வெந்து தணியுமா தீ...
பெங்களூர் கார்ல்டன் வணிக வளாகத்தில் பிப்ரவரி 23-ம் நாள் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 பேர் பலியாயினர். 59 பேர் தீக்காயமுற்றனர். இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதில் தகிக்


பெங்களூர் கார்ல்டன் வணிக வளாகத்தில் பிப்ரவரி 23-ம் நாள் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 பேர் பலியாயினர். 59 பேர் தீக்காயமுற்றனர்.
இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதில் தகிக்கும் புகை மூட்டம் எல்லா தளத்திலும் மாடிப் படிக்கட்டுகளிலும் சூழ்ந்தது. வெளியேறுவதற்கு வழிதெரியாத பயத்தில் மாடிக்கட்டடத்திலிருந்து குதித்ததில் காயமுற்று உயிரிழந்தனர். தீயினால் உண்டாகும் உஷ்ணம் ஒருவரைக் கதிகலங்கச் செய்துவிடும். சுயநிலையை இழந்து செய்வதறியாது தவித்து நிலை குலைந்து எடுக்கும் முடிவு விபரீதத்தில் முடியும்.
÷பெங்களூர் விபத்தின் பூர்வாங்க ஆய்வில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது என்றும், வெளியேறுவதற்கான வாசல்கள் மூடப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் கூறப்பட்டது. அடுக்குமாடிக் கட்டடங்களில் வைக்கவேண்டிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை, தீ பரவாமல் தடுக்கக்கூடிய தானியங்கி தண்ணீர் உமிழும் சாதனங்கள் பொருத்தப்படவில்லை. போதுமான அவசரகால வெளியேற்ற நிலைகள் இல்லை என்று நிறைவேற்றப்படாத பாதுகாப்புப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
÷பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதேனும் அக்கறையிருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இது பணம் சம்பாதிக்கும் பேராசையின் உச்சகட்டம் என்றால் மிகையில்லை. அடுக்குமாடிக் கட்டடங்கள் பின்பற்ற வேண்டிய தீ பாதுகாப்பு முறைகள், தேசியக் கட்டட விதிகள் 2005 என்ற தொகுப்பில் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி குறைந்தது 15 மீட்டர், அதாவது சுமார் 50 அடி உயரமுள்ள கட்டடம் இந்த விதிகளுக்குள் வரும்.
÷சென்னையில் இப்போது சுமார் 60 மீட்டர் உயரம் வரை கட்டடங்கள் அமைந்துள்ளன. உயர்மாடிக் கட்டடங்கள் தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற்ற பின்னரே சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெற பரிசீலிக்கப்படும். அடுக்குமாடிக் கட்டடத்தின் உயரத்தைப் பொறுத்து, குறைந்தபட்சம் ஏழு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் தருணத்தில் தீயணைப்பு வாகனங்கள் கட்டடத்தைச் சுற்றிலும் நிறுத்தி தீயணைப்புப் பணிகளைத் திறம்படச் செய்ய இத்தகைய இடைவெளி தேவை.
÷அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலக, வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் சிறியதானாலும், பெரியதானாலும் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு விதிகள் தேசியக் கட்டட விதிகள் தொகுப்பில் கூறப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டால், அவசரகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு கட்டடத்தை உபயோகிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
÷பெங்களூர் இந்தியாவின் கணினி விஞ்ஞானத் தலைநகரம் என்று கருதப்படுகிறது. அதுவும் அசம்பாவிதம் நடந்த இடம் எலக்ட்ரானிக் சிட்டி என்பது புதிதாக உருவாக்கப்பட்ட நவீன நகரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய இடத்திலேயே விதிகள் கடைப்பிடிக்கவில்லை என்றால் மற்ற இடங்களில் உள்ள கட்டடங்களின் நிலை எவ்வாறு இருக்கும்.
÷சட்டங்களும் நிலையாணைகளும் நன்கு இயற்றப்படுகின்றன. ஆனால் அமல்படுத்துவதில்தான் சுணக்கமும் சிக்கலும் வருகின்றன. குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவு கட்டடம் உள்ளது என்றால் குறிப்பிட்ட அளவு தாங்கக்கூடிய நீர்கிடங்கு நிறுவப்பட வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் இந்த நீரைத் தீயை அணைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், இதை அமைப்பதில் சிக்கனம் காட்டப்படுகிறது. தாழ்வாரங்களும், நிலைப்படிகளும் தடுப்புகள் இல்லாது தடையில்லாமல் அவசர நேரத்தில் மக்கள் வெளியேற உதவ வேண்டும். ஆனால் பெங்களூர் கார்ல்டன் கட்டடத்தில் தாழ்வாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் இயங்குகின்றன. நிலைப்படிகள் இரும்புக் கம்பிகளால் தடுக்கப்பட்டு சப்புச்சரவு பொருள்கள் வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மொட்டை மாடிக்குச் செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. அது திறந்திருந்தால் மக்கள் அங்கு சென்று அனல் கக்கும் புகையிலிருந்து தப்பியிருக்கலாம்.
÷கட்டடங்களில் திறந்த வெளிப்பகுதி கட்டாயமாகப் பராமரிக்க வேண்டும் என்ற விதியைக் கடைப்பிடிப்பதில்லை. பல அலுவலகங்களில் இடப்பற்றாக்குறை காரணமாகத் தாழ்வாரங்களில் எழுத்தர்கள் பணிபுரிவதைக் காணலாம். அரசாங்க அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
÷தீயணைப்புத் துறைக்கு ஒரு நாளில் சராசரி நூறு தீயணைப்பு அழைப்புகள் வருகின்றன. கோடைக்காலத்தில் வெப்பம் காரணமாக அழைப்புகள் அதிகமாக வரும்.
÷2009-ம் ஆண்டு 21,441 தீவிபத்துகள் ஏற்பட்டன. சென்னையில் 2,354 தீ விபத்துகள் ஏற்பட்டன. விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109. இந்தியாவில் 2008-ம் ஆண்டு வரை தீ விபத்துகள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி 2008-ம் ஆண்டில் 32,620 தீ விபத்துகள் சம்பந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 22,454, காயமுற்றோர் 2,987 பேர். ÷தீக்காயங்கள் போன்று கொடியது வேறொன்றும் இருக்க முடியாது. 1979-ம் ஆண்டு தூத்துக்குடி நகரில் ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 168 நபர்கள் உயிரிழந்தனர். காயமுற்று உயிருக்குப் போராடியவர்களை வாழையிலையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது, மறக்க முடியாதது.
÷2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 93 குழந்தைகள் மாண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், பள்ளிகளில் தீ தடுப்பு சாதனங்கள் சரிவரப் பொருத்தப்பட்டுள்ளதா? விபத்துகளைத் தடுக்க எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எல்லா பள்ளிகளையும் ஆய்வு செய்யும் பொறுப்பைத் தீயணைப்புத் துறை மேற்கொண்டுள்ளது.
÷பாதுகாப்புத் தணிக்கை மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய காலாந்திர ஒத்திகை மிகவும் இன்றியமையாதது. தீயணைப்புத் துறை இத்தகைய பாதுகாப்புத் தணிக்கையை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
÷தமிழ்நாட்டில் இருப்பில் இருக்கும் கணக்குப்படி 964 உயர்மாடிக் கட்டடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 661 உயர்மாடிக் கட்டடங்கள் உள்ளன. பாதுகாப்புத் தணிக்கையின்போது கண்டறியப்பட்ட பல குறைபாடுகளை நீக்கி பாதுகாப்பைப் பலப்படுத்த அந்தந்தக் கட்டட உரிமையாளர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும். மின்சாரக் கம்பிகள் தீ பாதுகாப்புக் கவசங்களோடு பொருத்தப்பட வேண்டும். மின்சார இணைப்புகள் சந்திப்பில் தீ எதிர்ப்புக் கவசங்கள் பெட்டிகளில் மூடப்பட்டிருந்தால் மின்கசிவால் தீப்பொறி உண்டானாலும் அது பெட்டிக்குள்ளேயே அடங்கிவிடும், பரவாது. 70 சதவிகித தீ விபத்துகள் மின்கசிவாலும், மின்சார இணைப்புகளின் சக்திக்கு மீறி குளிர்சாதனப் பெட்டிகள், இயந்திரங்கள் உபயோகிப்பதாலும் ஏற்படுகின்றன.
÷கடைகளில் அவசரகாலத்தில் வெளியில் செல்லும் பாதையே இருக்காது. இருந்தாலும் அது பூட்டப்பட்டிருக்கும். எல்லாக் கடைகளிலும் எளிதில் பற்றி எரியக்கூடிய அட்டைகள், காகிதங்கள் ஓரத்தில் குவிக்கப்பட்டிருக்கும். இவையெல்லாம் அபாயத்தின் அறிகுறிகள்.
÷நமது இல்லங்களிலும் சாதாரண தீ தடுப்பு பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. காஸ் அடுப்பையும் சிலிண்டரையும் இணைக்கும் ரப்பர் டியூபை காலந்தவறாமல் மாற்ற வேண்டும். அது நைந்து போய் காஸ் கசிவு ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. இரவு படுக்கப் போகும் முன் காஸ் வெளிவரும் துளையை மூடவேண்டும். காலையில் சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்ட வாசனை இருந்தால் மின்விளக்கைப் போடக்கூடாது. உடனடியாக கதவைத் திறந்து, கசிந்த காஸ் வெளியேற்றப்பட வேண்டும். சமையலறையில் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் இத்தகைய அசிரத்தையால் ஏற்படுகின்றன. தழைய தழைய உடைகள் அணிந்து சமையல் செய்யக்கூடாது. புடவைத் தலைப்பை வைத்து சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்குவதால் புடவையில் தீப்பற்றி பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீயணைப்பான்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை வேலை செய்கிறதா என்று சோதிப்பதில்லை. தீயணைப்பு ஆய்வும் காலமுறையாகச் செய்யப்பட வேண்டும். கேபிள் டிவி இணைப்பு சரியில்லை என்றால் கூக்குரலிடுகிறோம். ஆனால் நமது பாதுகாப்பில் கோட்டை விடுகிறோம்.
நில், படு, உருண்டோடு என்பது தீ புகையிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும் தாரக மந்திரம். சமையலுக்கு உதவும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து தீயாகப் பரவினால் ஆபத்து. தீ சாதாரணமாகத் தணியாது. உரிய சமயத்தில் அணைக்காவிட்டால் எரியக்கூடிய பொருள்கள் வெந்தபின் தான் தணியும்.
÷பாதுகாப்பு விதிகளைச் சரிவர கடைப்பிடித்தால் தீ விபத்துகளைத் தவிர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...