இளைஞர்களைக் கவரும் புரட்சித் துறவி
துறவிகள் இம்மைக்குப் பயன்படாமல் மறுமைக்கு மட்டும் பயன்படும் விஷயங்களைப் பேசுபவர்கள் என்றிருந்த நிலையை மாற்றி, இம்மை - மறுமை இரண்டிலும் உயர்வதற்கான மார்க்கத்தைக் காட்டிய புரட்சித் துறவி சுவாமி விவேகானந


துறவிகள் இம்மைக்குப் பயன்படாமல் மறுமைக்கு மட்டும் பயன்படும் விஷயங்களைப் பேசுபவர்கள் என்றிருந்த நிலையை மாற்றி, இம்மை - மறுமை இரண்டிலும் உயர்வதற்கான மார்க்கத்தைக் காட்டிய புரட்சித் துறவி சுவாமி விவேகானந்தர். ஆன்மிகம் வயோதிகர்களுக்குத்தான் என்றிருந்த சிந்தனைப் போக்கை உடைத்தெறிந்து, அது வயோதிகர்களுக்கு மட்டுமானதல்ல, ஆன்மிகம் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு மிக மிக அவசியம் என்று போதித்தவர்.
ஓர் இளைஞன் நெருப்பைப் போன்ற ஒழுக்கத்துடனும் துடிப்பான செயலாற்றலுடனும் வாழ்வில் வரும் எல்லாச் சோதனைகளையும் வெற்றிகண்டு பெரும் சாதனைகளைப் படைக்க வேண்டுமானால் அவன் விவேகானந்தரைப் பயில வேண்டும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான அவ்வளவு செய்திகள் விவேகானந்தரின் வாழ்விலும் போதனைகளிலும் கொட்டிக் கிடக்கின்றன. பேசியது போலவே வாழ்ந்துகாட்டிய பெருமகன் அவர்.
"நாத்திகன் என்பவன் யார்? தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன். கடவுள் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்றன பழைய மரபுகள். ஆனால், தன் மீதே நம்பிக்கையற்றவர்களை நாத்திகர்கள் என்று அறிந்துகொள்வதே இப்போதைய புதிய மரபு!' என்று முழங்கினார் அவர். அன்றைய ஆன்மிக உலகம் அவரை வியப்போடு பார்த்தது. அவரது சிந்தனைகளை உற்றுக் கவனித்தது. பின்னர் அவர் முன் கைகட்டி நின்றது.
"பாவத்திலெல்லாம் மிகப்பெரிய பாவம் ஒருவன் தன்னைத்தானே பலவீனனாக நினைத்துக் கொள்வதுதான்!' என்ற அவரின் சிந்தனை பலரின் புருவங்களை உயர்த்தியது. இப்படியெல்லாம் காலத்துக்கேற்ற அதிரடிக் கருத்துகளை முழங்குபவர் ஒரு துறவியா என்று பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
சுவாமி விவேகானந்தர் சராசரித் துறவிகளைப் போன்றவர் அல்லர். நவீன விஞ்ஞானத்தை உள்வாங்கிக் கொண்டு புரட்சிச் சிந்தனைகளுடன் வாழ்ந்த துறவி. கேத்திரி ராஜாவின் அரண்மனை மாடியில் அவரோடு டெலஸ்கோப் எனப்படும் தொலைநோக்கியில் நட்சத்திரங்களை ஆராய்ந்த ஆன்மிக நட்சத்திரம். விவேகானந்தருக்கு இன்றைய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த நாட்டமும் இந்திய இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுப் பெரும் சாதனைகள் செய்ய வேண்டும் என்ற பேராவலும் இருந்தன. இளைஞர்களை உயர்த்துவதே அவரது வாழ்வின் பிரதான நோக்கம். அதுவே அவர் வாழ்வு தரும் செய்தியும் கூட.
"எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே!'என்று இளைஞர்களுக்குப் போதித்தார். "உன் கடந்த காலத்தை எண்ணிப் பார். நீ எதிர்பார்த்த எதுவும் எவரிடமிருந்தும் உனக்கு வந்திருக்காது. உனக்குத் தேவையான உதவிகள் யாவும் உனக்குள்ளிருந்து உனக்குக் கிடைத்தவையே. ஏன் அடுத்தவர் கையை எதிர்பார்த்துக் கொண்டு வாழ்கிறாய்? தன்னம்பிக்கை கொண்டு உத்வேகத்தோடு பணியில் முழுமூச்சாய் இறங்கு!' என்று முழங்கினார். அன்று மட்டுமல்ல, இன்றும் அவரது எழுத்துகளை மூலத்திலோ மொழிபெயர்ப்பிலோ எதில் படித்தாலும் அவரது உற்சாகமும் செயலாற்ற வேண்டும் என்ற மாறாத துடிப்பும் நம்மையும் தொற்றிக் கொள்வதை உணரலாம்.
பலவீனத்துக்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைப் பற்றிச் சிந்திப்பதல்ல. மாறாக, பலத்தைப் பற்றிச் சிந்திப்பதுதான். "ஆஞ்சநேயனின் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியத்தையும் தன்னம்பிக்கையையும் இன்றைய இளைஞர்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்!'என்று அவர் வலியுறுத்தினார்.
என்சைக்ளோபிடியா எனப்படும் உலகச் செய்திகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட
பேரகராதியைப் படித்துக் கொண்டிருந்தார் விவேகானந்தர். அவரைப் பார்க்க வந்தவர் திகைத்தார். இது மாபெரும் தகவல் தொகுப்பு ஆயிற்றே? இதை ஏன் வரிசையாகப் படிக்கிறீர்கள்? இதுமாதிரிப் புத்தகத்தில் தேவையானதை மட்டும் பார்ப்பதுதானே பொதுவான வழக்கம் என்று கேட்டார். இல்லை. முழுவதும் படிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். நான் படித்த வரையில் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன் என்றார் விவேகானந்தர். வந்தவர் கேட்கலானார். அவர் கேட்கக் கேட்க ஒரு வார்த்தை பிசகாமல் பக்கம் பக்கமாக ஒப்பித்தார் விவேகானந்தர். வந்தவருக்கு அளவற்ற பிரமிப்பு. இது உங்களைப் போன்ற அபூர்வமான ஆற்றல் படைத்தவர்களால்தான் முடியும் என வியந்தார். விவேகானந்தர் அவரைத் திருத்தினார்: "இது எல்லோராலும் முடியும். எல்லாச் செயலையும் ஒருமுகப்பட்ட மனத்தோடு செய்யப் பழகினால் போதும்'.
"நாம் எவ்வளவு அதிகமாக ஒரு விஷயத்தில் மனம் செலுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக அவ்விஷயத்தில் நாம் ஞானத்தை அடைய முடியும். மனத்தைப் பூரணமாக ஒன்றில் குவிப்பது தான் அத்துறையில் உயர்ந்த ஞானம் பெற ஒரே வழி. செருப்புத் தைப்பவன் மன ஒருமைப்பாட்டைப் பயில்வானானால் அவன் சிறந்த செருப்புத் தொழிலாளியாக உருவாவான். அதுபோலவே சமையல் செய்பவன் மன ஒருமைப்பாட்டோடு சமைத்தால் சிறந்த சமையல் கலைஞனாக மாறுவான்.
கடவுளை வழிபடுவதிலிருந்து பணம் சம்பாதிப்பது வரை எந்தச் செயலானாலும் முழுமையான மன ஒருமைப்பாடு அவசியம்!'என்று ஒரு மாபெரும் உளவியல் உண்மையைத் தன் அனுபவத்தில் உணர்ந்து உலகுக்குச் சொன்னவர் அவர்.
மனத்தை முற்றிலுமாக அடக்கியாண்ட அவரது சாதனையும் தன் உணர்வுகளைத் தனக்குப் பூரணமாக வசப்படுத்திவிட்ட ஆளுமையும் எதிராளியை மனப்பூர்வமாக மதிக்கும் நல்லியல்பும் பார்த்தவர்களையும் பழகியவர்களையும் அன்று பிரமிக்க வைத்தன. இன்றும் புகைப்படத்திலாகட்டும், சிலை வடிவிலாகட்டும் கைகட்டி நிற்கும் அவரது தோற்றம் ஓர் ஆண்சிங்கம் கைகட்டிக் கொண்டு கம்பீரமாக நிற்பதைப் போன்ற உணர்வைத்தான் பார்க்கும் நம் மனத்தில் எழுப்புகிறது. இளைஞர்களின் வாசிப்புக்காகவும் பின்பற்றுதலுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது விவேக சிந்தனைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...