ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காந்தி கண்ட ராம ராஜ்ஜியம்

இப்போது எல்லாம் அவரவர் விரலை வைத்து உங்கள் கண்ணில் குத்தச் செய்வதுதான் அரசியல் அதிரடி வியூகம்.  பாரதத் தாயின் வலது தோளில் ஒரு நாடு, இந்திய இளைஞனை வைத்தே இங்கு நடத்தியது பயங்கரத் துப்பாக்கிச் சூடு. கேட

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:54 pm

நெல்லை சு. முத்து

இப்போது எல்லாம் அவரவர் விரலை வைத்து உங்கள் கண்ணில் குத்தச் செய்வதுதான் அரசியல் அதிரடி வியூகம்.

 பாரதத் தாயின் வலது தோளில் ஒரு நாடு, இந்திய இளைஞனை வைத்தே இங்கு நடத்தியது பயங்கரத் துப்பாக்கிச் சூடு. கேட்டால் குற்றவாளி உங்கள் ஆசாமிதானே என்று அலட்சியமாகத் தப்பிக்க அபூர்வ வழி. அவ்வாறே, தமிழ் இனத் தலைவருடன் அணி வகுத்தே நம் காலடியில் ஒரு "கண்ணீர்த் துளி' நாடு. இந்து மாக்கடலை உப்புக் கரிக்க வைத்தது. ""கருணைமிக்க'' இருவர் கைங்கரியம். ஒருவர் வெளிநாடு வாழ் தமிழர். இன்னொருவர் இங்கே தானாம்.

 ÷ஏற்கெனவே நாட்டில் குழப்பங்கள் அதிகம். பஞ்ச பூதங்களில் அஞ்சிலே ஒன்று (நிலம்) பெற்ற ஆதர்ஷ் ஊழலில் இராணுவத் தியாகிகளின் வாரிசுகள் வயிறு எரிந்தனர். மாநில மந்திர ஆலயம் (தலைமைச் செயலகம்) தானாகப் பற்றி எரிந்தது. என்ன மந்திரமோ, அஞ்சிலே ஒன்று (ஆகாயம்) வழியாக தொலைத்தகவல் தொடர்பில் அனுமதி வழங்கிய உள்துறை அலுவலகத்திலும் அதே அஞ்சிலே ஒன்று (நெருப்பு) தீண்டிப் பார்த்தது. "ஆலயம் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்' என்றார் மகாகவி, அவற்றுக்கு இன்று தீ வைக்கிறார்கள்.

 ÷மாநிலங்களில் அஞ்சிலே "ஒன்று'க்கான (சாக்கடை நீர்) துவாரங்கள், ஆழ்குழாய்ப் பள்ளங்கள் உயிர்ப்பலி வாங்கும் பல்லாங்குழிகள் ஆகிவிட்டன. அஞ்சிலே ஒன்று பெற்றானாகிய "வாயு' புத்திரன் அனுமனுக்காக பாடப்பட்ட பாடல் நூற்றாண்டுகள் கடந்து அர்த்தம் ஊட்டுகிறது.

 ÷பாருங்களேன், அரசு உணவுக்கிடங்கு ஒன்றில், 15,000 டன்கள் தானியங்களை எலிகள் தின்றுவிட்டதாம். இந்த நூற்றாண்டின் சிறந்த அறிவியல் புனைகதைக்கான நோபல் விருதினை உத்தரப் பிரதேசத்திற்கு வழங்கலாம். ஓர் எலி ஆண்டுக்கு 2 கிலோ வீதம் கொரிக்கட்டும். உணவுக் கிடங்கில் 75 லட்சம் எலிகள் பதுங்கி இருக்குமோ? அதுவும் 2 லட்சம் ஏழைச் சிறுவர்களுக்கான கோதுமை, அரிசி தானியங்களை இரண்டு கால் எலிகள் தின்றுவிட்டுப் போகட்டும். பெருச்சாளிகள் சணல் சாக்குகளையுமா விட்டுவைக்கவில்லை?

 ÷இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தினர், விமானிகள் எவருமே துறை அமைச்சர்களின் சொல்பேச்சைக் கேட்கத் தயாரில்லை. அந்த அளவுக்கு நம்பிக்கை(?)

 ÷அதிகாரிகள், ஊழல்வாதிகளின் முகவர்களாகவே செயல்பட வேண்டி இருக்கிறதாம். போர் வாகனங்கள் ஆகட்டும், வீரர்களுக்கான ரேஷன் உணவு ஆகட்டும் இதே நிலை. காவல்துறை மாமூல் பற்றிக் கேட்கவே வேண்டாம். அரசு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாமல், ஏல முறை இல்லாமலேயே மாநகர்ப் பேருந்து நிலையத்திலோ, காய்கறிச் சந்தையிலோ கடைகள் சுயேச்சையாக இயங்கி வருகின்றனவாமே. விலைவாசி ஏற்றத்தில் விவசாயி, வியாபாரி அனைவரும் பாவம். முதலீடே இல்லாத தரகர்க்கு லாபம்.

 ÷ஆட்டோ ஓட்டுநர்களிடம் மீட்டர் கட்டணப் பேச்சு எடுத்தால் அவ்வளவுதான். நம் மீது ஆட்டோ ஓட்டியே கொன்றுவிடுவார்கள் போல. அவர்கள் கந்துவட்டிக்கார்களுக்குக் கொடுத்த மூன்னூறு மடங்கு வாகன வரிக் கட்டணத்தை எவரிடம் வசூலிப்பது என்று அங்கலாய்க்கிறார்கள். பெட்ரோல் விலையேற்றமா, எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி பெறுவதில் ஊழல்வாதிகளுக்கு அளித்த "தொகை'யை, மக்கள் மடியில் இருந்து பறித்தால்தானே ஆயிற்று. அவர்தம் வாதத்திலும் தேசிய நியாயம் தெரிகிறது. விலையைக் கூட்டுவது போலக் கூட்டிக் குறைப்பது போலக் குறைக்கிறார்களாம்.

 ÷இதற்கெல்லாம் அரசைக் குறை கூறி பஸ்களை எரிக்க வேண்டாம். கடைகளைச் சூறையாடத் தேவையில்லை. யாருக்கு வாக்கு அளித்தோமோ அவர்கள் வீட்டுக்கு வெளியேதான் தொகுதி மக்கள் திரண்டு தர்ணா செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்த்து ஊழியர்கள் அதன் வாசலில்தானே உட்காருகிறார்கள். மருத்துவச் சட்டத்திற்கு எதிராக மருத்துவமனைகளில் தானே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சாலையோரம் மனிதச் சங்கிலி நடத்துவதும், போக்குவரத்து மறியலும் பகுத்தறிவு அல்லவே!

 ÷வெள்ளைக்காரன் ஆட்சியில் 1930-ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கைது ஆனதுதான் தாமதம். தமது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாராம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றோ "மகாத்மாக்கள்' கைது ஆகிறார்கள். அவர்களுக்கு என்ன, காலையில் நீதிமன்றத்திலும், மாலையில் ஆட்சி மன்றத்திலும் கையெழுத்து இடுவதோடு சரி, ஜனநாயகக் கடமை முடிந்தது.

 ÷ஏதாயினும், குறைந்தபட்சம் அறிவுக்கு வேலை கொடுப்போம். அன்றைய வடமொழி எதிர்ப்பு ஆகட்டும், இந்திய அரசியல் சாசனக் குழுத் தலைவரைச் சாட்டையுடன் யாரேனும் முடுக்கினார்களோ என்னவோ? முன்னாள் பிரதமருக்குக் கருப்புக்கொடி காட்டியதை இன்றைக்குக் கேலிச் சித்திரம் ஆக்கினால் பாடம் தவறு ஆகுமா?

 ÷வானவியல் ரீதியில் ஜூன் 22 அன்று சூரியன் தோன்றும் திசை வடகிழக்கு. டிசம்பர் 21 அன்று தென்கிழக்கு. இதில் சூரியன் உதிக்கும் திசை எந்தக் கிழக்கு? முதல் வகுப்புப் பாடத்தை அறிவியல் திறனால் மேல் வகுப்பு மாணவர் மறுபரிசீலனை செய்வதில் தப்பில்லை. அதிலும் பூகோள அடிப்படையில் தமிழகத்தினர்க்கு சூரியன் கிழக்கே கடலில் உதிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை இடுக்கில் மறைவதுதான் நித்தியக் காட்சி.

 ÷அறிவியல் ரீதியில் சிந்திக்காமல், "கலக'த் தலைவர் சொன்னதே வேதவாக்கு என்பது இன்னொரு மூட நம்பிக்கை. அவரைப் போய் ஆண்டவரோடு ஒப்பிடுவது எந்தப் பெரியார் கற்றுத்தந்தது? அதிலும் பாருங்களேன், இன்றைய "தமிழ்' இனத் தலைவர்களை எடுத்துக் கொண்டால், அவர்தம் இயக்கத் தலைவர்களுக்கும் "தாய்'மொழி வேறு. வாய்மொழி வேறு ஆயிற்றே. "ஒரிஜினல் ஆரிய' வளாக வாசலில் அமர்ந்தபடி சுய மரியாதை வீண் பேச்சு அல்லவா?

 ÷அதனால்தான் "பூமி சாஸ்திரம்' (1832) என்கிற முதலாவது அறிவியல் தமிழ் நூல் முகப்பில் இப்படி ஒரு முத்திரை மொழி: ""தமிழருக்கு அறிவுண்டாகும்படி (பாளையங்கோட்டையிலுள்ள இரேனியுசையாரால்) செய்யப்பட்டது''. சார்லஸ் தியோஃபிலஸ் எவால்டு இரேனியஸ் எனும் ஜெர்மன் பாதிரியார் வெளியிட்ட தமிழ்ப் புத்தகம் அரசியலுக்கும் பொருந்தும்.

 ÷ஏற்கெனவே ஊழல், சதி போன்ற பிரச்னைகளும் சர்ச்சைகளும் கொண்டவரை அதிபர் ஆக்கியே தீருவோம் என்று ஆக்கினார்கள். அவரும் பேரன் பேத்திகளுக்கு அயல்நாட்டினர் செலவில் உலகம் சுற்றிக் காட்டி, பாட்டி பாசத்தைக் கொட்டியது தேச நலன் அல்லவா? ஜென்ம சாபல்யம் அடைந்து இருக்கிறார்.

 ÷போகிற போக்கில், 16 வயசு மங்கை கற்பழிப்பு, 7 வயசுச் சிறுவன் உயிர்ப் பலி, திருமண வீட்டில் 17 பேர் சுட்டுக் கொலை - எல்லாம் சாதாரணக் குற்றங்கள். ஆயுள் தண்டனை போதும் என்று அருள் வழங்கியும் விட்டார். வேறு என்ன செய்ய? இத்தகையக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மத்தியில் தானும் பல ஆண்டுகள் காலம் தள்ளியவர் ஆயிற்றே. ஐந்து ஆண்டு ஆட்சிக்கு ஆதரவுக் கையெழுத்துப் போட்ட கடனுக்காக ஐந்து ஏக்கராவது தராவிட்டால் எப்படி என்பது அவர் ஆதங்கம். ஏதாயினும், இந்தப் பதவியின் தேசியக் கம்பீரமும், உலகளாவிய பெருமையும் சர்ச்சைக்கு உள்ளாகிறது.

 ÷அரசு ஊழியர் ஆதாயம் தரும் வேறு பதவிகள் வகிக்கக்கூடாது என்றார் "மக்கள் ஜனாதிபதி'. அரசியல் சாசனத்தை அட்சரம் பிசகாமல் சொன்னதால் அவர் மீது ஒருத்தருக்குக் கடும் எரிச்சல். சுய விளம்பர விழாவுக்கு வராததில் உள்ளூரில் இன்னொருத்தருக்கு டெங்குக் காய்ச்சல்.

 ÷தங்கள் மாநில நிதியை வழங்கினால்தான் உங்கள் வேட்பாளருக்கு வாக்கு, இல்லை என்றால் கொசுவுக்கு என்று சில முதல் அமைச்சர்களே நொடிக்கிறார்கள். அங்கே திட்டக்குழு கழிப்பறைக்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் செலவு. ஆகாதா பின்னே, குழுவில் அத்தனை அசுத்தம்.

 ÷ஒருவழியாக வெள்ளை அறிக்கையாய்ப் பொய்க் கணக்கு வாசித்தவர்க்கு மொய் எழுதி ஆயிற்று. ஆளும் கட்சி அமைச்சர் ஒப்பனை அறையில் குப்பாயத்தை மாற்றிவிட்டு வந்ததால் நடுநிலையாளர் ஆகிவிடுகிறாராம். நாட்டின் பொருளாதாரத்தைக் கோவில் தேர் மாதிரி குடைசாய வைத்துவிட்டவர். குடியரசுத் தலைவர் "நியமனம்'தான் நடக்க இருக்கிறது. எல்லாம் குழாயடிச் சண்டை மாதிரி ஆகியும்விட்டது.

 ÷"அத்தனைக்கும் ஆசைப்படு' என்கிறார் சத்குரு ஜக்கிவாசுதேவ். அவர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ""பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் ஜனநாயகம் என்றால், அதைவிட ஒரு புத்திசாலியின் சர்வாதிகாரம் மேல்''. நம் நாட்டில் அதிசயத்துக்கு இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறதே? இவர்கள் நாட்டையே மாற்றுவாரோ? நாட்டை ஏமாற்றுவாரோ?

 ÷ஜனநாயகத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்காட்டும் நாம், குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்களையும் மக்கள் மன்றத்தில் ஊடாட விடலாமே. தேர்தல் என்று வந்துவிட்ட பிறகு அவர்களும் தங்கள் செயல்திட்டம், தொலைநோக்கு, சாதனை, கொள்கை, தகுதி விளக்கங்களை விவாதிட முன் வரலாமே. இல்லையென்றால் கவியரசர் சொன்னதுதான் நினைவுக்கு வரும்.

 ÷""காந்திஜி ஒரு ராம ராஜ்ஜியத்தைக் கனவு கண்டார். இன்று - ஏராளமான மனிதர்கள் இந்த ராம ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குரங்குகள் இல்லாமல் ராம ராஜ்ஜியம் ஏது?''

 ""அரசு உணவுக்கிடங்கு ஒன்றில், 15,000 டன்கள்

 தானியங்களை எலிகள் தின்றுவிட்டதாம். இந்த நூற்றாண்டின் சிறந்த அறிவியல் புனைகதைக்கான நோபல் விருதினை

 உத்தரப் பிரதேசத்திற்கு வழங்கலாம். ஓர் எலி ஆண்டுக்கு

 2 கிலோ வீதம் கொரிக்கட்டும். உணவுக் கிடங்கில்

 75 லட்சம் எலிகள் பதுங்கி இருக்குமோ?''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.