உறுதியெடுக்க வேண்டும்!
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு' என்று பாடினார் மகாகவி பாரதி.


எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு' என்று பாடினார் மகாகவி பாரதி. ஆனால் எல்லோரும் சமமானோமா என்பது கேள்விக்குறி. அதிக உறுப்புகளை கொண்ட நீண்ட இந்திய அரசியல் சாசனத்தில் பாகம் மூன்றில் உறுப்பு 14-இன் படி சட்டத்தின்முன் எல்லோரும் சமம். மிக உயரிய குறிக்கோள். அடிப்படை உரிமை. சட்டம் சமமாக எல்லோரையும் பாவிக்கிறது. சட்டத்தின்முன் சமத்துவம் என்பதன் பொருள் சமமானவர்களிடையே சட்டம் சமமாக இருத்தல் வேண்டும். சமமான நிலையில் உள்ளவர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்படல் வேண்டும். இனம், சமயம், செல்வம், சமூக நிலை அல்லது அரசியல் செல்வாக்கு போன்ற வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இதுதான் உட்கருத்து. ஆனால் அமலாக்கத்தில், பலம் படைத்தவருக்கு சலுகை, மற்றவருக்கு சல்லடை என்ற நிலை இருக்கிறது. இல்லாவிட்டால் சிறையில் உள்ள விசாரணை கைதிகளில் தொண்ணூறு சதவிகிதம் பேர் ஏழைகள் என்ற நிலை இருக்குமா?
சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் பூர்த்தியான இத்தருணத்தில் சாதனைகள் படைத்ததில் பூரிப்படையலாம்; சோதனைகளை வென்றதில் வெற்றிக் களிப்படையலாம்; அதே சமயம் சமுதாய அவலங்களைக் கண்டு வேதனையடையாமல் இருக்க முடியாது.
அரசியல் சாசனம் 51ஏ உறுப்பில் குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கடமைகளில் மிகவும் முக்கியமான பிரிவு, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நாட்டின் உயர்வுக்கான தனது பங்களிப்பை குறைவின்றி அளித்து, நாடு உன்னத நிலையை அடைவதற்கு வழி வகுக்க வேண்டும் என்பதாகும். அதற்கு அடிப்படை, உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உழைத்தால்தான் உயர முடியும் என்பது உறுதியாக வேண்டும். குறுக்கு வழியில் சாதித்து விடலாம் என்ற எண்ணம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
தேசிய நலனில் அக்கறை கொண்ட, சுதந்திர இந்தியாவிற்கு வழிகாட்டிகளான மகாத்மா காந்தி, இராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், மெüலானா ஆசாத், நேரு, இராஜாஜி காமராஜ் போன்ற தலைவர்களை நாம் பெற்றது நமது பாக்கியம் எனலாம். இவர்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் முனைப்பாக செயல்பட்டார்கள். ஒருமித்த சிந்தனையை வளர்த்தார்கள். எவ்வளவோ வேற்றுமைகள் இருந்தாலும் "நாம் இந்தியர்' என்ற உணர்வு நம்மை இணைக்கிறது. மூவர்ணக் கொடி கம்பீரமாக ஒளி வீசுகையில் நமது நெஞ்சு இறுமாப்படைகிறது.
ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் மட்டும் அந்நாட்டின் உயர்வைக் குறிக்காது. அது மட்டும் முக்கியம் என்றால் இயற்கை வளம் குறைவான ஜப்பான் எவ்வாறு வளமையான நாடாகத் திகழ முடியும்? ஒவ்வொரு நாட்டு மக்களின் கூட்டு முயற்சியும் உழைப்பும் செயல் திறனும்தான் அந்நாட்டின் செல்வத்தை நிலை பெறச் செய்யும். இதைத்தான் ஜி.டி.பி, மொத்த உழைப்பின் ஈட்டுத்தொகை என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
சுதந்திரம் அடைந்து சுமார் 40 ஆண்டுகள் 3 சதவிகித வளர்ச்சியிலேயே தேங்கிய நம்நாடு, 1990-க்குப்பிறகு புதிய பொருளாதார ஏற்பாட்டினால் உற்பத்தி 8 சதவிகிதமாக உயர்ந்தது பல வகையில் ஏற்றம் தரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சராசரி அடிப்படைக் கட்டமைப்புகளாகிய நெடுஞ்சாலைகள், மின் நிலையங்கள், நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்றவை வளர்ச்சியடைந்துள்ளன. ஆயினும், உலகத் தரத்தில் அவை உயராதது மிகப்பெரிய குறை. சமீபத்தில் தில்லியில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்தில் அடை மழையில் தண்ணீர் புகுந்ததும், மேல் தளம் ஒழுகியதும் கண்கொள்ளத்தகாத காட்சியாக இருந்தன. இது ஒருபுறம் இருக்க வளர்ச்சியின் பயனளிப்பு எல்லா சமூகத்தினருக்கும் சென்றடைந்ததா என்பதையும் பார்க்க வேண்டும்.
உணவு, வீடு, மருத்துவ நலன், கல்வி, பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படை உரிமைகளாகக் கருத வேண்டும் என்றும் அவை மக்களுக்கு சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இப்போதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அதிலும் பல குறைபாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டும் அவசரமாக இப்போது நிறைவேற்ற வேண்டிய நோக்கத்தின் பின்னணி என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளன. இன்னும் நாட்டில் 70 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே என்ற நிலை இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூபாய் 26 வருமானம் என்பது வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் அளவு என்று திட்டக் கமிஷன் உச்ச நீதிமன்றத்திற்கு பொது நல வழக்கில் பதிலளித்தது பெரிய சர்ச்சையை கிளப்பிள்ளது. துஷார், மாட் என்ற பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள், ஏழைகள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று அறிய கிராமத்திற்குச் சென்று தேவைகளை சுருக்கி அங்கு இருந்தனர். அந்த அனுபவத்தில் அவர்கள் கண்டது, ஏழைகள் பட்டினியோடு ஜடமாக இருக்க முடியுமே தவிர வாழ முடியாது என்பதுதான்.
ஏழைகளுக்கு உணவு மட்டும் இலவசமாக வழங்கினால் போதாது, தமது உழைப்பின் மூலம் முன்னேற வழி செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, தெலங்கானா ஆந்திரா இரண்டு இடங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அரசியல் பின்னணி இருந்தாலும், தெலங்கானாப் பகுதியில் உள்ள ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. எவ்வளவு கடுமையாக அவர்கள் உழைத்தாலும் போதிய ஊதியம் கிடைப்பதில்லை. பல நாள்கள், உழைப்பதற்கான வாய்ப்பும் கிட்டுவதில்லை. அந்த ஏழை மக்கள் கேட்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள், தமது குழந்தைகளுக்குக் கல்வி, தண்ணீர் வசதி. பல கிராமங்களில் குடி தண்ணீருக்கு பல மைல் நடந்து செல்ல வேண்டிய கஷ்ட ஜீவனம்.
கட்டாயக் கல்விக்கு அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு சட்ட வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த அளவுக்கு கொடுக்கப்படும் கல்வி தரம் வாய்ந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் ஆண்டொன்றுக்கு நான்கு லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். அவர்களில் பத்து சதவிகிதம்தான் பயனுள்ள வகையில் பணி செய்ய வல்லவர்கள் என்ற கணிப்பு உள்ளது. கல்விக் கட்டணம் உயர்ந்தால் போராடுகிறார்கள். சாப்பாடு சரியில்லை, கல்லூரிகளில் தேர்தல் நடத்த வேண்டும் போன்ற பல பிரச்னைகள் முன் வைக்கப்படுகின்றன. கல்வித்தரம் உயர வேண்டும் நல்லாசிரியர்கள் வேண்டும் என்று எவரும் கோரிக்கை வைப்பதில்லை.
கடந்த மாதம் தலைநகர் தில்லியில் கலாசார மைய வளாகத்தில் பாதாள சாக்கடை பழுது பார்க்க சென்ற அசோக் என்ற தொழிலாளியும் மேலும் இருவரும் பரிதாபமாக செத்தனர். ஐந்து இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலில் இறந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கூலித் தொழிலாளர்கள் சாவு மக்கள் கவனத்திற்கு வரவில்லை. கைகளால் மலம் நீக்கும் தடை சட்டம் 1993-இல் அமலுக்கு வந்தும், பாதாள சாக்கடைச் சாவுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். ரயில்களில் உள்ள கழிப்பிடங்களிலிருந்து விழும் மலங்களை சுத்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படும் அவல நிலை இன்னும் உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளில் தள்ளி விடுகின்றனர். அப்படி அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக வங்கியின் கணக்குப்படி, சுற்றுப்புற சூழல் பாதிப்பின் மதிப்பு சுமார் எண்பது பில்லியின் டாலர். சுற்றுப்புற மாசு அளவு மிக அதிகமான உள்ள நாடு இந்தியா என்றும், 132 நாடுகளில் இந்தியாவின் நிலை 126 என்றும் அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இத்தகைய நெருடல்களுக்கு நடுவே, ஒருங்கிணைந்த வளர்ச்சியில் சிறந்து விளங்கும் சில மாநிலங்களில் தமிழகம் முன்நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. சமீபத்தில் திருச்சிக்கு விஜயம் செய்த பிரதமரும் தமிழகத்தைப் பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி 17 சதவிகிதம். முதலமைச்சரின் தொலை நோக்குத்திட்டம் 2023 நிறை வேற்றுதலில் 22 சதவிகிதமாக உயரும் என்றும் இது சுமார் ஒன்றரைக் கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதும் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் புள்ளிவிவரம்.
பட்டா மாற்றம், பல்வேறு சான்றிதழ்கள், சமூக நலத்திட்டங்களின் பயன்கள் உடனடியாகப் பெற ஏதுவாக நிறைவேற்றப்படும் "அம்மா திட்டம்' மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசாளுமை என்பது கோப்புக்களின் குவியல் மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கு வழிவகுக்கும் நல்வழி என்பதை அரசு அதிகாரிகள் உணர வேண்டும்.
"அரசின் இரும்புக் கவசம்' என்று பெருமையாக சொல்லப்படும் இந்திய நிர்வாகத்திற்கு, "திட்டங்கள் செயலாக்கத்தின் இயலாமையை தெளிவாக இயம்ப வல்லவர்கள்' என்ற வேறொரு அடைமொழியும் உண்டு. கோப்புக்களை இறுக்கிப் பிடிக்காமல் மனதை இளக்கி மக்கள் நலனுக்காக செயலாக்கத்தை உயர்த்த அரசுப் பணியாளர்கள் உறுதியெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்:
காவல்துறை முன்னாள் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...