"தீதும் நன்றும் பதின்மூன்றால் வருமா?'
ஏற்கெனவே மாய இந்தியர்கள் நம்பிக்கையில் 13ஆம் நெடும் ஆண்டுக் கணக்கு முடியும். இதையே உலகக் கணக்கே முடிந்து போகும் என்று பீதி கிளப்பினார்கள். தார்ச்சுகுவெரா கல்வெட்டில் 13.0.0.0.0 என்று குறிக்கப்பட்டு இர


ஏற்கெனவே மாய இந்தியர்கள் நம்பிக்கையில் 13ஆம் நெடும் ஆண்டுக் கணக்கு முடியும். இதையே உலகக் கணக்கே முடிந்து போகும் என்று பீதி கிளப்பினார்கள். தார்ச்சுகுவெரா கல்வெட்டில் 13.0.0.0.0 என்று குறிக்கப்பட்டு இருக்கிறதாம்.
13 என்றால் பலருக்கும் பயம். விக்கா என்கிற குட்டிச் சாத்தான்கள் 13 பேர் அடங்கிய கூட்டமாகத்தான் திரிவார்களாம். கோவான்கள் (ஆங்கிலத்தில் "சாவான்கள்' என்றும் உச்சரிக்கலாம்!). 7 மோகனப் பேய்கள், 6 மோகினிப் பிசாசுகள், இவர்தம் ஜனநாயகத்தில் இன்றைய நம் அரசியல் மாதிரியே தலைவர்கள் சுழற்சி முறையில் பதவி ஏற்பவர்கள்.
அமெரிக்க தேசியக் கொடியிலும் 7 சிகப்புப் பட்டைகள், 6 வெள்ளை இடைவெளிகள். மொத்தம் 13. ஆதி காலத்தில் கொடி மூலையில் வட்டவடிவில் இடம்பெற்ற நட்சத்திரங்களும் 13. பின்னர் அதன் எண்ணிக்கை மாநிலங்களுக்கு ஏற்ப 50 ஆக உயர்த்தப்பட்டது. போகட்டும்.
ஸ்பானிய மொழியில் த்ரெசே என்றால் 13. அமெரிக்காவில் "க்சைக்கானோ' எனும் மெக்சிகோ கொள்ளைக் கும்பலின் 13ஆம் ஆசாமியை இந்தச் சொல்லால் குறிக்கின்றனர். பஞ்சப் பராரிகள், இவர்கள் மனித உரிமைப் போராளிகள். இவர்தம் இயக்கத்திற்கு "லா இமெ' (க்சிக்கன்) என்று பெயர். உள்ளபடியே மெக்சிகோ மாஃபியா என்பதன் முக்கிய முதல் எழுத்து "எம்'. ஆங்கில அகர வரிசையில் 13ஆம் எழுத்து. பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் 13.
சௌராஷ்ட்ரிய சம்பிரதாயப்படி, ஃபர்வார்தீன் எனும் ஈரானிய ஆண்டின் 13ஆம் நாள் கருப்பு தினம். தீமைகளின் ஆதிக்க நாள். அதனை "செஸ்தா பே-தார்' என்று வெறுத்து ஒதுக்குகிறார்கள். செஸ்டா என்றால் 13. அது வேண்டாமே என்பது பொருள். இன்றைக்கும் இசுலாமியர் அந்த 13ஆம் நாளில் நகரங்களைத் தவிர்த்துக் கிராமங்களில் உலாவும் வழக்கம் உள்ளது.
பையன்களுக்குத் தடுமாறும் விடலைப் பருவம் 13 ஆம் வயதில் தொடங்குமாம். அதனாலேயே ஆங்கிலத்தில் "டீன்' என்ற ஒட்டுச் சொல் "தேர்ட்டீன்' ஆகிய 13இல் இருந்து ஆரம்பிக்கும்.
கத்தோலிக்க வழக்கப்படி பதுவா நகரின் புனித அந்தோனி (பாதுகாப்பு மந்திரி அல்ல!) வழிபாடுகள் 13 செவ்வாய்க் கிழமைகள் (கால் ஆண்டுக் காலம்) நடைபெறும். ஒவ்வோராண்டும் ஜூன் 13 அன்று புனித அந்தோனியார் விருந்து. (நம் நாட்டில் மே மாத இறுதியில் பிரதமர் நடத்தினார்).
ஒருமுறை சுல்தான்பூர் நகரில் குரு நானக் தேவ்ஜி மக்களுக்கு உணவு தானம் செய்து கொண்டு இருந்தார். 13 ஆம் நபர் வந்தபோது தானத்தை நிறுத்திவிட்டு, "தேரா' (உனது)என்று மூன்று முறை உச்சரித்தாராம். பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் "தேராஹ்' என்றால் பதின்மூன்று என்றும் பொருள் உண்டு. காலி இனத்தின் முக்கிய வைகாசிப் பண்டிகை ஏப்ரல் 13 அன்று சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.
சீட்டுச் சூதாட்டத்திலும் ஒரு சாதிக்கு 13 சீட்டுகள். பெரும்பாலான விளையாட்டுகளில் 13 ஆட்டக்காரர்கள்தாம். இங்கிலாந்தில் அரண்மனை அம்மிணிகள் விளையாடிய கிரிக்கெட்டில் இன்று பெண்மணிகளையே விளையாடுகிறார்கள். இரவு ஆடம்பர விடுதிகளில் அமெரிக்க நாட்டியக்காரிகளுடன் குடியும், கும்மாளமும், மறுநாள் மட்டை அடி நேரத்தில் ஒரு அணியின் 2 பேரை களம் இறக்கிவிட்டு, ஒன்பது பேர் ஹாயாக காலரியில் அமர்ந்து சிகரெட், குளிர்பானம் குடிக்கிறார்கள். துட்டுக்குக் கள்ள ஆட்டம் வேறு. "டாஸ்' போடும் முன்னர் "டான்ஸ்' நடக்கிறது. களத்தில் விளையாடுபவர்களும் மொத்தம் 13 பேர்தான்.
பாருங்களேன், சமீபத்தில் கூடல் நகர் 292 ஆம் ஆதீனம் செய்துவைத்த மகுடாபிஷேகம் சர்ச்சைக்கு உள்ளாயிற்று. அதனை எதிர்த்த ஆதீனங்களும் 13 பேர். 292-ஐ இலக்கம் பிரித்துக் கூட்டினால் 13.
இன்னொரு செய்தி. 2000 ஆம் ஆண்டு மாநாட்டில் கையெழுத்து ஆன அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் இறுதி ஆவணத்தில் "13 வழிகள்' என்ற பத்தி இருக்கிறது.
விண்வெளி விபத்திலும் 13இன் திருவிளையாடல் உண்டாம்? 1970 ஏப்ரல் 11 அன்று 13 : 13 மணிக்குச் செலுத்தப் பெற்றது அப்போலோ -13. அந்த விண்கலனில் ஏப்ரல் 13 அன்று ஆக்சிஜன் வாயுக் கலன் வெடித்து விபத்து நேர்ந்தது. நல்லவேளை, விண்வெளி வீரர்கள் பிழைத்தார்கள்.
13 என்றால் மேனாட்டவர்க்கு அலர்ஜி. இதற்கு ஒரு விசேஷக் காரணமும் உண்டு. ஏசு நாதர் உடன் 12 சீடர்கள். அவர் முகாமில் 13ஆம் பேர்வழி யூதாஸ் இஸ்காரியத், ஏசுவைக் காட்டிக் கொடுத்தான். தானும் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டான்.
ஏதாயினும், கிறித்தவர்க்கு பதின்மூன்றும் வெள்ளியும் தீமையின் குறியீடுகள். ஜெருசலம் நகரில் சாலமன் ஆலயத்தின் செஞ்சிலுவைப் படைவீரர்கள் போரில் அவர்தம் புனித பூமியை இழந்த நிலையில் மக்களிடையே அதிருப்தி உண்டாயிற்று.
உலகின் முதலாவது பன்னாட்டு வணிக கார்ப்பரேட் நிறுவனம் ஆகவும் செஞ்சிலுவை அமைப்பு இயங்கி வந்ததாம். ஆங்கிலேயருடன் நடத்திய யுத்தத்திற்காக இந்த நிறுவனத்திடம் கடன்பட்டு இருந்தவர் நான்காம் பிலிப் என்ற பிரெஞ்சு மன்னர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பிக்க ஓர் உபாயம் கண்டார். அந்த ராணுவக் கோயிலார்கள் மீது பொய் வழக்குப் போட்டுக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார். அன்று 1307 அக்டோபர் 13 வெள்ளிக்கிழமை.
அதிகார பலத்தால் மிரட்டி வாக்குமூலங்கள் பெற்றார். ஆணைக்குப் படியாத சாட்சிகள் பலரை உயிரோடு எரித்துக் கொன்றார்.
1312 ஆம் ஆண்டு ஐந்தாம் கிளமண்ட் போப் ஆண்டவரிடம் கோள்மூட்டினார். செஞ்சிலுவைப் போர்க் குழுவையே கலைக்கும்படி உத்தரவிடச் செய்தார். 1300 ஆம் ஆண்டுகளில் சரியாக 700 ஆண்டுகளுக்கு முந்திய கதை இன்றைய அரசியல் மாதிரி நிழல் ஆடுகிறதா?
அறிவியல் ரீதியில் பார்த்தால், பூமி சூரியனைச் சுற்றி வரும்போது வானில் பல்வேறு விண்மீன் தொகுதிகளின் ஊடாக நகர்ந்து செல்வதுபோல் தோன்றும். அந்தச் சூரிய வீதியை 12 பெரும்பிரிவுகள் ஆகப் பகுத்து வைத்து இருக்கிறோம். ஆதி ஈரானியர் ஒவ்வொன்றையும்
"ராசி' என்றே வழங்கினர். "ரா' என்றால் சூரியக் கடவுள். மெசபடோமியக் கலாசாரத்தில் "சின்' என்றால் நிலா தேவன்.
""ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும்'' என்றே நாமும் வழிபடுகிறோம். சிதம்பரம் பிள்ளையார் கோயில் ஒன்றில் சூரியனைச் சுற்றி 12 ராசித் தோற்றம் சித்திரிக்கப்பட்டு உள்ளது. ஒரு வட்டத்தின் 12 ஆரங்களுக்கு இடையில் தீட்டப் பெற்றுள்ள மனித உருவங்கள். பன்னிரு ஆதித்யர்கள், தாத்ரி, மித்ரா, ஆர்யமன், ருத்ர, வருண, சூரிய, பாகா, விவஸ்வான், பூஷண், சவித்ரி, த்வஷ்டரி, விஷ்ணு. இதுவே அம்சுமத் பேதாகமம், சுப்ர பேதாகமம், சில்ப ரத்னம், மத்ஸ்ய புராணம் ஆகிய நூல்கள் காட்டும் சூரிய உருவ அமைப்பு.
ரூபன், சிமையோன், லேவி, யூதா, சாபுலோன், இசக்கார், காத், ஆசார், நெப்தலியோ, சூசை, நசரேயன், பெஞ்சமின் - ""இவர்கள் எல்லோரும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்'' எனச் சுட்டுகிறது விவிலியத்தின் பழைய ஏற்பாடு (ஆதி ஆகமம் 49 : 28).
ஆண்டுக் கணக்கு கிறிஸ்துவிற்கு முன், பின் (கி.மு., கி.பி.,) என்றோ, திருவள்ளுவர்க்கு முன், பின் (தி.மு., தி.பி) என்றோ அமையட்டும். ஏதானாலும் ஒரு ஆண்டில் 13 பௌர்ணமிகள் தோன்றுவது இல்லை. மாதங்களும் 13 இல்லை. ராசிகளும் பன்னிரண்டே. 13 ராசி இல்லை. இதுவே ""13 ராசியில்லை'' என்று ஆகிவிட்டது.
இத்தாலி மொழியில் "த்ரெதிசி' (வடமொழியிலும் திரியோதசி) என்றால் 13. துன்பம் நேரும்போது "தலைவிதி' என்று அலுத்துக்கொள்பவர் முணகும் சொல் இது. இன்று போப்பாண்டவர் "இல்லற' ரகசியங்கள் வாட்டிகன் சமையல்காரன், வங்கி மேலாளர் வழி கசிந்ததாக இத்தாலியில் பரபரப்பு. இந்தியாவிலும் ராணுவக் கடிதங்கள் கசிகின்றன.
2013 இல் தேர்தல் வருமோ என்னவோ? சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் சுதந்திரம் இல்லாத மாண்புமிகு 13ஆம் பிரதமர் பாடு கஷ்டம். அமைச்சகத்திற்கும் தேசிய ஆலோசனைக் குழுவிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறார். ஊழலுக்கு எதிரான போராட்டக் குழுவின் அறிக்கைப்படி, குற்ற விசாரணைக்கு உள்பட வேண்டிய மத்திய மந்திரிகளும் 13 பேர்.
இனிவர இருக்கும் குடியரசுத் தலைவரும் 13ஆம் நபர். எந்தக் கட்சிக்காரரோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...