பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உலகம் போற்றும் உத்தமர்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் அங்குள்ள "ஆர்லிங்டன்' மாநிலத்தில் "வேக்பீல்டு ஹைஸ்கூல்' என்ற பள்ளிக்கு உரை நிகழ்த்தச் சென்றார். தனது சொற்பொழிவைத் தொடங்கும் முன், அப்பள்ளி மாணவர்களைச் சந்தித்துப

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:47 pm

த. ஸ்டாலின் குணசேகரன்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் அங்குள்ள "ஆர்லிங்டன்' மாநிலத்தில் "வேக்பீல்டு ஹைஸ்கூல்' என்ற பள்ளிக்கு உரை நிகழ்த்தச் சென்றார். தனது சொற்பொழிவைத் தொடங்கும் முன், அப்பள்ளி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். அம்மாணவர்களில் சிலர் ஒபாமாவிடம் சில கேள்விகளைக் கேட்டனர்.

  லில்லி என்ற மாணவி, ஒபாமாவிடம், ""நீங்கள் யாருடனாவது அமர்ந்து சாப்பிட விரும்பினால் அது யாராக இருக்கும்?'' என்று கேட்டதோடு, ""அவ்வாறு நீங்கள் உடனிருந்து உணவருந்த விரும்பும் மனிதர் உயிரோடு இருப்பவராகவும் இருக்கலாம்; இறந்து விட்டவராகவும் இருக்கலாம்'' என்ற விளக்கத்துடன் அக்கேள்வியை எழுப்பினார்.

  ""அப்படி நான் உடன் உட்கார்ந்து உணவருந்த விரும்பும் மனிதர்கள் பட்டியல் என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு நீண்ட பட்டியலாக அமையும்'' என்று சொன்ன ஒபாமா, ""நான் நினைக்கிறேன்....நான் காந்தியுடன் அமர்ந்து சாப்பிடவே விரும்புவேன்'' என்று சொல்லிக் கொண்டே ""ஏனென்றால் அவர்தான் என்னுடைய உண்மையான நாயகன்'' என்றார்.

  ""காந்தியுடனான உணவுவேளை சந்திப்பு என்பது மிகக்குறைவான நேரத்தில் முடிந்துவிடும். ஏனெனில் காந்தி மிக எளிய உணவை மிகக்குறைவான அளவில் உண்பவர்'' என்று மாணவர்களிடம் வேடிக்கையாகச் சிரித்துக்கொண்டே கூறிய ஒபாமா, ""எனக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கியவர் அவர்தான். டாக்டர் மார்டின் லூதர்கிங்கிற்கும் ஆதர்சம் காந்திதான். இந்தியாவில் வன்முறையற்ற அகிம்சா வழி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இங்கு அமெரிக்காவிலும் சிவில் உரிமைகளுக்கான சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றிருக்காது'' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

  குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே செனட் உறுப்பினராக விளங்கிய ஒபாமா, ""தொடக்கத்திலிருந்தே காந்தியின் தாக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் என்னுடைய செனட் அலுவலகத்தில் எப்போதும் காந்தியின் படத்தை என் பார்வையில் படுமாறு வைத்துள்ளேன். அப்படம் எனக்கு மக்களிடமிருந்துதான் உண்மை விளைவுகள் கிடைக்கும் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டது இச்சூழலில் நினைவுகூரத்தக்கதாகும்.

  1937-ம் ஆண்டு அமெரிக்கக் கறுப்பு இனத் தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு வந்து காந்தியடிகளைச் சந்தித்தனர். அந்நாட்டில் கறுப்பு இன மக்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் அனைத்தையும் காந்தியடிகளிடம் விளக்கிக் கூறினர். ""தாங்கள் அமெரிக்காவுக்கு வந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்'' என்று வேண்டினர். ""என்னுடைய போராட்டம் இந்தியாவில் வெற்றிபெற்ற பிறகுதான் உங்களுக்கு நான் உதவி செய்ய இயலும்'' என்று சொல்லிவிட்டு ""அப்பழுக்கற்ற அகிம்சைச் செய்தி உங்கள் நாட்டுக் கறுப்பு இன மக்கள் மூலமாகவே உங்களுக்குக் கிடைக்கும்'' என்ற வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்து, அமெரிக்க கறுப்பு இனத் தலைவர்களுக்கு விடை கொடுத்தார் காந்தியடிகள்.

  அடிமைப்பட்டுக் கிடந்த அமெரிக்கக் கறுப்பு இன மக்களுக்குப் பிற்காலத்தில் தலைமையேற்ற மார்ட்டின் லூதர்கிங், இறையியல் கல்லூரி மாணவராக இருந்தபோது, டாக்டர் மொர்டெகாய் ஜான்சன் என்பவர் அக்கல்லூரியில் உரை நிகழ்த்தினார். அவரது உரையின் ஊடே காந்தியடிகளின் வாழ்க்கை குறித்தும், அவரது சமூகவியல் சிந்தனைகள் குறித்தும் விளக்கமாகவும் உருக்கமாகவும் எடுத்துச் சொன்னார்.

  ""அவருடைய பேச்சு புதுமையாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. நான் உடனே ஒரு புத்தகக் கடைக்குச் சென்று மகாத்மா காந்தியைப்பற்றி அரை டஜன் புத்தகங்களை வாங்கிப் படித்தேன்'' என்று தனது போராட்ட அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார் மார்ட்டின் லூதர்கிங்.

  ""காந்தியின் தலைமையில் நடைபெற்ற அகிம்சைப் போராட்டங்கள் என்னை ஈர்த்தன. காந்தியின் தத்துவத்தை ஆழமாகப் படித்தபோது அன்பின் வலிமையைப்பற்றி என்னிடமிருந்த அவநம்பிக்கை படிப்படியாகக் குறைந்தது. விடுதலைக்குப் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, காந்தியின் அகிம்சைதான் மிகவும் வன்மையான ஆயுதம் என்பதை நான் புரிந்து கொண்டேன்'' என்று பிற்காலத்தில் மார்ட்டின் லூதர்கிங் எழுதியுள்ளார்.

  1959-ம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங்கும், அவரது மனைவியும் இந்தியா வந்திருந்தபோது, இந்தியாவில் காந்தியின் வாழ்க்கை தொடர்புள்ள இடங்களுக்கும், காந்தி ஆசிரமங்களுக்கும் நேரில் சென்று பார்த்தனர். தமிழகத்திற்கும் வந்து பல இடங்களைப் பார்த்துச் சென்ற லூதர்கிங் தம்பதியருக்கு, நிறைவாக தில்லியில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய லூதர்கிங், ""நான் ஏசுநாதரிடமிருந்து ஊக்கத்தையும், மகாத்மா காந்தியிடமிருந்து போராட்ட முறையையும் பெற்றேன்'' என்று உணர்ச்சிகரமாகக் கூறினார்.

  1969-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி தனது முப்பத்தொன்பதாவது வயதில் கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் அமெரிக்க கறுப்பு இன மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த மார்ட்டின் லூதர்கிங். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற லூதர்கிங், காந்தியடிகளின் வழியிலேயே மரணத்தையும் அடைந்தார்.

  பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த புகழ்மிக்க வரலாற்றியல் ஆய்வாளரும், கீர்த்திமிக்க எழுத்தாளருமான ரோமெய்ன் ரோலந்து, காந்தியடிகளை நேரில் சந்தித்ததோடு, உலகின் பல பாகங்களுக்குச் சுற்றித்திரிந்து ஆதாரங்களைத் திரட்டி காந்தியடிகளின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

  ""இந்திய தேசிய வரலாறு பிற்காலத்தில் எழுதப்படுகின்றபோது, மகாத்மா காந்தி ஒரு தேசிய வீரராக மட்டும் போற்றப்பட மாட்டார். இந்த யுகத்தின் வரலாற்றில் அவருடைய புகழ்மிக்க வாழ்க்கையும் போற்றப்படும். அவர் இந்திய மக்களின் ஒற்றுமை உணர்ச்சியையும், அவர்களுடைய சக்தியையும், சுதந்திர தாகத்தையும் பிரதிபலிக்கிறார். அத்துடன் மேலைநாட்டினர் மறந்துவிட்ட அல்லது கைவிட்ட ஏசுநாதருடைய உபதேசத்தை அவர் மீண்டும் புதுப்பிக்கிறார். மனித குலத்தின் ஞானிகள், புனிதர்களின் வரிசையில் அவருடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது. உலகத்தின் எல்லா நாடுகளிலும் அவருடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது. அனைத்து நாடுகளிலும் அவரது ஒளி பரவியிருக்கிறது'' என்று ரோமெய்ன் ரோலந்து காந்தியடிகளைப் பற்றிய தனது வரையரையை வெளியிட்டுள்ளார்.

  காந்தியடிகளைப் "புனிதப் போராளி' என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலா.

  ""காந்தியைப் பெற்றெடுத்த நாடு இந்தியா; தத்தெடுத்த நாடு தென்னாப்பிரிக்கா'' என்று காந்தியடிகளை உரிமை கொண்டாடும் நெல்சன் மண்டேலா, ""ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் காந்தி ஒரு பெரும் செல்வாக்கைச் செலுத்தினார். காந்தியின் போராட்ட முறையை என்னால் எந்த அளவுக்கு அதிகபட்சம் பயன்படுத்த முடியுமோ-அந்த அளவுக்கு முழுமையாகப் பயன்படுத்தினேன். ஆனாலும் எங்களை எதிர்த்துத் தாக்கியவர்களின் தாக்குதலைக் கொஞ்சமும் சமாளிக்க முடியாத ஒருகட்டம் வந்தபோது, அகிம்சை வழியில் மட்டும் போரிட முடியாத நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது'' என்று கூறிய மண்டேலா, "தாக்குதல்' என்ற ஒரே மொழிதான் ஏகாதிபத்திய வெறியர்களின் காதுகளுக்குக் கேட்கிறது. எந்த ஒரு நாடும் கொஞ்சநஞ்ச தாக்குதல்கூட இல்லாமல் விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெறவில்லை'' என்று 1962-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் நெல்சன் மண்டேலா தனது உரையில் குறிப்பிட்டார்.

  ""பெரும் பகுதி மக்கள் பட்டினி கிடக்கையில் சிலர் மட்டும் சாப்பிட வழிவகை செய்யும் சமுதாயத்தைப் பார்க்கிறபோது, வேலையின்றித் தவிக்க வைக்கும் பொருளாதாரச் சூழலைக் கவனிக்கிறபோது உலகமயமாக்கலுக்கு மாற்றாக காந்திய மாற்று பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது எங்களது நிலைமை'' என்று இக்காலச் சூழல் குறித்து நெல்சன் மண்டேலா கருத்துத் தெரிவித்துள்ளது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

  லியோ டால்ஸ்டாய் உலகப்புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எழுத்தாளர் என்ற வட்டத்தையும் தாண்டி, உலகெங்கும் உள்ள பல்துறைச் சான்றோர்களால் ஒரு ஞானியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

  1909-ம் ஆண்டே டால்ஸ்டாய்க்கும், காந்தியடிகளுக்குமிடையில் கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இளம் வயதிலேயே மூத்த அறிஞராக விளங்கிய டால்ஸ்டாயின் நன்மதிப்பிற்குரியவராக விளங்கிய காந்திக்கு தனது கடிதத்தில் டால்ஸ்டாய், ""நீங்கள் முக்கியமான விஷயங்களைப்பற்றி எழுதியிருப்பதால் அதிகமான அக்கறையுடன் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். சாத்வீகமான எதிர்ப்பு மிகவும் முக்கியமான பிரச்னை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனித சமூகத்துக்கே!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் டால்ஸ்டாய் பெயரில் பண்ணைகளை அமைத்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பயிற்சிக் களமாக அப்பண்ணைகளைப் பயன்படுத்தினார் காந்தியடிகள்.

  உலகத்தின் கவனத்தை தனது நகைச்சுவை ததும்பிய நடிப்பாற்றலாலும், நல்ல கருத்துகளை நானிலமெங்கும் உள்ள மக்கள் நெஞ்சங்களில் தனது அளப்பரிய ஆற்றலினால் விதைத்ததாலும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் சார்லி சாப்ளின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை நேரில் சந்தித்து, காந்தியடிகள் கைது செய்யப்பட்டது குறித்து நேருக்குநேர் ஆழமாக விவாதித்தார்.

  அப்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டது குறித்து தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, ""ஒரு காந்தியைக் கைது செய்தால் பலநூறு காந்திகள் முளைப்பார்கள்'' என்று சர்ச்சிலின் முன்னிலையில் முகத்திற்கு முகம் தெரிவித்தார் சார்லி சாப்ளின்.

  இத்தகைய சாப்ளின், இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்காக 1931-ல் லண்டனுக்கு காந்தியடிகள் சென்றிருந்தபோது, மகாத்மாவைச் சந்திக்க மிகுந்த சிரத்தையெடுத்து, லண்டனிலிருந்த சரோஜினிநாயுடு மூலமாக நேரம் ஒதுக்கித் தரப்பெற்றார். காந்தியடிகளின் நோக்கம், லட்சியப் பயணம் குறித்த பல கேள்விகளை பேட்டி வடிவில் கேட்டு, விளக்கம் பெற்று பெரும் திருப்தியடைந்தார் சாப்ளின்.

  உலகம் முழுவதும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளாம் அக்டோபர் 2-ம் தேதியை ஆண்டுதோறும் "சர்வதேச வன்முறை மறுப்புதின'மாகக் கொண்டாட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முடிவெடுத்துள்ளது. ஆம்... நம் தேசப்பிதாவை உலகமே ஒப்புக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.