ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்!

இன்று தகவல் தொழில்நுட்பத் துறையின் தேசியக் கெட்ட வார்த்தை "ஸ்பெக்ட்ரம்' தனித்தனி அதிர்வெண் அல்லது அலைநீளக் கதிர் அலைகள். தகவல் தொடர்பிற்கான "ரேடியோ ஸ்பெக்ட்ரம்' (வானலைக் கற்றை) ஒதுக்கீடு, பயன்பாடு ஆகி

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:22 pm

நெல்லை சு. முத்து

இன்று தகவல் தொழில்நுட்பத் துறையின் தேசியக் கெட்ட வார்த்தை "ஸ்பெக்ட்ரம்' தனித்தனி அதிர்வெண் அல்லது அலைநீளக் கதிர் அலைகள். தகவல் தொடர்பிற்கான "ரேடியோ ஸ்பெக்ட்ரம்' (வானலைக் கற்றை) ஒதுக்கீடு, பயன்பாடு ஆகிய பணிகளை ஒருங்கிணைப்பது இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் நிறுவனம்.

 அந்தப் பன்னாட்டுத் தொலைத்தகவல் தொடர்பு ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் 1969 மே 17 அன்று நிறுவப்பட்டது. அதனை ஒட்டி ஆண்டுதோறும் மே 17 "உலகத் தொலைத்தகவல் தொடர்பு மற்றும் தகவல் கழக தினம்' ஆகக் கொண்டாடப்படுகிறது. இணையம் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களால் சமுதாயமும் பொருளாதாரமும் உயரும் என்பதை வலியுறுத்தும் நாள்.

 ஆனால், இணையத்தில் "நின்று' நிலைப்பவர் ஒரு வழுக்கைத் தலைவர். லோக்பால் நிறைவேற்ற வேண்டிய ஆட்சிக் குழுவின் ஆசாமிக்கு "அலுவலக' வேலை அதிகம். பதவி உயர்வு சிபாரிசு வேண்டி வந்த பெண் ஒருத்தியைச் சட்டப் புத்தக அறையிலேயே ஆபாசத்தில் ஈடுபடுத்துகிறார்.

 ஆயுதம் பேரம் தொடர்பாக பாவம், ஒரு லட்சம் பெற்றதற்கே ரகசியப் படப் பதிவு சாட்சியால் அமைச்சர் ஒருவர் கம்பி எண்ணும்படி ஆயிற்று. ஆனால், பல லட்சங்கோடி ஊழல் தம்பிகள், அவரவர் எச்சங்கள் ஆன நன்மக்கள் தங்கக் கம்பிகளாய் விறைத்து நடக்கிறார்கள்.

 சமீபத்தில் 2011 அக்டோபர் 31-ஆம் நாள் சுவிஸ் வங்கி மேலாளர் மார்ட்டின் டி சாபின்டோ கையெழுத்து இட்டக் கடிதம் ஒன்று முச்சாவி முத்திரையுடன் இணையத்தில் உலா வருகிறது. மொத்த வைப்பு நிதியில் இந்தியர்களின் பங்கு 56 சதவிகிதம் என்கிறார், மெய்யோ, பொய்யோ? 1,89,100 கோடி டாலர். ஏறத்தாழ கோடி கோடி ரூபாய் நம் பணம். ""உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்; எம்முளே தெரிந்தவர் ஈங்கிலை'' என்பார் பாரதி. சுவிஸ் வங்கி பற்றிப் பாடவில்லை. "சாதாரண வருஷத்துத் தூமகேது'விடம் கேட்டால் கூட பதில் வரும் போல. அத்தனைக்கு நம் தலைவர்கள் அமுக்கவாதிகள்.

 அதில் 1,98,356 லட்சம் கோடி அதிபர், முன்னாள் ராஜாங்கச் சக்கரவர்த்திக் கணக்கு, இணைவியுடன் கூட்டுக் கணக்கு என்பதால் இன்றைக்கும் மன்னர் பெயரிலேயே இருக்கிறதோ? பத்தாவது இடத்தில் இருப்பவர் கையில் 7,856 கோடியுடன் வடக்கே ஜாமீன் வரிசையில் நிற்கிறார்.

 இவரது தலைவர் அசைக்க முடியாத ஐந்து மடங்கு கனமானவர். இவர்களின் மகனோ, மகளோ, தம்மின் தம் மக்கள் பணம் உடையர் ஆக இருப்பதில் பெருமைப்படுபவர்கள். இந்த "டாப் டென்' பட்டியலில் தமிழ்க் குரவர் நால்வர் என்பதில் வாக்களித்த நாம் புளகாங்கிதம் அடையலாம்.

 இதற்கு மத்தியில் தகவல் தொடர்புத் துறைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இன்னொரு சாதகப் பொருத்தமும் இருக்கிறது.

 இந்த சர்வதேசத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமைச் செயலகம் ஜெனீவாவில்தான் இயங்கி வருகிறது என்பது துணுக்குச் செய்தி.

 நம் அமைச்சர்களுக்கு வயிற்று வலி வந்தால் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை கிடையாதா? அமெரிக்கா பறக்கிறார்களே. யார் கண்டது, தத்தம் அயல்நாட்டு வங்கிக் கணக்கைக் கண்காணிக்கவோ என்னவோ? அண்டை மாநிலத்தோடு இவர்கள் சண்டை போட மாட்டார்கள். போட்டால் அங்கு உள்ள அவர்தம் சொத்துபத்து விவரப் பொக்கணம் அவிழ்ந்து விடுமே.

 ஏதாயினும் இந்தத் தகவல் தொடர்புத் தினத்தை ஒட்டி இந்த ஆண்டின் லட்சிய மொழி - "பன்னாட்டு தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறையில் மகளிர் மற்றும் சிறுமியர் மேம்பாடு'.

 ""சமீபத்தில் இந்தியக் கணிப்பொறியில் மென்பொருள் அற்புதம் நிகழ்த்தியவர்கள் எல்லாருமே' சாதாரண இளம்பெண்கள், ஆடவர்கள். அவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூட இயலாமல் இருக்கலாம்; என்றாலும் உலகளாவிய வணிகப் போட்டியில் உயர்ந்து நிற்கப் போதிய அளவுக்குக் கணிப்பொறி இயக்கும் விதிமுறைக் கையேடுகளை வாசித்துக் கணிப்பொறிகளை இயக்குவதில் நிபுணத்துவம் பெற அவர்களால் முடிகிறது'' என்பார் டாக்டர் கலாம். (இந்தியா - 2020, பக். 68 -69).

 இருந்தாலும், அலுவல் சார்ந்து இன்றைய தகவல் தொழில்நுட்பப் பெண்கள் சந்திக்கும் சவால்கள் கமுக்கம் ஆனவை. "இருள் தின்னும் இரவுகள்' என்ற அதிநவீனப் பெண்ணிய நாவல் சித்திரிக்கும் காட்சிகளும் இங்கு நடக்கின்றன.

 இரவு நேரப் பணிகளில் ஈடுபடும் பட்டதாரி மங்கையர்தம் பெற்றோர்கள் ஒருமுறை அதைப் படித்து வைக்கலாம். போலிப் பெயர்களில் அமெரிக்கத் தொனியில் எதற்கு எல்லாம் ஆள்பிடிக்கிறார்கள் என்பதும் புரியும்.

 கணினித்துறை என்று இல்லை, மங்கையர் மனம் கெடுக்கும் சின்னத்திரை மறுபக்கம். கொஞ்சம் சதை, கொஞ்சம் உதை, தமிழ்ப்படம் என்பார் இதை என்றுதான் ஹைகூ எழுதத் தோன்றுகிறது. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கணினி இளைஞர் ஒருவர் சத்தியப் பிரமாணமே செய்கிறார்.

 பெண்கள் முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கும்போது, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் "பத்ம பூஷண்' டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியும் நினைத்துப் பார்க்கலாம். அவர் பிறந்த புதுக்கோட்டைக்கு மட்டுமல்ல நூற்றாண்டு. அவர் மருத்துவப் பட்டம் பெற்றதன் நூற்றாண்டும் இதுவே. அன்றியும், 1926-ஆம் ஆண்டு உலகிலேயே மேலவை உறுப்பினர் ஆன முதல் பெண்மணி இவர். சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் அம்மையார், மகாத்மா காந்தி போன்ற தேசப் பற்றாளர்களால் ஈர்க்கப்பட்டவர்.

 உண்மையாகவே நாட்டுக்கு உழைத்தவர். அன்னிய வர்த்தக நிறுவனப் பங்குகள் வாங்கிக் குவிக்கவில்லை. இவரது முயற்சியினால் அடையாறு புற்றுநோய் நிறுவனம் உருவாயிற்று என்றால் பாருங்களேன். இன்றோ பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிவிட்டாலே கேட்க வேண்டாம். அதிலும் ஆளுங்கட்சி என்றால் அதுவே பரம சுகம்.

 இன்றைய சாணக்கியச் சூத்திரம் ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. மோசடி வழக்குகளில் இருந்து விடுபட ஒரே வழி, அமைச்சரா கிவிடுவதுதான். அப்புறம் அறிக்கை, மறுப்பு, மறு அறிக்கை, கண்டனம், விசாரணை, குறுக்கு விசாரணை, சாட்சி, தடயம், ஒத்தி வைப்பு, கீழ் மன்றம், மேல் மன்றம், பரலோகம் என்று வழக்கு முடியும்போது கொள்ளுப் பேரர்களுக்கா தண்டனை தர முடியும்?

 இதே அரசியல் உத்தியை இன்று ஆதீனங்களும் கடைப்பிடிக்கின்றன. வழக்கில் சிக்கிக் கொண்டால் தடாலடியாக மடத்தில் புகுந்து மகுடம் தரித்துக்கொள்வது உசிதம். பீடாதிபதியை நீதிபதி விசாரிக்கக் கூடாது என்கிற கண்ணாடிக் கவசம் வேறு. அந்த மடத் தலைவரோ ஆன்மிகவாதிக்குப் பெண் தொடர்பு இருப்பது ஒன்றும் தப்பே இல்லை என்று நல்வாக்கே அருள்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் பெருங்கடவுளர் பலருக்கும் பிள்ளைகுட்டிகள் உண்டே என்றும் ஒருவேளை வாதாடலாம்.

 உறவினர் கொலை வழக்கில் உதவி, கூட்டுறவு வங்கி திவால், கரும்புத் தொழிற்சாலைப் பங்கு மோசடி என்று எல்லாம் தகவல் ஊடகங்களில் அடிபட்ட ஒருவர்க்கு வேண்டும் என்றே பட்டம் சூட்டினோம். இன்றைக்கும் தங்கள் உள்வீட்டு, வெளிநாட்டு நிதி விவரம் அறிந்த கிழப் புள்ளியையே அனைத்து நிதி மிகுந்தவர்களும் கூடி அதிபர் ஆக்கினாலும் ஆச்சரியம் இல்லை.

 போகட்டும். நவீன இயற்பியல் அகராதியில் இன்னொரு பிராந்தியக் கெட்ட வார்த்தை - ரேடியேஷன். குருவிக் குளம் முதல் கூடங்குளம் வரை அனைவராலும் சகட்டுமேனிக்கு உச்சரிக்கப்படுகிறதே. சில நேரங்களில் சில மனிதர்களுக்குக் குறைந்த அளவு கதிர்வீச்சு நல்லது. புற்றுநோய்ச் சிகிச்சையிலும் ரேடியேஷன் மருந்தாகிறது.

 மேனாட்டு ஆய்வு ஒன்றின்படி, அளவான கதிர்வீச்சினை உள்வாங்கிய நூற்றுக்கு 84 பேர் 12 ஆண்டுகள் ஆயுள் அதிகரித்தது. கதிர்வீச்சு ஏற்காதவர்கள் பாதிப் பேருக்கு ஆயுள் 9 ஆண்டுகள்தாம் கூடுமாம். அதனால் அளவோடு கதிர்வீச்சு ஏற்பது உயர்ச்சி.

 1896-ஆம் ஆண்டு யுரேனைல் சல்ஃபேட்டு உப்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினை பெக்குரேல் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்த பெக்குரேல் கதிர்களுக்கு கியூரி அம்மையார் "ரேடியேஷன்' என்ற கலைச்சொல்லை வழங்கினார். இதற்கென 1903-ஆம்ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.

 உள்ளபடியே, சூரியனின் கண்ணுக்குப் புலனாகும் கதிர்வீச்சு - ஒளி. சின்னத்திரை, கணினித் திரை எதற்கும் கதிர்வீச்சு உண்டு. இருண்ட பொருளும் வெம்மைக்கு ஏற்ப வெப்பக் கதிர்வீச்சு உமிழும். கைப்பேசியைக் காதோடு காதாக ஒரு கையால் பொத்தி, மறு கையால் வாய் வழி பருகுவதுபோலப் பேசுகிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோமே, அப்போது நம் கபாலத்தில் புகுவதும் ரேடியேஷனே.

 தவறான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், வெயில் புழக்கம் என்றாலும் ஆயுள் குறையத்தான் செய்யும். குடும்பத்தில்கூட ஒருவர்க்கு மட்டும் புற்றுநோய் வருவது ஏன்? கதிர்வீச்சு படுவதற்கு முன்னமேயே அவர் இறந்தால் கதிர்வீச்சு மீது ஏன் வீண்பழி?

 மாரிலாந்து மாகாணத்தில் பால்டிமோரில் ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக் கழகத்தினர் மீன்பிடி இனத்தவரில் 52 ஆண்களையும், 77 பெண்களையும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்தனர். அவர்கள் தலைமுடியில் லட்சத்தில் 0.4 பங்கு பாதரசம் இருந்தது. எங்கிருந்து வந்தது?

 ஒரு தங்கச் சுரங்கத்தில் வெளிப்பட்ட பாதரச எச்சங்கள் ஆற்று நீர் வழியே கடலில் கலந்து இருந்ததாம். பாதரசம் மீன்களின் உடலுக்குள் பாக்டீரியா தூண்டுதலால் மீத்தைல் பாதரசம் ஆயிற்று - ஆபத்தான நச்சு.

 பாதரசம் தலைமுடியில் குடியேறினால்கூட பரவாயில்லை. ஒரு மாதத்தில் ஐந்து முறை மீன், கருவாடு சாப்பிடுபவர்கள் தாய்ப்பாலில் பாதரசம் கலந்து இருக்க வாய்ப்பு உள்ளதாம்.

 ஜப்பானிய ஆய்விலும் மற்றோர் அதிர்ச்சித் தகவல். 67 சதவிகிதத் திமிங்கல இறைச்சிப் பொருள்களில் பாதரசம் அடங்கி இருக்கிறதாம். டால்ஃபின்களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு பாதரசம் உள்ளதாம்.

 பாதரசம் தானே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட முடியாது. "ஆட்டிசம்' என்கிற தன்பித்த நோய்க்காரணி இது. அந்த நோயாளிகள் தங்கள் மனம், தங்கள் கற்பனை என்று தங்களுக்கு உள்ளேயே சஞ்சரிப்பவர்கள். முட்டாள்கள் மாதிரி வாதாடுவார்கள். முழுப் பைத்தியக் கேள்விகள் கேட்பார்கள். விடைகள் அவர்களுக்கு முக்கியம் இல்லை. ஒருவகையில் சுய பித்தர்கள்.

 இன்றைய அரசியல்வாதிகளில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

 இன்றைய சாணக்கியச் சூத்திரம் ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. மோசடி வழக்குகளில் இருந்து விடுபட ஒரே வழி, அமைச்சராகி

 விடுவதுதான். அப்புறம் அறிக்கை, மறுப்பு, மறு அறிக்கை,

 கண்டனம், விசாரணை, குறுக்கு விசாரணை, சாட்சி, தடயம்,

 ஒத்தி வைப்பு, கீழ் மன்றம், மேல் மன்றம், பரலோகம் என்று வழக்கு முடியும்போது கொள்ளுப் பேரர்களுக்கா தண்டனை தர முடியும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.