கல்வியா? செல்வமா?
மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மிருகமாகி விடுவான்; அவனை மனிதனாக மாற்றுவது கல்வி. எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும், அந்தக் கல்வியைப் பெறுவதற்கும


மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மிருகமாகி விடுவான்; அவனை மனிதனாக மாற்றுவது கல்வி. எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும், அந்தக் கல்வியைப் பெறுவதற்கும் பொருள்செல்வம் இல்லாமல் முடியாது என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.
இன்றைய உயர்கல்வி மட்டுமல்ல, தொடக்கக் கல்வியும் மக்களுக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்டது. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாய்ந்து பறக்கும் இந்தத் தேசிங்குராசன் குதிரையை அடக்குவார் யாரும் இல்லையா? அரசாங்கமும், அதிகாரிகளும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மட்டும்தானா?
இப்போது எங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத் தகுதியை மீறிய ஆசை பிடித்து ஆட்டுகிறது; இருப்பதை இழந்து விட்டுப் பறப்பதற்கே ஆசைப்படுகிறார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இதனை எண்ணெய் ஊற்றி எரியச் செய்கின்றன. வெற்று விளம்பரங்களில் வீழ்ந்து பொய்களை உண்மைகளாக ஏற்கின்றன. இதற்குக் கலாசாரம் மட்டுமல்ல, கல்வியும் விதிவிலக்காக முடியுமா?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைவிட உயர்ந்த கல்வி, தனியார் கல்விக் கூடங்களில்தான் இருக்கிறது என்று எண்ணுகின்றனர். அவைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு இரவும், பகலும் தூங்காமல் அலைகின்றனர். கடன் வாங்கியாவது அவர்கள் கேட்கும் தொகையைக் கட்டுகின்றனர்.
ஆனால் எவ்வளவு காலத்துக்கு இப்படி கடன் வாங்கிக் கட்ட முடியும்? வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி இப்பள்ளிகளுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, கடைசியில் கடனைக் கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். தமது பிள்ளைகள், "மம்மி, டாடி' சொல்வதற்காகவும், அவர்கள் சொல்லும் "ரைம்ஸ்'களைக் கேட்டு ரசிப்பதற்காகவும், பெற்றோர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான்.
நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆசைப்பட்டு ஆரம்பத்தில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் பாதியில் நிறுத்தியவர்கள் ஏராளம். தாங்கள் கண்ட கனவு நிறைவேறாமல், "பகல் கனவாகி விட்டதே!' என்று வெளியில் சொல்ல முடியாமல் வெந்து நொந்தவர்களுக்குக் கணக்கே இல்லை.
நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய புதிய பள்ளிகள் பெரிய பெரிய விளம்பரத்தோடு ஆசைகாட்டுகின்றன. அரசின் அங்கீகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மக்களிடம் நன்கொடைகள் வாங்கியே கட்டடங்கள் கட்டித் தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. மாணவர் வருகை அதிகரிக்க அதிகரிக்கக் கட்டணங்களையும் உயர்த்திக் கொண்டே போகின்றன.
லாபகரமான இந்த வணிகம் பட்டிதொட்டியெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. முதலீடும் தேவையில்லை. இதனால்தான் எங்குமே இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இப்போது சுமார் 3700-க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ வழிப்பள்ளிகள் செயல்படுகின்றன.
சென்னை போன்ற நகரங்களில் எல்.கே.ஜி. படிப்பிற்கே பெரும் போட்டியைச் சமாளித்தாக வேண்டும்; ஆறு மாதங்களுக்கு முன்பே சேர்க்கை தொடங்கிவிடும். பெற்றோர்கள் பட்டதாரிகளா? பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவார்களா? தேர்வில் வெற்றி பெறுவார்களா? இவ்வளவு கேள்விகளையும் சமாளித்து வரிசையில் நின்று உள்ளே போனால் அவர்கள் கேட்கும் அதிர்ச்சிக் கேள்வி: "எவ்வளவு நன்கொடை தருவீர்கள்?'
இதுபோலவே எங்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடம்பிடிக்கப் பெரும் போட்டியையே சந்திக்க வேண்டியுள்ளது. நன்கொடைகளும், கட்டணங்களும் அரசாங்கம் நிர்ணயித்த வரம்புக்குள் அடங்குவதில்லை; ஆசைக்கு அளவேது?
இன்றைய சூழ்நிலையில் பணத்துக்கே முதலிடம் தருவதால் கல்வியின் தரம் குறைந்து கொண்டே போகிறது என்று பெற்றோர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழை மொழிப்பாடமாக எடுப்பவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடியும். நகரங்களில் தமிழை விட பிறமொழிப் பாடங்களை எடுத்துப் படிப்பவர்களே அதிகமாக இருப்பதால் சென்னை போன்ற நகரங்கள் முதலிடங்களை இழந்து வருகின்றன.
கிராமப்புற மாணவர்களிடம் படித்துச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால்தான் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட நான்கு மாணவர்களும் கிராமப்பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம, நகர மாணவர்களுக்கான இந்த ஆரோக்கியமான போட்டி தொடர வேண்டும் என்றே கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வழக்கமாகவே அதிகம். இந்தக் கல்வியாண்டு (2009 - 10) கட்டணத்தை இப்பள்ளிகள் இன்னும் கூடுதலாக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி பெற்றோர்கள் கேள்வி கேட்க முடியாது. அப்படியொரு அடக்குமுறை. கேட்டால் பதில் தயாராக இருக்கிறது. ""உங்களால் முடியாவிட்டால் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு போய்விடுங்கள்'' என்று பள்ளி நிர்வாகம் ஆத்திரமாக அல்ல, அமைதியாக மிரட்டுகிறது; பெற்றோர்களையும், பிள்ளைகளையும் நவீன அடிமைகளாகவே நடத்துகிறது.
பயிற்சியில்லாத ஆசிரியர்கள், பயன்படாத விளையாட்டு மைதானம், காட்சிக்காகவே இருக்கும் அறிவியல் ஆய்வகம், ஆரோக்கியம் இல்லாத கழிவறைகள் இவைகளே பல நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிலைமை. இதற்கு விதிவிலக்காக சில பள்ளிகள் இருக்கலாம்.
இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து கல்விக்குழுவினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை. செயல்படுத்துமாறு அரசும், கல்வித்துறையும் கட்டாயப்படுத்துவதுமில்லை. இதையே இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் போன மாட்டையும் தேடுவதில்லை; வந்த மாட்டையும் கட்டுவதில்லை.
"1960-ம் ஆண்டுக்குள் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளித்தல்' என்பதை நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. ஆனால் ஆட்சிபீடம் ஏறிய ஆட்சியாளர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை; கருத்தில் கொள்ளவுமில்லை.
ஆட்சியாளர்கள் கவலைப்பட்டிருந்தால் இலவசமாகக் கிடைக்க வேண்டிய இந்தக் கல்விக்கு இவ்வளவு விலை கொடுக்க நேர்ந்திருக்குமா? கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதி ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே போகுமா?
காமராஜ் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி நாளாக'க் கொண்டாடும்படி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கல்வியைத் தூக்கி நிறுத்திய கர்ம வீரரின் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. அரசுப் பள்ளிகளை மக்கள் விரும்பும்படி மாற்றிக் காட்ட வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா?
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கான அடிப்படை தொடக்கக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும்.
ஏழைகளுக்கான கல்வி, பணக்காரர்களுக்கான கல்வி, கிராமப்புறத்துக்கான கல்வி, நகர்ப்புறத்துக்கான கல்வி என்று வேறுபட்டுக் கிடந்தால் சமத்துவ சமுதாயம் எப்படி உருவாகும்? இதற்காக அறிவிக்கப்பட்ட "சமச்சீர் கல்வி' இந்த ஆண்டும் செயல்படுத்தப்படவில்லை.
""கல்வியும், திறன் மேம்பாடும் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் முக்கிய அம்சங்களாகும். எனவே அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இவை மிகவும் முக்கியமாகும். ஆகவே தொடக்கக் கல்வியை வழங்குவதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஒரு நல்ல தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது...'' என்று பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நடைமுறையில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. ஒரு நர்சரிக் குழந்தை கூறியது: ""நான் பெரியவன் ஆனதும் என் அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கித் தருவேன். ஏன்னா, எங்க வீட்டை வித்துத்தான் என்னை நர்சரியில் சேர்த்தார்...''
துணுக்குச் செய்தியாக இருந்தாலும், இதுகூறும் உண்மையை மறந்துவிட முடியாது. இப்போது கூறுங்கள்: கல்வியா? செல்வமா? எட்டாத இந்தக் கல்வி எல்லோருக்கும் எட்டுவது எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...