நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பகையை வெல்ல ஈகை துணை!

ஈதல் இசைபட வாழ்தல் என்பது தமிழர் மரபு. தொன்றுதொட்டு போற்றப்படும் நெறிமுறை. எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போகப் போகிறோம் என்று வாழ்க்கையின் நிலையாமையை சிறிதளவு சிந்தித்தால் வறியவர்க்கு உதவ மனம் வரும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:05 pm

ஆர். நட​ராஜ்

ஈதல் இசைபட வாழ்தல் என்பது தமிழர் மரபு. தொன்றுதொட்டு போற்றப்படும் நெறிமுறை. எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போகப் போகிறோம் என்று வாழ்க்கையின் நிலையாமையை சிறிதளவு சிந்தித்தால் வறியவர்க்கு உதவ மனம் வரும்.

பணத்தை எவ்வாறு பதுக்கலாம், வரி ஏய்ப்பு செய்து கறுப்புப் பணத்தை எப்படி பெட்டியில் குவிக்கலாம் என்பதில்தான் குறியாக இருப்பர் பலர்.

எந்த அளவிற்கு பரோபகார குணம் பல நாட்டு மக்களிடையே உள்ளது என்பது பற்றி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச நிறுவனம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கிறது. 2012 ஆம் வருட உலக ஈதல் குறியீட்டில் இந்தியாவின் நிலை 133. ஆசிய நாடுகளில் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் பின் தங்கிய நாடு இந்தியாதான்.

தெற்கு ஆசியாவில் முதல் நிலையில் இலங்கை, உலக அளவில் 15. அடுத்து ஆப்கானிஸ்தான் உலக அளவில் 48, பாகிஸ்தான் 85, வங்கதேசம் 109, நேபாளம் 115, ஒரே ஓர் ஆறுதல் என்ன வென்றால் சீனா நம்மைவிட இறுக்கம். அவர்களது நிலை உலக அளவில் 141.

மக்கள்தொகை அதிகமான நாடு நமது என்பதால், கொடுக்கும் குணம் படைத்தவர்கள் 16.5 கோடி இந்திய மக்கள். அது நமது மொத்த மக்கள்தொகையில் சுமார் 13 சதவீதம்தான், ஆனால் உலக அளவில் இது அதிகம் என்பது இன்னொரு ஆறுதலான நிலை.

ஈதல் என்பது நன்கொடையாகப் பணம் கொடுப்பது மட்டுமல்ல. நேரத்தையும் உழைப்பையும் கொடுப்பதும்கூட மிக சிறந்த தானம்தான். அதுதவிர, வழிப்போக்கர்களையும் முன்பின் தெரியாதவர்களையும் எவ்வாறு பேணுகிறோம், அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறோம் என்பதும் ஒருவரது இரக்க குணத்தையும் உயர்ந்த பரிவையும் உணர்த்துகிறது. பிறருக்கு உதவிட செலவிடும் நேரத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் நிலை 10 சதவீதம் தான். மற்ற நாடுகளுக்குள் நமது நிலை 104. அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

வந்தாரை வாழவைப்பதிலும் முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுவதிலும் முதல் நிலை வகிப்பது லைபீரியா நாடு. இந்த நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு. பல ஆண்டுகளாக உள்நாட்டுக் கலவரத்தால் பீடிக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் இருந்தது. சராசரி ஜிடிபி விகிதத்தில் உலக நாடுகளில் 171 ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், இன்று ஒரு பெண் அதிபர் (எக்லன் ஜான்ஸன் சர்லீஃப்) திறமையாக நாட்டை வழி நடத்திச் செல்கிறார். பத்து வருடங்களாக சண்டை சச்சரவு இல்லை; உள்நாட்டுப் பாதுகாப்பு திறம்பட நிர்வகிக்கப்படுகிறது. தொடர்ந்து பொருளாதார முன்னேற்றம் பெற்று வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபரின் வியக்க வைக்கும் சாதனை இவை.

160 நாடுகளில் சுமார் 15 கோடி மக்களிடம் கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரித்ததன் அடிப்படையில் சர்வதேச ஈகை கணக்கெடுப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 2008-இல் பொதுவாக பொருளாதாரத் தேக்கத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து ஈகை குறியீடும் பல நாடுகளில் குறைந்தது.

ஈகை குறியீட்டைக் குறிக்கும் மூன்று குணாதிசயங்களில் நன்கொடை அளிப்பது வேண்டுமானாலும் குறையலாம், ஆனால், மற்றவர்களுக்காக நேரம் செலவிடுவது, முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுவது கூடவா குறைய வேண்டும்?

பாரதப் பண்பாட்டில் ஊறிய விருந்தோம்பல் என்ற அடிப்படை இயல்பு அவசர உலகில் மறைந்து வருவது அதிர்ச்சி தரும் உண்மை. இதில் உலக நாடுகளிடையே இந்தியாவின் நிலை 146. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு வந்தவர்களை வாழவைப்பதில் சிறப்பாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இளைய சமுதாயத்தினரிடம் உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு.

ஈதலின் அடிப்படை நமது பயன்பாட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் "அறம் செய்ய விரும்பு' என்ற இயக்கம் 2009-இல் தன்னார்வத் தொண்டர்களால் துவங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் ஈதல் குணத்தை முன்நிறுத்தி பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொடுப்பதற்கு வரைமுறையில்லை, எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், இயன்றதைக் கொடுக்கலாம். பணம், துணிமணிகள் நம்மிடம் அதிகம் உள்ள பொருள்கள், ஏன் நமது நேரம், அன்பு, பரிவு என்று கொடுப்பதற்கு எல்லையே இல்லை. பகிர்ந்து கொள்வதில் உள்ள சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோள்.

2012-ஆம் ஆண்டு இந்தியாவில் 100 நகரங்களில் சுமார் 15 லட்சம் மக்கள் ஈகை விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வசதி படைத்தவர்கள் மட்டுமன்றி சாதாரண மக்கள், ஏழை எளியவர்கள், ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் என எல்லோரும் பங்கு கொண்டு தங்களால் இயன்றதைக் கொடுத்தார்கள்.

விநாயகர் சதுர்த்தி துவங்கி பொங்கல் வரை பண்டிகைகளுக்குக் குறைவேயில்லை. பண்டிகை சமயங்கள் சந்தோஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு அருமையான வாய்ப்பு. பகிர்வில் கவலைகள் குறையும், கொடுப்பதில் சந்தோஷம் பெருகும்.

நகரங்களில் எவ்வளவோ தனியார்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் இளம் வயதினார் பலர் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தங்களால் இயன்றதை கொடை வாரத்தில் பகிர்ந்து கொண்டால் ஆனந்த அலையை சமுதாயத்தில் எழுப்பலாம் என்பது உண்மை. அதை அனுபவிக்க நமக்கு பண்டிகைகள் ஒரு வரப்பிரசாதம்.

இஸ்லாமிய நண்பர்கள் ரமலான் நோன்பு இருக்கையில் நலிந்தவர்க்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. புனித குரான், பணத்தை வட்டிக்கு விடக் கூடாது என்று சொல்கிறது. மேலும் ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தபட்சம் ஒரு தொகையை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற அறிவுரையும் இருக்கிறது. எல்லா இஸ்லாமியரும் இதனைச் செவ்வனே கடைப்பிடிக்க்கிறார்கள்.

ஆதரவற்ற குழந்தைகளின் நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நாம் சென்று அவர்களோடு சிறிது நேரம்

பழகினாலேயே அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். பிரபலங்கள் தங்கள் பிறந்த நாள் அன்று இத்தகைய இல்லங்களுக்குச் சென்று இனிப்பு வழங்குவதை ஒரு சம்பிரதாயமாக கொண்டுள்ளார்கள். பண்டிகை நாள்களை ஆதரவற்ற குழந்தைகளோடு கொண்டாடினால் அது மனதுக்கு நிறைவினைத் தரும்.

"ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்று வித்யாதானத்தைப் பற்றி பாடுகிறார் பாரதியார். நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்க்கு சொல்லிக் கொடுப்பதும் பயிற்றுவிப்பதும் மிக புனிதமான ஈகை என்பதில் ஐயமில்லை.

ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றால், பள்ளி அவர்களிடம் செல்ல வேண்டும் என்று விரும்பினார் சுவாமி விவேகானந்தர். அதன் அடிப்படையில் உருவானதுதான் ஓராசிரியர் பள்ளி. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 580 ஓராசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. தொலைவில் உள்ள குக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் விருட்சமாகச் செயல்படுகின்றன.

விவேகானந்தா டிரஸ்ட் முழுவதும் நல்லோரின் நன்கொடை பெற்று மிகச் சிறப்பாக இப்பள்ளிகளை நடத்துகிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாலைப் பள்ளிகளாக இயங்குகிறது. மாணவ, மாணவியர் வீட்டில் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருந்து விட்டு, மாலையில் இப்பள்ளிகளுக்கு வருகிறார்கள். அதே குக்கிராமத்தைச் சேர்ந்த படித்த ஆசிரியர் இப்பள்ளிகளுக்கு பொறுப்பு.

மாணவர்களுக்குக் கல்வியோடு நல்லியல்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. தேசியத் தலைவர்கள் பற்றியும், இந்திய நாட்டின் பெருமை பற்றியும் நற்பண்புகளின் முக்கியத்துவம், அறம், பரிவு, பரோபகாரம் அன்பு செலுத்துவது, கெட்ட பழக்கங்களைத் தவிர்த்தல் இவை எல்லாம் பாடங்களோடு இணைத்து அறிவுறுத்தப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓராசிரியர் பள்ளி மாணவர்கள் தங்கள் வீட்டில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களைத் திருத்தியுள்ளார்கள். சுமார் இருபதாயிரம் குழந்தைகள் இக்கல்விச் சேவை மூலம் பயனடைந்து, அடுத்து அரசுப் பள்ளிகளுக்கு ஊக்கத்தோடு படிக்கச் செல்கிறார்கள். மற்ற மாணவர்களைவிட ஒழுக்க சீலர்களாக இம்மாணவர்கள் விளங்குவதால், பல கிராம மக்கள் எங்கள் கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளி அமையுங்கள் என்று விரும்புவது விவேகானந்தா கல்வி இயக்கத்தின் வெற்றி. ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறிய வல்லது கல்வி ஒன்றுதான் என்பதில் சந்தேகமேது?

நலமே வளம் என்று மருத்துவ உதவி செய்வதும் நலம் பேணும் ஈகை. வீரப்பன் வேட்டையின்போது மருத்துவ முகாம்கள் வனப் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவியாக பிரபல மருத்துவ நிபுணர்களை வைத்து நடத்தியது வெகுவாக வரவேற்கப்பட்டது மட்டுமன்றி, மலைவாழ் மக்களின் மனப்போக்கை மாற்றவும் உதவியது. வீரப்பன் வேட்டை வெற்றி பெற்றதற்கும் அது காரணமாக அமைந்தது. பகையை வெல்ல ஈகை துணை நின்றது.

தமிழ்நாட்டில், முக்கியமாக சென்னை நகரத்தில் வருடா வருடம் ஈகை விழா அக்டோபர் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது. சுமார் ஐம்பதாயிரம் மணி நேரம் நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றவர்களுக்கு உதவி அளிப்பார்கள் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் வருடம் முப்பது கோடி ரூபாய் ஈகை வாரத்தில் திரட்டப்பட்டு, தன்னலமற்றுச் சேவை புரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது.

பணம் படைத்தவர்கள் சமுதாய நலனுக்காகச் செலவழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் காந்தியடிகள். பணம் இருப்பவர்கள் எல்லோரும் கொடுப்பதில்லை. சாதாரண மக்கள் ஈகை குணம் படைத்தவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம். உயிரிழந்த தன் மகனின் உடல் உறுப்புகளைக் கொடுத்தார்களே அகால மரணம் அடைந்த ஹிதேந்திரன் பெற்றோர். சமுதாயத்தில் எவ்வளவு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அது.

"தவ்வி கொடுமின் தலைப்பட்ட போதே' என்ற திருமந்திரத்தின் வாக்குப்படி கண்சிவக்க கடுக்காமல் கை சிவக்க கொடுப்போம். ஈகைத் திருவிழாவை நாள்தோறும் கொண்டாடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.