சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அருகி வருகிறது புலி இனம்

அருகிவரும் புலிகள் இனத்தைக் காக்கும் வகையில், இந்தியாவில் புலிகளின் காப்பகங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு இன்றைய காலகட்டத்துக்கு அ

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:22 pm

எஸ். ராஜாராம்

அருகிவரும் புலிகள் இனத்தைக் காக்கும் வகையில், இந்தியாவில் புலிகளின் காப்பகங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒன்று. இந்த உத்தரவு இந்தியாவில் 17 மாநிலங்களில் உள்ள 39 புலிகள் காப்பகங்களில் உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

மனிதர்கள்-வனவிலங்குகள் மோதல் பிரச்னை தொடர்பாக நீதிமன்றங்கள் இதற்குமுன் பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளின் வரிசையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அழிந்துவரும் வன விலங்குகளின் பட்டியலில் நமது நாட்டின் தேசிய விலங்கான புலியும் உள்ளது. உலகில் இப்போது சுமார் 3,500 புலிகளே உள்ளதாகவும், அதில் 40%, அதாவது சுமார் 1,400 புலிகள் இந்தியாவில் இருப்பதாகவும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உலகில் புலிகளின் மொத்த வாழ்விடம் 20,675 சதுர மைல்; அதில் 8,400 சதுர மைல் இந்திய வனப் பகுதிகளில் உள்ளது. புலிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்தப் பரப்பளவு குறைவுதான்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. நூறே ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை மளமளவென குறைந்து, அந்த இனமே இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது. அதன் மொத்த வாழ்விடத்தில் இப்போது 11 சதவீதமே மிச்சம் உள்ளது. மற்ற வனப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன.

சீன பாரம்பரிய மருத்துவத்துக்கு புலிகளின் உள்ளுறுப்புகள் தேவைப்படுவதால் நடத்தப்பட்ட வேட்டை, வாழ்விட ஆக்கிரமிப்பு, போதிய இரை கிடைக்காதது போன்றவையே புலிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

சாதாரணமாக ஓர் ஆண் புலி 23 சதுர மைல் முதல் 39 சதுர மைல் பரப்பளவில் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டிருக்கும்.

இந்த இடத்தில் ஏதாவது சிறு ஆக்கிரமிப்பு இருந்தால்கூட, புலி வேறு இடம் நோக்கி நகரும் அல்லது இனப்பெருக்கத்தை மேற்கொள்ளாது என வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் "எகோ-டூரிசம்' என்ற பெயரில் அடர்ந்த வனத்துக்குள் சென்று, வனவிலங்குகளை மிக அருகில் பார்ப்பது, வனப் பகுதிக்குள் சாலைகள் அமைத்து ஓய்வு விடுதிகள் கட்டுவது போன்ற நடவடிக்கை காரணமாக, புலிகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அதன் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்தியாவில் 1990-ல் 3,500 புலிகள் இருந்துள்ளன. ஆனால், 2007-ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 1,400 புலிகளே இருக்கின்றன. அதாவது 17 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 60% குறைந்துவிட்டது.

இதையடுத்து, "புராஜெக்ட் டைகர்' திட்டத்தின் கீழ் "புலிகள் பாதுகாப்புப் படை' என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியது. புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது, புலிகள் -மனிதர்கள் மோதலைத் தவிர்க்கும் வகையில், காப்பகப் பகுதிகளில் வசிக்கும் மக்களைக் கண்டறிந்து அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகு, புலிகள் வேட்டையாடப்படுவது ஏறக்குறைய முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டாலும், அவற்றின் வாழ்விட ஆக்கிரமிப்பு குறையவில்லை.

இந்தச் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் இப்போது பிறப்பித்துள்ள உத்தரவு மூலம், புலிகள் காப்பகப் பகுதிகள் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகள் ஆகிவிடும் என்பதால், வருங்காலங்களில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

ஆனால், இயற்கைநல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையை வரவேற்றுள்ளபோதிலும், சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. புலிகள் சரணாலயப் பகுதிகளில் அமைந்துள்ள அருவிகளுக்குச் செல்லக்கூட அனுமதி கிடையாது என்பதே அவர்களது வருத்தத்துக்குக் காரணம்.

எனினும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிவிடவில்லை, இது ஓர் இடைக்கால உத்தரவுதான் என்பதால், மாநில அரசுகள் தாக்கல் செய்யவுள்ள பதில் மனுக்களின் அடிப்படையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தளர்வுகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடும்.

புலிகள்தான் என்றில்லை, எந்தவொரு வன விலங்குமே பாதுகாக்கப்பட வேண்டும்; இயற்கையான சூழியல் சுழற்சிக்கு ஏற்ற வகையில்தான் வனவிலங்குகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் எந்த ஒரு விலங்கையும் அழிக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை.

காட்டில் இருந்து எப்போதாவது வழிதவறி வந்துவிடும் யானைகளையோ, மான்களையோ, சிறுத்தைகளையோ ஓடஓட விரட்டி அடிக்கிறோம் - காட்டு விலங்குகளுக்கு நாட்டில் இடமில்லை என்பதைப்போல. விலங்குகளுக்கு நாட்டில் இடமில்லாதபோது, மனிதர்களை மட்டும் ஏன் காட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.