திசை தெரியாமல் தெருவில்...
கல்லறை என்றாலே நெஞ்சை உறையவைக்கும் உணர்வு வரும். கல்லறை அமைந்த தெருக்களில் செல்வதற்கும் மக்கள் அஞ்சுவர். மயானத்தைச் சுற்றி பல கதைகள். சிறு புகைவந்தாலும் அது ஆவியின் வடிவம் என்று பயம் கொள்ளச் செய்வார்க


கல்லறை என்றாலே நெஞ்சை உறையவைக்கும் உணர்வு வரும். கல்லறை அமைந்த தெருக்களில் செல்வதற்கும் மக்கள் அஞ்சுவர். மயானத்தைச் சுற்றி பல கதைகள். சிறு புகைவந்தாலும் அது ஆவியின் வடிவம் என்று பயம் கொள்ளச் செய்வார்கள். மனதை மருளச் செய்யும் இத்தகைய இடங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள் என்றால் நம்புவது கடினம். இது நகரங்களில் ஏற்படும் நெரிசலின் விளைவு.
நகரங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வருகிறது. பிரகாசமான எதிர்காலக் கனவை மனதில் தேக்கி வேலையைத்தேடி கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்வதால் 10 லட்சத்துக்குமேல் மக்கள்தொகை உள்ள நகரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 100 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 25 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள்.
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, நல்ல சுகாதாரம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்றும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சமுதாயத்தின் பொறுப்பும் அரசாங்கத்தின் கடமையும் உள்ளது என்றும் மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா நாட்டின் அரசியல் சாசனத்தில் அந்நாட்டு மக்களுக்கு வீடு அடிப்படை உரிமை என்றும் வசதி செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது.
நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியில் நீதிமன்றம் மூலம் நிலை நிறுத்தக்கூடிய பிரிவுகளாக உள்ளன. ஆயினும், அத்தியாவசியத் தேவைகளான குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சமூகநீதி போன்றவற்றை அரசாங்கம் தனது அடிப்படைக் கொள்கைகளாக வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வசிக்க வீடில்லாமல் பராரியாக அண்டியும் ஒண்டியும் வாழும் மக்களின் பிரச்னை பெரிய சமுதாயப் பிரச்னையாக உள்ளது. அது வருங்காலத்தில் மேலும் பூதாகரமாக உருவெடுக்கும் என்று ஐக்கியநாடுகள் கவலை தெரிவித்திருக்கிறது.
உலகெங்கிலும் சுமார் 10 கோடி மக்கள் ஸ்திரமான வீடில்லாமல் நாடோடிகளாகத் திரிகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அதில் கணிசமானவர்கள் ஏழை நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் குடியிருப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலைக்கு ஏழ்மை, வேலையின்மை, ஆயுதத் தாக்குதலால் குடிபெயர்தல், குடும்பப் பூசல்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், மனநிலை பாதிப்பு போன்ற பல காரணங்களைக் கூறலாம். நகரங்களுக்கு வேலை தேடி வருபவர்கள் வேலை கிடைக்காமல் சமுதாயத்துக்குச் சுமையாக தெரு ஓரங்களிலும், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும், குடிசைப் பகுதிகளிலும் ஒண்டியிருப்பதைப் பார்க்கலாம். முதலில் தாற்காலிகமாகத் தங்குபவர்கள், மெல்ல அண்டுவதையும் அதில் சிலர் சுரண்டிப் பிழைப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொள்கிறார்கள்.
இத்தகைய மனித உண்ணிகளை வழிநடத்தி, சமுதாயத்தோடு உபயோகமானவர்களாக இணைப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பாகும்.
பராரியாகத் திரிபவர்களைக் கண்காணித்து அவர்கள் குற்றங்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காலங்காலமாக காவல்துறைக்கு உள்ளது. வேலையற்றுத் திரியும் இளைஞர்கள் அடிமைத் தொழிலாளர்களாகச் சிக்கி மிக மோசமான நிலையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.
வேலையில்லாது தத்தளிக்கும் பல இளைஞர்களுக்கு பொதுவாக சமுதாயத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் ஏற்படுவது இயற்கை. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு இடைத்தரகர்களால் ஈர்க்கப்படுகின்றனர். 1993-ம் ஆண்டில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பல இடங்களில் குண்டு மறைக்கப்பட்டிருந்த பெட்டிகளை வைக்க இவ்வாறு பராரியாக ஒண்டியவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
சுமார் 100 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலாவது இருக்கும். நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவின் திறந்த எல்லையைக் கடந்து குடியுரிமை இல்லாத மக்களின் நிலை மற்றொரு சிக்கலான பிரச்னை.
மேலை நாடுகளிலோ மற்ற இடங்களிலோ வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி மனிதர்களை வைத்து நேர்மையற்ற வியாபாரம் செய்யும் தரகர்கள், நகரங்களில் அண்டிப் பிழைக்கும் குடும்பங்களைக் குறிவைக்கின்றனர். அதில் பல பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உலகில் பல நாடுகளிலிருந்தும் இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதில் 68 சதவிகிதம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வணிகத்தில் சிக்குகின்றனர். நேபாளத்திலிருந்து சராசரி ஆண்டொன்றுக்கு 2 லட்சம் நேபாளி பெண்கள் கடத்தப்பட்டு இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மனிதர்களைக் கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் க்ரைம் சிண்டிகேட் என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிகக் கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தாற்போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது என்பது சர்வதேச போலீஸ் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்னை.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதல் பத்து நகரங்கள் ஆசிய நாடுகளில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டோக்கியோவுக்கு அடுத்து வரும் மும்பை நகரின் மக்கள்தொகை 2015-ம் ஆண்டு சுமார் 2 கோடியே எண்பது லட்சத்தை எட்டிவிடும். இந்த மக்கள்தொகைப் பெருக்கத்தோடு வீடில்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
வருங்காலத்தில் காவல்துறை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்னை நகரங்களில் இருக்கக்கூடிய நெரிசலைச் சமாளிப்பது ஒன்றுதான். இந்த நெரிசல் தனிமனிதனை மறைத்து விடுகிறது. நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் என்று மிதக்கும் மக்கள் கூட்டம் வேறு. இந்த மக்கள் கூட்டக் கண்காணிப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று, சந்தேகமான நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல். மற்றவர்களை குற்றங்களில் ஈடுபடாத வகையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுத்தல். அதில் பிச்சை எடுப்பவர்கள், குழந்தைகளை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களில் உறையச் செய்யும் கயவர்களை பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட தனிக்காவல் பிரிவுகள் மூலம் நடவடிக்கை எடுத்தல் என்று மூன்று வகையான முக்கியப் பணிகள் காவல்துறைக்கு உண்டு.
இருக்க இடமில்லாமல் அலையும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. நாற்பது வயதுக்குள் தனியாக முகாந்திரம் இல்லாத பெண் என்றாலே காவல் துறையினர் விபசாரத் தடுப்பு வழக்கில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி விடுவார்கள். மனித உரிமைகள் விழிப்புணர்வாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழிலில் சிக்கும் பெண்களைக் குற்றவாளிகளாகப் பாவிக்காமல் பாதிக்கப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்ற நிலை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு மீட்கப்படும் பெண்கள் குடும்பத்தோடு இணைக்கப்படுகின்றனர் அல்லது சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
ஒண்ட இடமில்லை என்றாலே அது ஒருவரது மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். நகரங்களில் வீடும் வேலையும் இல்லாதவர்கள் முக்கால் சதவிகிதம் இத்தகைய மனநிலை அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பெண்களை இது மேலும் பாதிக்கும். போதைப் பொருள் கடத்துபவர்கள் இவர்களைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி போதைப் பொருள் விற்பதற்குப் பரவலாக அனுப்புகிறார்கள். இவர்கள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டாலும் போதை முதலைகளுக்குக் கவலையில்லை. ஏனெனில், பராரியாகத் திரிபவர்களுக்குக் குறைவில்லை. இந்தக் குற்றச் சூழலை முறியடிப்பது நகரக் காவல்துறையின் தலையாய பணி. தவறினால் அது சட்டம்-ஒழுங்கை வெகுவாகப் பாதிக்கும்.
ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதில் செம்மையான பணிகள் செய்து வரும் நிறுவனம் பானியன் என்ற தன்னார்வத் தொண்டு மையம். 2004-ம் ஆண்டு பானியனோடு சென்னை புறநகர் காவல்துறை இணைந்து "டயல் 100' என்ற திட்டத்தை வகுத்து சென்னை நகரில் ஆதரவற்று வாடும் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது குடும்பத்தோடு இணைப்பது அல்லது சுயமாக வேலை செய்து பிழைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டிலேயே சுமார் 300 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. காவல்துறைக்கு நல்லவடிவம் கொடுக்கும் இத்திட்டம் இன்றும் செயலாக்கத்தில் உள்ளது.
நாடு முன்னேற்றம் அடைந்து வருவதன் பயன் எல்லோருக்கும் சென்று அடைந்தால்தான் சமுதாயம் சுமுகமான நிலையில் செயல்படும். ஏழைகளின் நிலை ஓரளவு உயர்ந்திருந்தாலும் பணக்காரகள் பன்மடங்கு பெருகி வருவதோடல்லாமல் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. சமுதாயத்தில் உள்ள இத்தகைய மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவது நமது கடமை. நாட்டின் வளர்ச்சியின் பயன் நிறைவாக எல்லோருக்கும் நிரவப்பட்டால்தான் அமைதி காக்க முடியும். முதல்கட்டமாக அண்டியும் ஒண்டியும் வீதியில் இருக்கும் திக்கற்றவர்களை, தேசிய நீரோட்டத்தில் சேர்த்தால்தான் சமுதாய அமைதி சாத்தியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...