தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே


இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே மொழிப் புலமை இருப்பதில்லை. அம் மொழிமீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவும் அவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பற்ற உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்.
இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் தமிழ்ப்பயன்பாடு எவ்வாறு குறைந்து வருகிறது என்பது பற்றியது அது. அந்த விவாத நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் தாங்கொணாத வருத்தமும் ஏற்பட்டது.
ஏனெனில் தன்னுடைய மகனுக்குத் தமிழ் சரியாகப் படிக்க வரவில்லையென்பதால் அவரின் முதல் பாடமாக பிரெஞ்ச் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தாய் கூறினார்.
தாய்மொழியான தமிழே சரியாக வரவில்லையென கூறிய அந்தத் தாய், கூடுதல் கவனம் செலுத்தி அப்பிள்ளைக்கு வீட்டில் தமிழ் மொழிப் பயிற்சி அளித்திருக்கலாமே?
தன்னுடைய பள்ளிப் படிப்பில் தமிழையே படிக்கவில்லையென மற்றொரு பிள்ளை அந்நிகழ்ச்சியில் கூறினார். அவர் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழைப் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், தமிழ் எழுத்துகளை எழுத மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மற்றவர்களோடு பேசும்பொழுது தமிழில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவதாகவும், அந்த நிலைக்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளிக்கூட சூழ்நிலையுமேதான் காரணம் எனவும் சிலர் தெரிவித்தனர்.
அதிலும் பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் அபராதம், மதிப்பெண்கள் குறைப்பு, பள்ளி முதல்வரைச் சந்திப்பது, பெற்றோர்களை அழைத்து வந்து விளக்கம் அளிப்பது உள்ளிட்ட தண்டனைகளை அனுபவிக்க நேரும் என்பதால் தாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிள்ளைகள் கூறினர். ஆங்கிலம் பேசச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்தியது தங்களுடைய தாய்தான் என பெரும்பாலான பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.
அதே வேளையில் தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் அதைவிடத் தெளிவாகத் தெரிகிறது.
ஒருவருக்கு தாய் மொழி என்பது மிகவும் அவசியமானது. தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கிறோம். ஆனால் இப்போது தாய் மொழியில் கூட ஆரம்பக் கல்வியைக் கற்பதில்லை. ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
ஆங்கிலம் தேவைதான். அது ஒருவருடைய வாழ்க்கைக் கல்விக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கற்பதில் தவறில்லை.
தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.
ஆங்கிலத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் பேசுவதற்கே பல பெற்றோர்கள் புளகாங்கிதமடைந்து மகிழ்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே தரமின்றித் தான் கற்றுவருகிறார்கள் என்றாலும் தமிழ் புறக்கணிக்கும் போக்கு வேதனையைக் கூட்டுகிறது. தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...