நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உரிமைக்குக் குரல் கொடுப்போம்

சித்திரை முழுநிலவு நாளில் தமிழ்நாடு அரசும், தமிழ் அமைப்புகளும் கண்ணகியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணம் கண்ணகி கற்புக்கரசி என்பதற்காக மட்டுமல்ல, அவள் தமிழ்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:10 pm

உதயை மு. வீரையன்

சித்திரை முழுநிலவு நாளில் தமிழ்நாடு அரசும், தமிழ் அமைப்புகளும் கண்ணகியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.

இதற்குக் காரணம் கண்ணகி கற்புக்கரசி என்பதற்காக மட்டுமல்ல, அவள் தமிழ்ப் பண்பாட்டின் சின்னம் என்பதற்காகவும்தான்.

தன் கணவன் கோவலன் அநியாயமாகக் கொல்லப்பட்டபோது, அதிகாரமிக்க பாண்டிய மன்னன் என்றும் பாராமல் "தேரா மன்னா!' (ஆராயாத அரசே!) என்று ஆத்திரத்துடன் விளிக்கிறாள். நீதியை நிலைநாட்டுவதற்காக அரசவையில் தன் காற்சிலம்பை உடைத்து உண்மையை உலகம் அறியச் செய்கிறாள்; தன் கணவனுக்கு ஏற்படவிருந்த மாசைத் துடைக்கிறாள்.

பெண் குலத்தின் பொன் விளக்காகவும், நீதியின் சின்னமாகவும் விளங்கும் கண்ணகியை தமிழ்மக்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை.

ஆனால் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி என்று அழைக்கப்படும் கண்ணகி கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு கேரள அரசால் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

இந்த ஆண்டு முழுநிலாவன்று காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கோயிலுக்குச் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

இக்கோயிலுக்குத் தமிழக வனப்பகுதி வழியாகச் செல்வதற்குக் கூடலூரிலிருந்து பளியன்குடிவரை தமிழக அரசு பேருந்து வசதி செய்துள்ளதாக அறிவித்திருந்தது. பளியன்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவு வரை நடந்து செல்ல வேண்டும். இதற்காக வனப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நடந்து செல்ல முடியாதவர்களுக்கு குமுளியிலிருந்து ஜீப் வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குமுளியிலிருந்து இயக்கப்படும் கேரள வாகன ஓட்டிகள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். இவர்கள் இங்கே வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது.

பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு அதிகக் கட்டணம் வசூலிப்பதுடன் கூடுதலான பேரை ஏற்றிக் கொண்டு செல்லும்போது உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலைதான்.

கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரடுமுரடான மண்பாதையில் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த மலைப்பாதையில் 19 கி.மீ. பயணம் செய்தால் கண்ணகி கோயிலை அடைய முடியும். காலையில் மலைக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் மாலையில் அவர்களைத் திரும்ப அழைத்து வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கண்ணகி கோயில் சென்றோர் வாகன வசதியின்றி நடந்தே வரவேண்டிய துன்பமே தொடர்கிறது.

கண்ணகி கோயில் தமிழக நிலப்பரப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், மலை முழுவதும் கேரள வனத்துறை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தமிழகத்திலிருந்து வரும் காவலர்களும் எவ்வித அதிகாரமும் இன்றி தமிழ் மக்களைப் போலவே அடங்கி ஒடுங்கி நிற்க வேண்டிய அவலநிலைதான் அங்கே!

வரலாற்றுப் பழமை மற்றும் பண்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உரிமையான கண்ணகி கோயிலை தமிழ்மக்கள் வழிபாடு செய்ய இத்தனை கட்டுப்பாடுகள் ஏன்?

கேரள அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்ணகிக் கோட்டத்தை ஆக்கிரமிப்பு செய்து கண்ணகியைச் சிறையிட்டு வைத்திருக்கிறது.

அத்துடன் திட்டமிட்டு கண்ணகி கோயில் சிதைக்கப்பட்டு பாழ்படுத்தப்பட்டுள்ளது. மாறி மாறி வரும் தமிழக அரசுகள் இதில் அக்கறை காட்டவில்லை. கேரள அரசின் ஆக்கிரமிப்பு பற்றி கேள்வி எழுப்பவில்லை. மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன.

இந்தியக் குடிமகன் இந்நாட்டின் எப்பகுதிக்கும் சென்று வரவும், வழிபடவும், சொத்து வாங்கவும் விற்கவும் உரிமை இருக்கிறது. ஆனால், கேரள அரசு கண்ணகி கோயில் செல்லும் பாதையைத் தடுத்து கெடுபிடிகள் செய்து வருவது வேதனைக்குரியது.

கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலைக்குச் சென்று வழிபடுவதற்குத் தீவிர ஏற்பாடுகள் செய்யும் அந்த அரசு, கண்ணகி கோயிலுக்கு வழிபட வரும் மக்களைத் தடுப்பது ஏன்? ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் சித்திரை முழுமதி நாள் மட்டுமே அனுமதிக்கப்படுவதும், மற்ற நாள்களில் அனுமதி மறுப்பதும் மனித உரிமையை மறுக்கும் செயல் ஆகாதா?

மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, இப்போது தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தெற்கு எல்லையில் தமிழ்நாட்டுக்குள்தான் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடாகும். இதனை மற்ற கோரிக்கைகளைப் போலவே கேரளம் இப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சேரன் செங்குட்டுவனால் இக்கோயில் கட்டப்பட்டு முதலாம் இராசராச சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களின் காலங்களில் சீரமைக்கப்பட்டு பல்வேறு மானியங்களும், நிவந்தங்களும் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியக் கல்வெட்டு ஆய்வுத் துறையினர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து அது தமிழகத்தைச் சேர்ந்தது என்பதற்கு      ஆதாரங்களை அறிவித்துள்ளனர்.

1893-ம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம் மற்றும் 1916-ம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம் ஆகியவை இக்கோயில் தமிழ்நாட்டுக்குள் அமைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 1952, 1957 மற்றும் 1959-ம் ஆண்டுகளில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட வரைபடங்களும் இக்கோயில் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருப்பதைக் காட்டுகின்றன.

15-11-1883-ல் வெளியிடப்பட்ட புனித ஜார்ஜ் கெசட் 719 - 721-ம் பக்கங்களில் பிரசுரமான வெளியீட்டுப் பிரிவு 25-ல் இக்காட்டிலுள்ள மங்கலதேவி கோயில் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு சட்டப்படியான ஆதாரங்கள் இருந்தபோதும், கேரள அரசு இக்கோயிலுக்கு உரிமை கொண்டாடுவதை விடவில்லை.

1982 மே 5 அன்று கண்ணகி கோயிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ளச் சென்ற தமிழர்களைக் கேரள அரசு கைது செய்தது. அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் மரியாதையின்றி நடத்தியது.

15-3-1983 அன்று கண்ணகி கோயிலுக்குள் துர்காதேவியின் சிலையை வைத்து பிரச்னையைத் திசைதிருப்ப முயற்சித்துள்ளனர்; இக்கோயிலில் இருந்த பழைய கண்ணகி சிலையை உடைத்து நொறுக்கி விட்டனர்; மறுபடியும் கண்ணகி சிலையை வைத்திட கேரள அரசு அனுமதிக்கவில்லை. இப்போது துர்காதேவி சிலையை வைத்திருப்பது மத்திய தொல்பொருள் துறை விதிகளின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனம் செய்தவர்கள் -  எந்த இயற்கை நீதிக்கும் கட்டுப்பட மறுப்பவர்கள் கோயில் சிலையை மாற்றியதில் வியப்பில்லைதானே!

கண்ணகி சிலை இருந்தால்தானே தமிழர்கள் உரிமை கொண்டாடுவார்கள்? துர்க்கை சிலையை வைத்து "துர்க்கைக் கோயில்' என்று விளம்பரப்படுத்தி விட்டால் பிரச்னை முடிந்துவிடும் என்று எண்ணுவது அறியாமையைத் தவிர வேறென்ன?

சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பிரச்னை இன்னும் இருக்கிறது. அதுபோல ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுடன் எல்லைப் பிரச்னை இருக்கிறது. கேரளத்துடன் பல பிரச்னைகள் இருந்தாலும், எல்லைப்பிரச்னை என்பது கண்ணகி கோயிலை மையமாகக் கொண்டதுதான்.

இலக்கிய வரலாறு மற்றும் பண்பாட்டு அடிப்படையில் கண்ணகி தமிழ் மக்களின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறாள். அதனை மறுப்பதும், தமிழ் மக்களை வெறுப்பதும் ஒருமைப்பாடு பேசும் நாட்டுக்கு அழகாகுமா?

1976-ம் ஆண்டு தமிழக ஆளுநராக இருந்த சுகாதியா இக்கோயிலைப் பற்றி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதற்கு மத்திய அரசிடமிருந்து வந்த பதிலில், "மத்திய கல்வெட்டு ஆராய்ச்சி இயக்குநருடன், இரு மாநில செயலாளர்களும் கூட்டாக இப்பிரச்னையைப் பரிசீலனை செய்யலாம்' என்று கூறப்பட்டது. இருப்பினும் இதுபற்றிய நடவடிக்கை தொடரவில்லை.

1981- மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இக்கோயில்பற்றி இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில்சிங், "கேரள அரசும், தமிழக அரசும் பேசி இக்கோயில் பற்றி முடிவு எடுக்க வேண்டும்' என்று தமது பதிலில் எழுதியிருந்தார். அப்போது இதுபற்றிய நடவடிக்கையை யாரும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 28-7-1981 அன்று மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இக்கோயில் தமிழகத்துக்குத்தான் உரிமையுடையது என்பதற்கான ஆதாரங்களையும், எல்லைப் படங்களையும் அனுப்பி, "இதில் வேறு யாருக்கும் உரிமையில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் "இரு மாநில அரசுகளும் பேசி முடிவு செய்ய வேண்டும்' எனப் பதில் எழுதியிருந்தார்.

கேரளாவில் அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் இருந்ததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்தபின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அப்போது முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் அதற்குப் பிறகு இதற்கான முயற்சி தொடராமலேயே போய்விட்டது. எரியும் பிரச்னைகள் இதனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. தமிழ் அமைப்புகள் மட்டுமே அப்போதைக்கு அப்போது தீர்மானங்கள் மூலம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

இப்போது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறப் போகிற சூழலில் இந்தக் கோரிக்கை மறுபடியும் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அகற்றப்பட்ட சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை மறுபடியும் வைக்கப்பட்டது; அதுபோலவே தமிழக - கேரள எல்லையிலுள்ள கண்ணகி கோயிலின் உரிமையும் காப்பாற்றப்பட வேண்டும் எனத் தமிழ் மக்கள் நினைப்பது தவறில்லையே!

வாக்கு வங்கிகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் மத்திய-மாநில அரசுகள் எந்தப் பிரச்னையையும் எதிர்கொண்டு செயல்படுத்திட முன்வருவதில்லை. பிரச்னைகளை ஆறப் போடுவதே அரசியல் தந்திரம் என்று நினைக்கின்றன. இந்நாட்டில் எல்லாப் பிரச்னைகளும் இழுபறியாய் இருப்பதற்கு இதுவே காரணம்.

ஓர் அரசாங்கத்தின் வெற்றி என்பது பிரச்னைகளிலிருந்து ஒதுங்கியிருப்பதிலும், சாதனைப் பட்டியலை வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் இருக்கவில்லை. மாறாக உண்மைகளையும், உரிமைகளையும் மீட்டெடுப்பதில்தான் அடங்கியிருக்கிறது. "உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்பது அதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.