எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும், எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?