நாம் பெற்ற செல்வம்
உழைக்க வாய்ப்பு, உணவு, நீர், பாதுகாப்பு எல்லோருக்கும் தடையின்றி கிடைக்கட்டும்' என்றார் மனித உரிமை உலகின் அடையாளச் சின்னமாகவும் நாயகனாகவும் போற்றப்படும் தலைவர் நெல்சன் மண்டேலா.


உழைக்க வாய்ப்பு, உணவு, நீர், பாதுகாப்பு எல்லோருக்கும் தடையின்றி கிடைக்கட்டும்' என்றார் மனித உரிமை உலகின் அடையாளச் சின்னமாகவும் நாயகனாகவும் போற்றப்படும் தலைவர் நெல்சன் மண்டேலா. சுதந்திரம் இல்லையென்றால் எவ்வளவு வசதி இருந்து என்ன பயன்? பணம் மட்டும் வெற்றி தராது. பணம் ஈட்ட எல்லோருக்கும் சுதந்திரம் ஒன்றுதான் வெற்றியை உறுதி செய்யும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகிறது. 1948-இல் முப்பது ஷரத்துக்கள் கொண்ட மனித உரிமை பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையால் முன் மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதற்கென பிரத்யேக ஆணையம் 1993-ஆம் வருடம் ஆஸ்ட்ரியா நாட்டு வியன்னாவில் 171 நாடுகள் பங்கு கொண்ட உலக மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அறை கூவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
வியன்னா பிரகடனத்தைத் தொடர்ந்து பாரிஸ் மாநகரில் நடந்த பல்நாட்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் மனித உரிமைகள் பல நாடுகளில் பறிக்கப்படும் நிலை, நிறுத்தப்பட வேண்டும் என்று எல்லா நாடுகளுக்கும் இதன் தொடர்பாக முனைப்பான தாமதமின்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாய பிரகடனத்தின் அடிப்படையில் நாடுகள் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கை எடுக்கத் துவங்கின.
1993 வியன்னா அறிக்கையைத் தொடர்ந்து "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்' டிசம்பர் 20 1993-இல் உருவாக்கப்பட்டது. ஜோஸ் அயலா லாúஸா என்பவர் முதல் தலைவராக ஏப்ரல்-5, 1994-இல் பொறுப்பேற்றார். இப்போது தெற்கு ஆப்பிரிக்காவை சேர்நத இந்திய வம்சாவளியினரான நாவி பிள்ளை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
உலக அளவில் மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற வியன்னா அறிக்கையின் முக்கிய முடிவு எல்லா தரப்பட்ட மக்கள், எல்லா நாடுகளிலும் இனம், மொழி, வர்க்கம், நிறம் இவற்றிக்கு அப்பாற்பட்டு முழுமையான சுதந்திரமும் அடிப்படை உரிமைகளும் அனுபவிக்க எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இதனை உறுதியுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு, அரசு அதிகாரிகள், குடிமை சமுதாயம், தொழில் செய்பவர்கள் எல்லாருக்கும் உள்ளது. நமது நாட்டில் வியன்னா அறிக்கையைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் 12.10.1993-இல் நிறுவப்பட்டு செயல்பட துவங்கியது.
முதல் ஆணையத் தலைவர் ரங்கநாத் மிஸ்ரா. மாநிலங்களிலும் ஆணையம் அமைக்கப்பட்டன. முதலில் மேற்கு வங்காளத்தில் அடுத்து தமிழகத்தில் 1997-ஆம் வருடம் செயல்பட துவங்கியது. முதல் தலைவர் நயனார் சுந்தரம். தற்போது 23 மாநிலங்களில் மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகிறது.
தேசிய ஆணையம் 2009-10 ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2009-10ல் 82,021 மனித உரிமை மீறல் வழக்குகள் பதியப்பட்டன. முந்தைய இரண்டு ஆண்டுகளில் முறையே 1,00,616 மற்றும் 90,046 வழக்குகள்.
இது தவிர 1473 நீதிமன்ற காப்பு மரணங்கள், 124 காவல் காப்பு மரணங்கள் சம்பந்தமான வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. உணவு, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் மருத்துவம், இவை முக்கிய உரிமைப் பிரச்னைகளாக கருத வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தவிர பெண்கள், குழந்தைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு, அகதிகள் இவர்களது உரிமைப் பிரச்சனைகளை பிரத்யேகக் குழுக்கள் மூலம் ஆராய்ந்து, தக்கவகையில் தன்னார்வத்தோடு தலையிட்டு தீர்வு கொடுப்பதற்கும், உரிமை மீறல்களை தடுப்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறது.
தேசிய ஆணையத்தில் பெறப்படும் மனுக்களில் அதிகமாக உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து 51,270 வழக்குள் 2009-2010-ஆம் ஆண்டில் பதியப்பட்டது. அதே ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து 1466 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவாகியது. 2009-10-இல் முடிவுக்கு கொண்டு வந்த வழக்குகள் 6621. அதில் காவல்துறை அத்து மீறல் சம்பந்தப்பட்ட வழக்குகள் 1344. கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு வழக்குள் 344. இதிலிருந்து மனித உரிமை ஆணையங்களுக்கு பெறப்படும் பெருவாரியான மனுக்கள் உயிர், உடமைகளுக்கு ஆபத்து, காவல்துறை நடவடிக்கையில் அதிருப்தி, காப்பில் கொடுமை சம்பந்தப்பட்டவை என்பது தெளிவாகிறது.
மனித உரிமைகள் சட்டம் 1993 பிரிவு 12(அ) (ண்)(ண்ண்) படி அரசு பொது ஊழியர் கடமை தவறுதல், மனித உரிமை மீறும் வகையில் நடத்தல், ஒருவரது மனித உரிமைக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் செய்கை இவற்றின் மீது தன்னிச்சையாகவோ, பாதிக்கப்பட்டவர் புகார் அடிப்படையிலோ ஆணையம் விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கு மனித உரிமை மீறப்படுகிறதோ அதை தடுப்பதற்கு தவறிய அல்லது உடந்தையாக இருந்த அரசு ஊழியர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம். குஜராத்தில் கோத்ரா தொடர் வன்முறை சம்பவங்கள் மீது தேசிய ஆணையத் தலைவர் நீதியரசர் வர்மா குஜராத்திற்குச் சென்று நேரிடையாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அரசினை பணித்தார். சமீபத்தில் அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு மாநிலங்கிலிருந்து பங்களூரில் வேலையில் இருந்தவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளியேறியதைத் தொடர்ந்து தேசிய ஆணையம், அரசு பாதுகாப்பு கொடுக்க தவறியது, உரிமை மீறல் என்ற வகையில் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் வழி வகை செய்தது.
இருப்பினும் மனித உரிமைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த செயல்படும் தன்னார்வு தொண்டு கூட்டமைப்புகள், தேசிய ஆணையம் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்படும் தாமதத்தை சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு மனு அனுப்பினால் அதற்கு பெற்றுக் கொண்ட ரசீது வருவதற்கு சராசரியாக 66 நாள்கள் ஆகிறது என்றும் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. மேலும் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி பதில் பெறுவதற்கு சுமார் 300 நாள்கள் ஆகிறது என்றும் ஒரு மனுவின் முடிவிற்கு சுமார் 700 நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்று என்ஜிஓ-க்கள் குறை கூறுகின்றன.
கோப்புக்களின் விசாரணையில் தாமதம் ஏற்படுவதற்கு மேற்பார்வையிடுபவர்களின் கவனக்குறைவே காரணம். இதனை எல்லா நேர்வுகளிலும் பார்க்கலாம். இத்தகைய தாமதத்தை தவிர்ப்பதற்கும் அரசு துறைகளை நாடி வரும் பொது மக்களுக்கு நிவாரணம் உடனடியாக கிடைக்கவும் "அம்மா திட்டம்' செயல்படுத்தப்படுவது மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே வகையில் பணியாளர் தேர்வில் தாமதத்தை தவிர்ப்பதற்கு ஒரு கட்டத் தேர்விற்கு மூன்று மாதம், எழுத்து, நேர்காணல் என்ற இரண்டு கட்டத் தேர்விற்கு ஆறு மாதம், இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு பின் நேர்காணலுக்கு 9 மாதம் என்று தேர்வாணையத்தில் கால அட்டவணை வகுக்கப்பட்டது. கணினி வசதி இருப்பதால் எளிதாக இதனை செயல்படுத்த முடிந்தது. இப்போதும் முடிய வேண்டும்.
தாமதம் என்பதையே ஒரு மனித உரிமை மீறலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களில் இரண்டு வகை. சுய உந்துதலில் தனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முனைப்பாக செயல்படுபவர்கள் ஒருவகை. களப்பணி இன்னொரு வகை. முன்றாம் வகையும் உண்டு. மேலதிகாரிகள் சொன்னதின் பேரிலோ, தெரிந்தவருடைய கோப்பு அல்லது ஏதாவது ஒரு வகையில் ஆதாயம் என்று சில பிரத்யேக காரணங்களுக்காகவோ கோப்புகளை நகர்த்துபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மேற்பார்வையாளராக இருப்பவர் சரிவர பணி செய்தால் தாமதத்தை தவிர்க்கலாம், தவிர்க்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் நிறுவப்பட்டு இருபது ஆண்டுகள் முடிவடைகிறது என்பதை முன்வைத்து இந்த வருடத்தின் மனித உரிமை ஆணையத்தின் மையக்கருத்து இருபது வருடங்கள் உங்களது உரிமைக்கு பெருமை சேர்க்கும் பணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆணையம் மனித உரிமைகள் நாளை அனுசரிக்கும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி நடத்தப்படும். நமது நாட்டின் மனித உரிமை ஆணையமும் இருபது ஆண்டுகள் பூர்த்தி செய்வதால் கடந்த ஆண்டுகளின் பணிகளை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள்
அமையும்.
இதுவரை கமிஷன் பனிரெண்டு லட்சத்து எழுபதாயிரம் மனித உரிமைமீறல் வழக்குளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது குறிப்பிட வேண்டிய சாதனை. மனித உரிமைகள் விழிப்புணர்வு சாதாரண மக்களிடம் மிகக் குறைவு. சில தன்னார்வுத் தொண்டு அமைப்புகள் மனித உரிமைகளுக்காக பணி செய்வதாக அறிவித்து சுய ஆதாயத்திற்கும் மேலை நாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கு இயங்குவது மறுக்க முடியாது.
அதனால்தான் நன்றாக செயல்படும் தன்னார்வு தொண்டு அமைப்புகளை இணைத்துக் கொள்ள மனித உரிமைகள் ஆணையங்கள் தயங்குகின்றன.
ஐக்கிய நாடுகள், மனித உரிமை ஆணையம் பல உரிமைப் பிரச்சனையில் தலையிட்டு வெற்றிக்கண்டதாக இருபது ஆண்டுகளில் இருபது சாதனைப்பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆனால் வேதனைத் தருவது மனிதனால் மனிதன் வஞ்சிக்கப்படும் கோர சம்பவங்கள் உலகில் பல இடங்களில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகள் ஒரு உதாரணம்.
உரிய நேரத்தில் தலையிட்டு மனித உரிமை மீறலை தவிர்ப்பதுதான் பெருமைப்படக்கூடிய சாதனை. நிரந்தர விழிப்புணர்வே அதற்கு நிரந்தர தீர்வு.
எல்லா தரப்பட்ட மக்களும் அமைதியோடும், இணக்கத்தோடும் வாழ்வதற்கும் எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்கும் நேர்மையான வெளிப்படையான வழிகளை வகுக்கும் சுதந்திரம் பொங்கும் சமுதாயமே நாம் அடையக்கூடிய செல்வம். நலமான செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...