சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெஞ்சு பொறுக்குதிலையே

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியுடன் குழந்தைப் பேற்றுக்காக வந்த பெண்ணை, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு விரட்டியடித்த கொடுமை

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:18 am

எஸ். ராஜாராம்

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியுடன் குழந்தைப் பேற்றுக்காக வந்த பெண்ணை, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு விரட்டியடித்த கொடுமை நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

 இருப்பவர் இல்லாதவர் என அனைத்துத் தரப்பினருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்காகத்தான் அரசு மருத்துவமனைகள். அங்கு இந்த லஞ்சம் தாண்டவமாடுவது ஊரறிந்த விஷயம் என்றாலும், மனிதநேயம் சிறிதுமின்றி ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனை ஊழியர்களே விரட்டியது கொடுமையிலும் கொடுமை.

 நோயாளிகளிடம் அன்புகாட்ட வேண்டிய செவிலியர்களே லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு கடமை தவறுகிறார்கள் என்றால், எத்தகையவர்களை நம்பி நாம் சமூகத்தை  ஒப்படைத்திருக்கிறோம் என்று வேதனையாக இருக்கிறது.

 நண்பர் ஒருவர் தன் நிறைமாத கர்ப்பிணி மனைவியை பிரசவ வலியுடன் அரசு மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பணியில் இருந்த செவிலியர்கள் அனைவரும் மருத்துவமனையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். வலியால் துடித்த நண்பரின் மனைவியை யாரும் கண்டுகொள்ளாமல், நிதானமாக சாப்பிட்டு முடித்துள்ளனர். பின்னர் வந்து பார்த்த அவர்கள், நண்பரின் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கும் முன்னர் நண்பருக்கு அளித்த பணி என்ன தெரியுமா?

 பக்கத்து ஹோட்டலுக்கு சென்று அனைவருக்கும் தேநீர் வாங்கி வர வேண்டுமாம். மனைவிக்கு சுகப்பிரசவம் நடக்குமா, என்ன குழந்தை பிறக்கும் என பதைபதைப்பில் இருந்த நண்பர், அந்த நேரத்திலும் கடைக்கு ஓடோடிச் சென்று செவிலியர்களுக்கு தேநீர் வாங்கி வந்து தந்துள்ளார். சிகிச்சைக்கு வந்தவர் செலவில் தேநீர் வாங்கிக் குடிக்கும் அளவுக்குள்ள  ஊழியர்கள், அரசு தரும் சம்பளத்தை வாங்குவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

 பொதுவாக தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்தவித ஒழுங்குமின்றி முறைகேடுகளின் கூடாரமாகத்தான் இருக்கின்றன.   பிறந்த குழந்தைகள் மாறுவது, தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வழியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இயன்றவரை பணம் பறிப்பது, பிரசவம் முடிந்தவுடன் 500 ரூபாய்க்குக் குறையாமல் வலுக்கட்டாயமாக பெற்றுக்கொள்வது, நோயாளிகளை அலட்சியமாக நடத்துவது என நெஞ்சு கொதிக்கும் செயல்கள்தான் நடக்கின்றன. இவைதவிர, சுகாதாரக் கேடு, படுக்கைகள் பற்றாக்குறை என அது ஒருபக்கம். அரசு மருத்துவமனைகளில் "ஸ்கேன்' எடுப்பது எப்போதுமே பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. ஒன்று ஒரே அலைக்கழிப்பாக இருக்கும் அல்லது "ஸ்கேன்' இயந்திரம் பழுதடைந்திருக்கும். அந்த வேளையில், நோயாளிகளை அணுகிப்பேசும்  ஊழியர்கள் சிலர், தனியார் "ஸ்கேன்' மையங்களைச் சொல்லி அங்கு சென்று எடுத்து வருமாறு நிர்பந்திப்பர். அந்தத் தனியார் "ஸ்கேன்' மையங்களுக்கு  இடைத்தரகராகச் செயல்படுவதே இதுபோன்ற சில ஊழியர்கள்தான்.

 சேலம் அரசு மருத்துவமனையில் இந்தக் கொடுமை நடந்த பிறகு, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என "டீன்' கூறியுள்ளார்.

  அரசு மருத்துவமனையில் இருந்து விரட்டப்பட்டவுடன் அந்த கர்ப்பிணிப் பெண் கையறு நிலையில் மாகராட்சிக் கழிப்பிடம் அருகே குழந்தை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது பெரும் குற்றம். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இதற்குக் காரணமான ஊழியர்களை பணிநீக்கமே செய்திருக்க வேண்டும். அரசு தரும் சிகிச்சையை ஏழைக் குடிமகனுக்கு மறுப்பதற்கு எந்த அரசு ஊழியருக்கும் அதிகாரம் இல்லை.

 அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்கூட "பிரசவத்துக்கு இலவசம்' என கர்ப்பிணிகள் மீதான தங்களது கரிசனையை வெளிப்படுத்துகின்றனர். நோயாளிகளுக்கு அடைக்கலம் தர வேண்டிய, மாதந்தோறும் அரசு சம்பளத்தை வாங்கும் மருத்துவமனை ஊழியர்களோ பணப் பித்து பிடித்து கல் நெஞ்சத்துடன் கர்ப்பிணியை வெளியேற்றுகின்றனர். பணம் இல்லாதவர்கள் இந்தப் பூமியில் வாழத் தகுதியில்லாதவர்கள் என்றல்லவா இந்தச் சமூகத்தின் "லஞ்சக் கரையான்கள்' நினைக்கின்றன.

 லஞ்சமும் ஊழலும் நமது சமூகத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது என்பதாலோ என்னவோ, இதுபோன்ற கொடுமைகள் பெரிய அதிர்வலைகளை உருவாக்குவதில்லை. நமது குடியையே வேரறுக்கும் இதுபோன்ற லஞ்சப் பேய்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் போராட்டங்களுமே இப்போதைய தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.