/

"கறந்த பாலை தெருவில் கொட்டும்' ரயில்வே

பணக்காரனாக ஆவதற்கு எளிய வழி சிக்கனம் என்பார்கள். அதாவது, எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் ஒரு போதும் மிச்சம் வராது, 

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:23 pm

ப. இசக்கி

பணக்காரனாக ஆவதற்கு எளிய வழி சிக்கனம் என்பார்கள். அதாவது, எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் ஒரு போதும் மிச்சம் வராது,  செல்வச் செழிப்பும் ஏற்படாது, மாறாக கடன்தான் ஏற்படும். இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 இந்திய ரயில்வே துறைக்கு சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஈடுகட்ட ஒளிவுமறைவற்ற கட்டண நிர்ணய முறையை அமல்படுத்த (அதாவது கட்டண உயர்வு) உள்ளதாகவும் மாநிலங்களவையில் அண்மையில் ரயில்வே இணை அமைச்சர் கோட்ல ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி எழுத்து மூலம் அளித்த பதிலிலில் தெரிவித்துள்ளார்.

 இந்தப் பதிலைக் கேட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் என்ன நினைத்தார்கள் என்பது தெரியாது. ஆனால், நாட்டு நலனில் அக்கறை உள்ள குடிமகன்களுக்கு இந்த செய்தி நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்.

 உலகில் உள்ள பெரிய ரயில்வே துறைகளில் இந்திய ரயில்வேயும் ஒன்று. நாடு முழுவதும் சுமார் 65 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு தண்டவாளங்களைப் பதித்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. ரயில்வே துறைக்கு கடந்த நிதியாண்டு (2012-13) மட்டும் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் சுமார் ரூ. 1.32 லட்சம் கோடி ஆகும்.

 ரயில்வே துறையானது, கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் நிர்வாகத்தில் லாபத்தை நோக்கிச் சென்றது என்பதை மறுக்க முடியாது. சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்ட வேண்டும் என இலக்கை நிர்ணயித்து அவர் செயல்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார் என்றே கூறலாம்.

 ரயில்வே துறையை லாபத்தில் இயக்கிய லாலு அந்த நேரத்தில் ஒரு "நிர்வாக குரு'வாகக் கொண்டாடப்பட்டார். அவரது நிர்வாகத் திறமை குறித்து பேசுவதற்காக ஐ.ஐ.எம். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பயிற்சி மையங்களுக்கு லாலு அழைக்கப்பட்டார்.

 பிகாரில் மாட்டுத் தீவன ஊழலில் சிக்கி கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருந்த லாலு, தான் பேசிய இடங்களில் எல்லாம் தனது பாணியிலேயே

""மாட்டின் மடியில் பாலை முறையாகக் கறந்தால் அதிகம் கறக்கலாம். அதைத்தான் நான் செய்கிறேன். லாபம் கிடைக்கிறது'' என்றார். கறவை மாடுகளைப் பராமரித்து அனுபவப்பட்டவர்களுக்கு இந்த உண்மை தெரியும். தனது வீட்டிலேயே கறவை மாடுகளைப் பராமரித்து வரும் அனுபவத்தில்தான் லாலு அப்படிக் கூறியிருக்க வேண்டும்.

 அப்போது ரயில்வே இணை அமைச்சர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் ஆர். வேலு. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், பாமக சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். ரயில்வே துறை லாபம் ஈட்ட, லாலுவுக்கு துணையாக நிர்வாகத் திறமை மிக்க வேலு இருந்ததை ஊடகங்கள் மறைத்தாலும், நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது.

 ரயில்வே துறையின் இன்றைய நஷ்டத்திற்கு காரணம், மாட்டின் மடியில் பாலை  முறையாகக் கறக்காதது மட்டுமல்ல, கறந்த பாலை முறையாகப் பயன்படுத்தாமல்  கெட்டுப் போக அனுமதிப்பதும் ஒரு காரணம் என்பது கண்கூடாகத் தெரிகிறது.

 ரயிலில் பயணம் செய்கிறவர்கள் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் பார்த்தால் தெரியும். ரயில் பாதையின் ஓரங்களில் இரும்புத் தண்டவாளங்கள், கான்கிரீட் ஸ்லீப்பர்கள், இரும்பு கிளிப்புகள், கம்பங்கள் என ரயில்வேக்கு சொந்தமான அந்தப் பொருள்கள் ஆங்காங்கே சில இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டும், சில இடங்களில் வீசி எறிந்தது போலவும் சிதறிக் கிடக்கும். அவற்றில் சில புதியதாகவும், சில   பல ஆண்டுகள் அந்த இடத்திலேயே மழைக்கு நனைந்து, வெயிலுக்கு காய்ந்து கிடப்பது போலவும் இருக்கும். அந்த இடத்தில் அவற்றின் தேவை என்ன என்பது யாருக்கும் தெரியாது. தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் புதிது புதிதாக வாங்கிக் குவித்து வைத்திருப்பது போலத் தெரிகிறது.

 பழையவற்றை மாற்றிவிட்டு புதியவற்றை பொருத்துவதற்காக அவை கொண்டு வரப்பட்டுள்ளவை என்றால் அதைச் செய்துவிட்டு பழையவற்றை  அப்புறப்படுத்துவதுதானே முறை. அதையும் செய்வதாகத் தெரியவில்லை. சில இடங்களில் பழைய உதிரிப் பாகங்கள் எல்லாம் அருகில் உள்ள குடியிருப்புகள், நடைபாதைகள், வாகன வழித்தடங்கள், பொது இடங்கள், வயல்வெளிகள், நீரோடைகள், நீர்நிலைகள் என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது. இடையூறு மட்டுமல்ல, அவை சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை ரயில்வே துறைக்கு யார் சொல்வது?

 ரயில்வே பொருள்களை யாராவது எடுத்து வைத்திருந்தால் அது குற்றம். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். அதனால் அவை போட்ட இடத்தில் அப்படியே கிடக்கின்றன. இது ரயில்வே துறைக்கு செüகரியமாக போய்விட்டது போலும்.

 தமிழ்நாட்டில் கிடப்பது போலத்தான் நாடு முழுவதும் கேட்பாரற்ற நிலையில்

ரயில்வே பொருள்கள் கிடக்கின்றனவா? அப்படி வீணாகக் கிடந்தால் அவற்றின் மதிப்பு கட்டாயம் பல நூறு கோடி ரூபாய் இருக்குமே. தனியார் நிறுவனம் என்றால் புதிதாக ஒரு ஸ்குரு வாங்க வேண்டும் என்றால்கூட அதற்குக் கணக்கு கேட்பார்களே. ரயில்வேயில் புதிய பொருள்களை வாங்கும்போது அதன் தேவை குறித்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? புதியவற்றைப் பொருத்தினால் பழையவற்றுக்கு கணக்கு கேட்க மாட்டார்களா?

 அரசாங்கத்தில் "கொள்முதல்' செய்தே செல்வத்தில் கொழிக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உண்டு என்பது ரயில்வேக்கும் பொருந்தும். அதனால்தான் தேவை இல்லாத அளவுக்கு கொள்முதல் செய்து சேமித்து வைத்திருக்கிறார்கள். இப்படி ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் ஆயிரம் கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்படாமல் லாபம் ஈட்டவா முடியும்?

 இவர்கள் கெட வைத்து தெருவில் ஊற்றும் பாலுக்கு அப்பாவி பயணிகள் பணம் கொடுக்க வேண்டுமாம். ரயிலை முறையாக இயக்க ஓட்டுநர், கார்டு, ஸ்டேஷன் மாஸ்டர், பாயிண்ட்ஸ் மேன் என்று பலர் இருக்கிறார்கள். ஆனால், ரயில்வே நிர்வாகத்தை முறையாக இயக்கத்தான் யாருமே இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.