எது தியாகம்? எது துரோகம்?
இந்திய நாட்டுக்கு இல்லாத பெருமைகளா? உயர்ந்து நிற்கும் இமயம்; தவழ்ந்தோடும் கங்கை - காவிரி முதலிய நதிகள்; தண்ணீர் தேங்கிய அணைகள், வளமான வயல்கள்; வளர்ந்தோங்கிய காடுகள், கனிவளங்கள் எனச் சொல்லிக்கொண்டே போக


இந்திய நாட்டுக்கு இல்லாத பெருமைகளா? உயர்ந்து நிற்கும் இமயம்; தவழ்ந்தோடும் கங்கை - காவிரி முதலிய நதிகள்; தண்ணீர் தேங்கிய அணைகள், வளமான வயல்கள்; வளர்ந்தோங்கிய காடுகள், கனிவளங்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இங்கேதான் மாமுனிவர்களும், மகாத்மாக்களும், மாமனிதர்களும் பிறந்தனர்; வாழ்ந்தனர்; வாழ்க்கைக்கான தத்துவங்களை வாரி வழங்கினர். இதிகாசங்களும், புராணங்களும், இலக்கியங்களும் செழித்து வளர்ந்தன.
மன்னர்கள் நீதி தவறாமல் ஆட்சி நடத்தினர்; மக்களின் மனம் கோணாமல் நல்லாட்சி புரிந்தனர்; குடிமக்களின் மனம் நோகாமல் வரி வாங்கினர்; இதனால் மாதம் மும்மாரி மழை பொழிந்தது; போரும் பூசலும் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்ந்தனர். இப்படிப்பட்ட இந்த நாட்டுக்கு இப்போது என்ன வந்தது?
ஊழலும், லஞ்சமும் கொடிகட்டிப் பறக்கிறது. மண்ணும், மணலும், மலைகளும் திருடப்படுகின்றன. ஏரிகள் காணாமல் போகின்றன. கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஏழ்மையை ஒழிப்பதாகக் கூறியவர்கள் ஏழைகளையே ஒழிக்கத் துடிக்கின்றனர். நாட்டை முன்னேற்றப் போவதாகக் கூறியவர்கள் தங்களையே முன்னேற்றிக் கொண்டார்கள்.
சுதந்திரம் அடைந்தால் பாலாறும், தேனாறும் பாயும் என்றார்கள். இப்போது எல்லா ஆறுகளிலும் தண்ணீருக்குப் பதிலாக சாக்கடைகளும், சாயக் கழிவுகளுமே ஓடுகின்றன. வளமான வயல்கள் எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்குப் பறித்துத் தரப்படுகின்றன. இவர்கள் எல்லாம் தேசத்தின் தியாகிகள் எனவும், இதைத் தட்டிக் கேட்பவர்கள் தேசத் துரோகிகள் எனவும் அரசே அறிவிக்கிறது; காவல்துறையை ஏவுகிறது.
நாட்டில் நடக்கும் அரசியல் அவலங்களைப் பார்த்து வேதனைப்பட்டு கேலிச்சித்திரங்கள் வரைந்ததற்காக அசீம் திரிவேதி என்ற கார்ட்டூனிஸ்ட் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல தங்களது வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதும் தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போது நாடெங்கும் பொது வேலைநிறுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. கடைகள் அடைக்கப்பட்டன; வாகனங்கள் ஓடவில்லை; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டமும், மறியலும் செய்துள்ளன. பல தொழில் நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்குக் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி என்னும் மும்முனைத் தாக்குதலை மத்திய அரசு பொதுமக்கள்மேல் தொடுத்துள்ளது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு செய்யும் மத்திய அரசின் முடிவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தொழில்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி, பலபொருள் சில்லறை வணிகத்தில் அனைத்துப் பொருள்களும் விற்கும்படியாக 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை நிறுவனங்களில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டில் குறைந்தது 50 விழுக்காடு கொள்முதல் உள்ளிட்ட கட்டுமானங்களில் மூன்றாண்டுகளுக்குள் முதலீடு செய்ய வேண்டும். மேலும் ஒரு பொருள் சில்லறை வணிகத்தில் 51 விழுக்காட்டுக்குமேல் முதலீடு செய்யும் வெளிநாட்டு விற்பனை நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்யும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பல பொருள் சில்லறை வணிகத்தை அனுமதிப்பது பற்றி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மிகக்குறைந்த முதலீட்டுத் தொகை 100 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது, சுமார் ரூ. 550 கோடியாகும். இந்த விற்பனை நிலையங்கள் 10 லட்சம் அல்லது அதற்கு மேல் மக்கள்தொகையுள்ள ஊர்களில்தான் அமைக்க வேண்டும்.
செப்டம்பர் 14 அன்று மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49 விழுக்காடு முதலீடு செய்யும் முடிவும் இத்துடன் நடைமுறைக்கு வரும். தொலைக்காட்சித் துறையில் டி.டி.எச். ஒளிபரப்புத் தொழில் நுட்பத்தில் வெளிநாட்டு முதலீட்டுக்கு இருந்த 49 விழுக்காடு உச்சவரம்பு 74 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கை இவ்வளவு அவசரமாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதுவும் நாடெங்கும் மக்கள் பொதுவேலை நிறுத்தமும், முழு கடையடைப்பும் நடத்திய அதே நாளில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதுதான் வேடிக்கை. "அரசாங்கத்துக்கு இப்படியொரு நிர்பந்தம் ஏற்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்கும் விதத்திலும், வணிகர்களின் அச்சத்தைப் போக்கும் விதத்திலும் தொலைக்காட்சியில் பிரதமர் உரையாற்றியுள்ளார். அவர்தம் உரையில், "வளமான எதிர்காலத்துக்குக் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளார்.
"இதையெல்லாம் சமாளிப்பதற்கு ஏது பணம்? பணம் மரத்தில் காய்க்கவில்லை. இந்த நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் வரவுக்கு மேல் தாங்க முடியாத அளவுக்கு அரசின் செலவுகள் கூடிவிடும்...'' என்றும் பயமுறுத்தியுள்ளார்.
இப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் மேலும் விலைவாசி கடுமையாக உயரும் என்றும், பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை இழந்தால் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்யத் தயங்குவார்கள் என்றும், இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும் பிரதமர் எச்சரிக்கை செய்துள்ளார்.
"இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு' என்று பேசிக்கொண்டால் போதுமா? மக்களின் எண்ணங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டாமா? மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுவிட்டு, "மக்களின் நலனுக்காகவே' என்று பேசுவது எப்படிச் சரியாகும்?
மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே ஒரு பொது வேலைநிறுத்தத்தை நாடு தழுவிய அளவில் நடத்திக்கொண்டிருக்கும்போது, அதைப்பற்றியே கவலைப்படாமல் - கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதமாக இருப்பதா?
அதற்கும் மேலாய், தங்கள் அறிவிப்புகளுக்கு அவசரம் அவசரமாகச் சட்ட நடைமுறைகளையும் அறிவிப்பது, குதிரை குப்புறத் தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்த கதையாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் முதலில் வணிகம் செய்வதற்காகவே இந்தியாவுக்கு வந்தனர். அதன் பின்னரே நாட்டை அடிமையாக்கி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். அவர்களை வெளியேற்றுவதற்காகப் போராடி, எத்தனை பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இப்போது அதே அன்னியர்களை "சில்லறை வணிகம்' என்ற பெயரால் அறைகூவி அழைக்கின்றனர். இதனை வேதனை என்று கூறுவதா? சோதனை என்று சொல்வதா?
ஊழலும், லஞ்சமும் தேசத்தின் பொருளாதாரத்தைத் தின்று தீர்த்துக் கொண்டிருப்பது பிரதமரின் கண்களுக்குத் தெரியவில்லையா? தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கி ஏப்பம்விட்ட வாராக்கடன்களை வசூல் செய்யாமல் விட்டு வைத்திருக்கும் இவருக்கு இப்போதுதான் "பணம் மரத்தில் காய்க்கவில்லை' என்ற மாபெரும் ரகசியம் தெரிந்திருக்கிறது.
உள்நாட்டு முதலைகளின் கள்ளப் பணத்தைப் பற்றி கணக்குத் தெரியாதா? வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சி நடப்பதாக இன்னும் எத்தனைமுறை கூறுவார்கள்? நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் செய்த தியாகம் என்ன? எல்லாவற்றையும் இழந்த ஏழை மக்கள்தான் எல்லா தியாகமும் செய்ய வேண்டுமா?
""இந்தியா ஒரு பெரிய நாடு. அது அளவில் பெரிய நாடு என்பதால் பெரியதாகக் கருதப்படவில்லை. இந்திய மக்கள் எண்ணத்தில் பெரியவர்களாய், இதயத்தில் பெரியவர்களாய், சிந்தனையில் பெரியவர்களாய், செயலில் பெரியவர்களாய் இருக்க வேண்டும்...'' என்று நேரு மனதார விரும்பினார். ஆனால், நடந்தது என்ன?
சுதந்திர இந்தியா வளர்ச்சியடைந்தது; மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. இப்போது இந்திய நாடு ஊழலில் பெரியதாய், லஞ்சத்தில் பெரியதாய், சுரண்டலில் பெரியதாய், மோசடியில் பெரியதாய் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள்தொகையில் விரைவில் இந்தியா, சீனாவையும் விஞ்சிவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவாசியின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் இருந்த செல்வந்தர்கள் இப்போது உலக அளவில் உயர்ந்துவிட்டார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாம் மத்திய திட்டக்குழுவின் தயவால் வறுமைக்கோட்டை ஒரேயடியாகத் தாண்டிவிட்டார்கள். இனிமேல் எந்தக் கோடும் அவர்களை எதுவும் செய்ய இயலாது.
ஆளும் அரசாங்கங்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த மக்களும் பணம் வாங்கிக் கொண்டுதானே வாக்களித்தார்கள்? மறுபடியும் பணம் கொடுத்தால் வாக்களிக்க மாட்டார்களா?
மத்தியில் ஆளும் அரசு, கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்கள் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து போராட்டமும் நடத்துவார்கள், மத்திய அரசோடு பதவியிலும் இருப்பார்கள். இதை "இரட்டை வேடம்' என்று கூற முடியாது. வேண்டுமானால் "ராஜ தந்திரம்' என்று கூறலாம்.
இவற்றையெல்லாம் பார்த்து தாங்க முடியாமல் ஒரு சிலர் குரல் கொடுத்தால் அவர்களை அடக்குவது சுலபம்; சட்டம் இருக்கவே இருக்கிறது. அவர்களைத் தீவிரவாதிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் கூறி, பிடித்து உள்ளே போட்டுவிடலாம்.
இப்போது கூறுங்கள்: எது தியாகம்? எது துரோகம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...