உண்மைத் தொண்டர்கள் யோசித்துப் பாருங்கள்!
பெருந்தலைவர் காமராஜ் இளமைப் பருவத்தில் திருமணத்தைத் துறந்து நாட்டின் விடுதலைக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். காந்தியடிகளின் தலைமையை ஏற்று விருதுப்பட்டியில் எளிய தொண்டனாகத் தனது அரசியல் வ


பெருந்தலைவர் காமராஜ் இளமைப் பருவத்தில் திருமணத்தைத் துறந்து நாட்டின் விடுதலைக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். காந்தியடிகளின் தலைமையை ஏற்று விருதுப்பட்டியில் எளிய தொண்டனாகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வரை உயர்ந்த பெருமைக்குரியவர். இந்தியத் தேசியத் தலைவராக உயர்ந்து நின்றபோதும் அவருடைய கால்கள் தமிழகம் என்னும் தளத்தில்தான் பதிந்து நின்றன. தமிழர்களுக்குத் துயர் வந்தபோதெல்லாம் அதைத் துடைப்பதில் முன் நின்றவர். இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு 1946-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதியன்று தமிழரசுக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் காங்கிரஸ் கட்சிக்குள் தொடங்கினார். இதன் முதல் செயற்குழு கீழ்க்கண்ட அம்சங்கள் கொண்ட ஓர் அறிக்கையைத் தயார் செய்தது. ""1947-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரும் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். சுயநிர்ணய உரிமையின் வழியே தமிழ்நாட்டில் எல்லைக் கோளல், அரசியல் அமைப்பு வரையறுத்தல் முதலிய நிகழ்ச்சிகள் நிகழ்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழர் திருநாளை தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவாகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாட முன்வர வேண்டும்'' என்பதுதான் அது. மேற்கண்ட அறிக்கையில் கையெழுத்திடும்போது காமராஜ் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக இருந்தார் என்பது முக்கியமானதாகும். தமிழ் இயக்கக் கவிஞரான பாரதிதாசன் பொதுவுடைமைவாதியான ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து நிற்க அவர் தயங்கவில்லை. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர வேறு யாருக்கும் படிப்பிலோ அல்லது பதவியிலோ இடஒதுக்கீடு அளிப்பது சட்ட விரோதமாகும் என ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டு சாதகமான தீர்ப்பும் அளிக்கப்பட்டது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு இந்தத் தீர்ப்பின் மூலம் செல்லாததாக ஆக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ், பிரதமர் நேருவைச் சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கினார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முதலாவதாகக் கொண்டு வரப்பட்ட திருத்தம் இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்த திருத்தம் ஆகும். இதற்குக் காரணமானவர் காமராஜ். பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் நலனை தில்லி தலைமையின் பலிபீடத்தில் காவு கொடுத்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள காமராஜ் துணியாதவர். 1920-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை காந்தியடிகள் ஏற்றபோது காங்கிரஸ் கட்சியை மொழிவாரியாகத் திருத்தி அமைப்பது என முடிவு செய்தார். ஆனால் 1956-ம் ஆண்டில் பிரதமர் நேரு இந்தியா முழுவதையும் 5 மண்டலங்களாகப் பிரிக்கலாம் என்று யோசனை கூறினார். தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களையும் ஒன்றாக இணைத்து, தட்சிணப் பிரதேசம் உருவாக்குவது பற்றி ஆராய்வதற்காக 3 மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களை பெங்களூருக்கு வரும்படி பிரதமர் நேரு அழைத்தார். நேருவின் அழைப்பை ஏற்று பெங்களூருக்குச் சென்ற முதலமைச்சர் காமராஜ், தமிழகத்தின் எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி தட்சிணப் பிரதேசத் திட்டத்தை ஏற்க மறுத்தார். தமிழ்நாட்டின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து 15 ஆண்டு காலத்திற்குள் மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு, அந்த இடத்திற்கு இந்தி ஆட்சி மொழியாகக் கொண்டு வரப்பட வேண்டுமென அரசியல் சட்டத்தின் 17-வது பகுதியின் முதல் பிரிவில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் சட்டத்தின் 17-வது பகுதியின் 2-வது உட்பிரிவின்படி 1965-ம் ஆண்டுக்குப் பிறகும் தேவையானால் ஆங்கிலத்தை நீடிக்கச் செய்ய குடியரசுத் தலைவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் உண்டு. இந்த உட்பிரிவின்படி 1963-ம் ஆண்டு மே மாதத்தில் பிரதமராக நேரு இருந்தபோதே நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழிச் சட்டம் 1963 கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு பிரதமர் நேருவுடன் காமராஜும் காரணமாக இருந்தார். இச்சட்டம் பற்றிய விவாதம் நடக்கும்போதே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற காலம் வரை ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போது ஈ.வெ.கி. சம்பத் மூலம் எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆட்சி மொழிச் சட்டத்தில் சேர்ப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான பெரும்பான்மை அப்போது காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. எனவே பிரதமர் நேரு இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் விரும்புகிற காலம் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தலைவர் காமராஜ், இந்தியத் தேசியத் தலைவராக விளங்கினாலும் தமிழ்நாட்டு நலன்களை அவர் ஒருபோதும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அதற்காக காங்கிரஸ் தலைமையோடு முரண்பட்டு நிற்கவும் அவர் தயங்கியதில்லை. எல்லா வகையிலும் தமிழன் என்ற தளத்தில் நின்று தேசியவாதியாக அவர் பரிமளித்தார். ஆனால் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் உதட்டளவில் காமராஜ் ஆட்சி என்று கூறிக்கொண்டே உள்ளத்தளவில் காமராஜ் செயல்பாடுகளை அடியோடு மறந்து புறக்கணித்து விட்டார்கள் என்பதல்லவா உண்மை! ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்திய அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்த முற்றிலுமாகத் தவறிவிட்டார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் போன்ற நதிநீர் பிரச்னைகளிலும், சிங்களக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதையும் இந்திய அரசுக்குத் தெரிவித்து பரிகாரம் தேடவும் இவர்கள் முன்வரவில்லை. இதன் விளைவாக இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமில்லாத வகையில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். தமிழகக் கூட்டணித் தலைவரான கருணாநிதி வருமானம் வரக்கூடிய கொழுத்த துறைகளைத் தனது கட்சியினருக்குப் பெறுவதில் காட்டிய அக்கறையைத் தமிழர் நலனில் காட்டவில்லை. மேலும் நான்கு தமிழர்கள் காபினெட் அமைச்சர்களாகவும் 9 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். இத்தனை அமைச்சர்கள் இருந்தும் ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்க முடியவில்லை. ஈழத் தமிழருக்கு எதிரான இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியாத இவர்கள், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறைந்தபட்சம் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததோடு மட்டுமல்ல, மீண்டும் அமைச்சர்களாகிவிட வேண்டும் என ஆசையின் காரணமாக தேர்தலில் போட்டியிட முன் வந்திருக்கிறார்கள். காமராஜின் உண்மையான தொண்டர்கள் இவற்றையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் தில்லியில் அமையவிருக்கும் ஆட்சி எந்த ஆட்சியாக இருந்தாலும் இத்தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்புதான் அந்த ஆட்சியையும் சரியான பாதையில் செயல்பட வைக்கும். எனவே காமராஜ் செயல்பட்ட விதத்தையும் தமிழர்களின் நலன்கள் அதனால் பாதுகாக்கப்பட்ட முறையையும் எண்ணிப் பார்த்துச் செயல்படுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...