காவலரின்றி அமையாது அமைதி
எந்த சமுதாயம் வீரர்களை மதிக்கத் தவறுகிறதோ அதற்கு வீரர்களும் தேவையில்லை பாதுகாப்பும் உறுதியில்லை. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் காவல் துறையினர் அதிகமாக பணியில் உயிரிழக்கின்றனர்.


எந்த சமுதாயம் வீரர்களை மதிக்கத் தவறுகிறதோ அதற்கு வீரர்களும் தேவையில்லை பாதுகாப்பும் உறுதியில்லை. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் காவல் துறையினர் அதிகமாக பணியில் உயிரிழக்கின்றனர். சீன எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர், லடாக் மாவட்டத்தில் திரிசூலம் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த 11 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இது நடந்தது அக்டோபர் 21, 1959. லடாக் மாவட்ட தலை நகரமான லேவிலிருந்து, ஃபோப்ராங், சோக்ஸாலு, மார்ஸ்மிக்லா கணவாய் கடந்த பின் வருவது ஹாட்ஸ்பிங்க்ஸ் என்ற இடம். அங்குதான் மேற்படி உயிரிழந்த காவலர்களுக்கு நினைவிடம் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், பணியில் உயிர் நீத்த காவல்துறையினரை நினைவு கூரும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. மார்ஸ்மிக்லா கணவாய் 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதைத் தாண்டிதான் திரிசூலம். அங்கு வருடம் பூராவும் கடுங்குளிர். இப்போதும் அந்த எல்லைப்பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை காவலில் இருக்கிறது.
மிஸ்ரா என்ற அதிகாரி மத்திய பாதுகாப்புப் படையை சேர்ந்தவர். துணை காவல் கண்காணிப்பளராக முக்கிய செயலாக்க அணியின் தலைவர். அவர் தலைமையில் அதிரடிப்படை பயங்கர தீவிரவாதிகளோடு நாட்டின் பல இடங்களில் சண்டையிட்டு வெற்றி கண்டுள்ளது. அவருக்கு இது வரை ஆறு வீர தீர பதக்கங்கள் வழக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் அசோக செüரியா பதக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக பதக்கங்கள் பெற்று பணிபுரியும் அதிகாரி இவர். தன்னை உருவாக்கிய மத்திய ரிசர்வ் படைக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது மிஸ்ரா கூடுதல் கண்காணிப்பளராக ஜார்கண்ட் மாநில போலிஸில் நக்ஸலைட்டுகளை ஒடுக்கும் வேட்டையில் பணிபுரிகிறார். அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 2009ஆம் வருடம் பிரான்சிஸ் இந்துவாஸ் என்ற நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளர் நக்ஸலைட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மூன்று நக்ஸலைட் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ஒரு வாரத்திற்குள் உடல் வேறு தலை வேறாக வெட்டி சாய்த்தனர். நக்ஸலைட் தாக்குதலில் 2002-இல் இருந்து, 10 வருடங்களில 2421 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் பணியில் உயிரிழந்தால் அதைப்பற்றி சமுதாயத்தில் அதிக அளவிற்கு உணர்ச்சி ஏற்படுவதில்லை. அடிபடுவதோ உயிரிழப்பதோ பணி சம்பந்தப்பட்ட இடர்ப்பாடு என்று எண்ணுகிறார்கள். ஆந்திர மாநில தெலங்கானா பிரச்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டத்தினர் பெண்கள் உட்பட காவல் துறையிரைத்தான் தாக்குகிறார்கள். இம்மாதிரி அரசியல் நோக்கத்தோடு எடுக்கப்படும் முடிவுகளால் வீதிக்கு வரும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையினுடையது.
வீரப்பன் வேட்டை அக்டோபர் 18 2004இல் முடிவிற்கு வந்தது. 1982-லிருந்து கர்நாடகா, தமிழ்நாடு வனப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய கொள்ளை கும்பலை தெளிவான அணுகுமுறை, வழிகாட்டுதல் மூலம் பிடிக்க முடிந்தது. எக்காரணம் கொண்டும் கொள்ளைக் கும்பலோடு பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்ற உறுதியான வழிகாட்டுதல் இருந்ததால் வெற்றி சாத்தியமானது. சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்ஸலைட் ஆதிக்கம் அதிகமாவதற்கு வெளியிலிருந்து வரும் இடையூறுகள்தான் முக்கியக் காரணம். செயலாக்கத் திட்டங்கள் முழுமையாக செயல்பட விடுவதில்லை. அதனால்தான் காவல்துறையினரின் உயிரிழப்பை தடுக்க முடிவதில்லை.
தீவிரவாதிகள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் தோற்கலாம், ஆனால் காவல்துறையினர் ஒருமுறை தோற்றாலும் பின்னடைவை சமன் செய்வது மிக மிக கடினம். படைவீரர்களின் செயலாண்மை குலைகிறது. மீண்டும் அவர்களுக்கு புத்துயிர் கொடுத்து முழுமையாக ஈடுபட செய்ய காலம் விரயமாகிறது.
மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக துவக்கிய போது, வட இந்தியா ஒருங்கிணைந்த மாகாணம் சாரி செüரா என்ற இடத்தில் காவல் நிலையம் சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டது. அதில் 22 போலீஸார் மாண்டனர். காந்தி உடனே தனது சத்தியாகிரக இயக்கத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டார். அஹிம்சை வழியில் விடுதலை இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும், வன்முறையில் சுதந்திரம் விளையாது நிலைக்காது என்ற உயர்ந்த கொள்கையை தனது செயலாக்கத்திற்கு அடிப்படையாக வைத்தார் காந்தி. காந்தி வழியிலிருந்து நாம் நெடுக பிழன்று விட்டோம்.
வீரப்பன் வேட்டையில் பங்குகொண்ட உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ஆழ்வார்குறிச்சி அருகில் 2010ஆம் வருடம் ஜனவரி பட்டப்பகலில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவ்வழி சென்ற அரசு வாகனங்களில் இருந்த முக்கிய நபர்கள் உதவவில்லை. தவித்த வாய்க்கு தண்ணீரின்றி உயிரிழந்தார்.
ஒவ்வொரு வருடமும் சராசரியாக சுமார் 1000 காவல்துறையினர் உயிரிழக்கின்றனர். 2012-இல் காயமுற்றவர்கள் எண்ணிக்கை 3375. கார்கில் யுத்தத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 527, காயமுற்றவர்கள் 1363. ராணுத்தைவிட உள்நாட்டுப் பாதுகாப்பில் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
ஆந்திர மாநிலம் புத்தூரில் தீவிரவாதிகளோடு போராடிய ஆய்வாளர் லட்சுமணன் தன் உயிரைப் பணயமாக வைத்து எதிரிகளை உயிரோடு பிடித்தது மிக சாதுர்யமான செயல். எதிரிகளோடு போராடியதில் அவருக்கு உடல் பூராவும் வெட்டுக்காயம். தற்காப்புக்காக துப்பாக்கியால் எதிரிகளை அவர் சுட்டிருக்கலாம். அதில் எதிரிகள் உயிரிழந்திருந்தால் யாரும் அவரை குறை சொல்ல முடியாது. துப்பாக்கி சூடு நடத்தியது முழுமையாக சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆயினும் அவர் அவ்வாறு செய்யவில்லை. கமாண்டோ படைக்கு தலைமை ஏற்று சென்ற அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை உயிரோடு பிடித்துள்ளனர். நெரிசலான குடியிருப்புகள் நிறைந்த பகுதி அது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு குற்றவாளியின் மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகள் சிறு காயமும் இன்றி மீட்கப்பட்டு அந்த பெண்ணைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது மனித நேயச் செயல். எல்லாவிதத்திலும் சிறப்பாக செயல்பட்டதால்தான் எல்லாருக்கும் அதிக அளவில் வெகுமதியும் பாராட்டுகளும் கிடைத்தன.
அத்துமீறலின்றி நியாயமாகவும் நேர்மையாகவும் காவல்துறை நடந்து கொண்டால் மக்கள் அவர்கள் பக்கம் இருப்பார்கள். உண்மையான தகவல்களும் உரிய நேரத்தில் கிடைக்கும். தகவல் சேகரிப்பு இரண்டு வகைப்பட்டது. ஒற்றர் படை மூலமும், பணத்துக்காகவும் வேறு சில சலுகைக்களுக்காவும் தகவல்கள் கொடுப்பவர்கள், காழ்ப்புணர்ச்சிக்காக தன் எதிரிகளை காட்டிக் கொடுப்பதற்காக தகவல் கொடுப்பவர்கள் மூலமும் பெறப்படும் தகவல்கள் ஒருவகை. சமுதாய நிகழ்வுகள், பல் வகைப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள், அதன் தலைவர்களின் அறிக்கை, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் இவற்றை அலசி ஆராய்ந்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கணிப்பது இரண்டாவது வகை. இரண்டாவது முறையில் நவீன தொழில் நுட்பம் பொருந்திய கருவிகள் மூலம் கிடைக்கும் தகவல்களும் பொருந்தும். ஆனால் எவ்வளவுதான் நவீன கருவிகள் இருந்தாலும் நேருக்கு நேர் கிடைக்கும் தகவல்களுக்கு நம்பகத்தன்மை அதிகம்.
தகவல் கிடைத்தாலும் நடவடிக்கை எடுக்க கூடியவை எவை என்பதையும், எப்போது எவ்வாறு செயலாக்கத்தில் இறங்குவது என்பதையும் முடிவு செய்யும் முக்கியப் பொறுப்பு உயர் அதிகாரிகளுடையது. உள்துறையை நிர்வகிக்கும் அமைச்சரின் வழிகாட்டுதலும் முதன்மையானது.
நாட்டில் அமைதி காக்க காவல்துறை பல் வகைப் பணிகளிலும், நேரம் காலம் பாராது உழைப்பதால்தான் கட்டுப்பாட்டை பாதுகாக்க முடிகிறது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாவலர் என்ற பெருமை காவலருக்கு உண்டு. அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு காவலனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இரவு பகல் போல வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். காவல்துறைப் பணியிலும் எல்லாவற்றையும் உடனே சாதித்து விட முடியாது. சமுதாயப் பயிரை அழிக்கக் கூடிய குற்றங்கள் என்னும் காளான்களை களையெடுக்க வேண்டும். அதற்கு உரிய அதிகாரம் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரம் அவர்களது கைகளை பலப்படுத்த வேண்டுமே தவிர அதிகார மமதையை தலைக்கு ஏற வைத்துவிடக்க்கூடாது.
ஹஸ்ரத் அலி பிரார்த்தனை வரிகள் எல்லோருக்கும் பொருந்தும்:-
எனக்கு செல்வம் கொடுக்கையில்
எனது சந்தோஷத்தை எடுக்காதே
எனக்கு வலிமையை கொடுக்கையில்
எனது அறிவை எடுக்காதே
எனக்கு கெüரவம் கொடுக்கையில்
எனது பணிவினை எடுக்காதே
எனக்கு பணிவினை கொடுக்கையில்
எனது கண்ணியத்தை எடுக்காதே
எனக்கு அதிகாரத்தை கொடுக்கையில்
எனது பரோபகாரத்தை எடுக்காதே
ஒட்டுமொத்த காவல்துறையினரும் வானில் குண்டு முழங்க வீரவணக்கம் செலுத்துகையில், "வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணியை மேம்படத் தொடர்வோம்' என்ற உறுதியோடு, "நான் பேணும் காவல்துறையினர் சீர்திருத்தவாதிகளாகவே இருப்பர்' என்ற காந்தியடிகளின் அறிவுரையை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...