனை.  வேகமாகப் போகும் வாகனங்களிலிருந்து வரும் உஷ்ணம் கொசுக்களை விரட்டும். அதனால்தான் இவர்கள் சாலையின் ஓரங்களில் படுக்கிறார்கள்.  சில சமயம் குடித்து விட்டு வாகனம் ஒட்டும் வசதி படைத்தவர்களின் அராஜகத்திற்கு இரையாகிறார்கள்.

  ஓட்டுனர் உரிமம் இல்லாது பணக்காரக் வீட்டுக் குழுந்தைகளின் அத்து மீறிய வாகனம் ஓட்டுதலில் பலியாகும் நடைபாதை ஏழைகளின் அவல நிலை தொடர்கிறது.  காவல்துறையும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக போக்கிடமில்லாதவர்களை விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் உண்டு.   அதற்கும் இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

  உச்சநீதிமன்றம் மாநிலங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியதின் அடிப்படையில் 2010-ம் வருடம் பதில் மனுக்கள் ஆராயப்பட்டன. இரவு விடுதிகள் நாட்டின் முக்கியமான 62 நகரங்களில் கட்டுவது மற்றும் வீடில்லா ஏழைகள் தற்காலிகமாக இலவசமாக தங்க ஏற்பாடு செய்வது அந்தந்த மாநிலங்களின் உள்ளாட்சித்துறையின் பொறுப்பு.

  ஆந்திர மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இத்தகைய தற்காலிக விடுதிகள் முதல் கட்டமாக செயல்பட்டு வருகின்றன.  எல்லா மாநிலங்களும் ஒவ்வொரு கட்டமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கட்டுவதாக அறிவித்துள்ளன.

  நிபுணர் குழு 5 லட்சம் மேல் மக்கள் வாழும் நகரங்களில் குறைந்த பட்சம் ஒரு லட்சம்  ஜனத் தொகைக்கு ஒரு இரவுத் தங்கும் விடுதி செயல்பட வேண்டும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் நகரங்களில் இத்தகைய தங்கும் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.  இந்த திறந்த விடுதிகளில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் புகலிடம் இல்லாதவர்கள் தங்கலாம். 

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர் நகரங்களுக்கு இரக்கமில்லா சுற்றங்களால் தள்ளப்படுகிறார்கள்.  வீடில்லாதவர்களில் இருபத்தைந்து சதவிகிதம் ஏதாவது ஒரு விதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள். இவர்களுக்கு உதவ பானியன் போன்ற தன்னார்வு நிறுவனங்கள் அரசு துறைகளோடு இணைந்து பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

  இரவு தங்கும் விடுதிகள் அமைக்க நகர்புர மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.  பலர் தமது குடியிருப்புப் பகுதிகள் அருகில் இத்தகைய திறந்த தங்கும் விடுதிகள் அமைப்பதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.  சென்னை மாநகராட்சி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகள் தங்குவதற்கு தினந்தோறும் ஏற்பாடு செய்து வருகிறது.

 அம்மா உணவு விடுதிகள் இதுபோன்ற தெருவோரம் வாழும் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  சென்னையில் மட்டும் 200 உணவு விடுதிகள் செயல்படுகின்றன.  சுமார் 1.5 மக்கள் தினமும் பயன் பெறுகிறார்கள்.  மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கும் இத்தகைய உணவு விடுதிகள் செயல்பட துவங்கியுள்ளன.  மற்ற மாநிலங்களுக்கு இது முன் உதாரணமாக உள்ளது என்று சமுதய நலம் காப்போர் மற்றும் நிபுணர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது தமிழகத்துக்குப் பெருமை.

  தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமாக நகரங்கள் உருவாகுகின்றன.  ஜனத் தொகையில் 51.5 சதவிகிதம் கிராமப்புறங்களிலும் மற்றவர் நகர்புறங்களிலும் வாழ்கிறார்கள். அதனால் தான் அரசின் பசுமை வீடுகள் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

  இத்திட்டத்தின்படி  வருடத்திற்கு அறுபதாயிரம் வீடுகள் என்று அடுத்த ஐந்து வருடங்களுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.  முந்நூறு சதுரஅடி கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்றை லட்சம் ரூபாய் கட்டுமானத்திற்கும் ரூபாய் முப்பதாயிரம் சூரிய ஒளி மூலம் இயங்கும் விளக்குகளுக்கும் செலவாகிறது.

  இதன் மூலம் வீடில்லாப் பிரச்சனை வெகு அளவுக்கு குறையும். மின் சக்தி பெருகும்.  நகரங்களில் மக்களின் நெரிசலும் குறையும்.

 இது அரசின் பிரச்னையல்ல. சமுதாயத்தின் பிரச்னை என்பதை நாம் உணர்ந்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். தெருவோரம் வசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் தொடர்விளைவாக சிறு குற்றங்கள் அதிகரிப்பதும், சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பதும் தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ""எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்'' என்ற உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.