தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்!
தேர்தல் முக்கோணத்தில் வேட்பாளர்கள்-வாக்காளர்கள்-வாக்களிப்பு முறை ஆகிய "தங்க முக்கோணம்' அமைய வேண்டும். பாரதி காலத்தின் முப்பது கோடி மக்கள் இன்று நூறு கோடிக்கும் அதிகம். அதனால் தேர்தல் சீர்திருத்தங்கள்


தேர்தல் முக்கோணத்தில் வேட்பாளர்கள்-வாக்காளர்கள்-வாக்களிப்பு முறை ஆகிய "தங்க முக்கோணம்' அமைய வேண்டும். பாரதி காலத்தின் முப்பது கோடி மக்கள் இன்று நூறு கோடிக்கும் அதிகம். அதனால் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து சில அறிவியல் சிந்தனைகளை ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. முதலாவதாக வேட்பாளர் திருத்தம்: நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கல்வித் தகுதி முக்கியம். குறைந்தபட்சம் பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். குற்ற வழக்குகளில் சம்பந்தப்படாத நல்லவர்களே ஆட்சிப் பீடத்தில் அமரவேண்டும். அரசின் கடைநிலை உத்தியோகத்துக்கு பணி நியமனம் செய்யும்போதுகூட அவர் மீது ஏதேனும் போலீஸ் வழக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே நியமன ஆணை வழங்கப்படுகிறது. ஆனால், நேற்றுவரை சமூக விரோத அல்லது தீவிரவாதப் பிரச்னைகளில் சிக்கியவர்கள் இன்று மகாத்மாக்கள் ஆவதுதான் ஆச்சரியம். ஒருவர் மீது வழக்குகள் வாழ்நாள் முழுவதும் நடக்கும். தீர்ப்பு வரும் வரை காத்திருந்தால் என்னவாகும்? வயது அல்லது உடல் ஆரோக்கிய நிலை சார்ந்து உச்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யலாம். இளைஞர்களுக்கு முன்னுரிமை முதல் தேவை. அனுபவசாலி ஆட்சியாளர்கள் அவ்வப்போது வெளியில் இருந்து ஆதரிக்கலாம். ஆலோசனைகள் வழங்கலாம். சுயமாக நடக்கவே முடியாத வயோதிக உறுப்பினர்களால் தங்கள் தொகுதிகள் தோறும் ஓடிச் சென்று எந்த அளவுக்குத் துடிப்புடன் வேலை செய்ய முடியும்? அவரவர் சொத்து அடிப்படையில் வேட்பாளர் தகுதியின்மையை வரையறுத்தாக வேண்டும். ஒவ்வொரு ஐந்தாண்டுப் பதவி இறுதியிலும் நம் மக்கள் பிரதிநிதிகள் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து விடுவது வெட்ட வெளிச்சம். இதில் கட்சி வேறுபாடின்றி தண்டிக்கலாம். வழக்கு, விசாரணையே வேண்டாம். உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? வேட்பாளர் தாம் பிறப்பு அல்லது குடியுரிமைச் சான்றிதழ் அடிப்படையில் அந்தந்தத் தொகுதியில் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். ஜனநாயகம் என்றாலே ஒரு பகுதியில் வாழும் மக்கள் தம் தொகுதியில் தங்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களை அறிந்தவரும், தங்கள் பகுதியில் பிறந்து வளர்ந்தவருமான நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கவே விரும்புவார்கள். அன்றி நாட்டின் வேறு ஒரு பகுதியிலிருந்து வந்து இங்கு போட்டியிடுபவர்களை விரும்பமாட்டார்கள். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவது இரட்டிப்புத் துரோகம். ஒருவேளை இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு தொகுதியை மட்டுமே அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியும். மறு தொகுதிக்கு மீண்டும் இன்னொரு தேர்தல் தேவை. அதனால் வீண் செலவும் கால விரயமும்தானே? ஆதலால், இரட்டை வேட்பு மனுத் தாக்கலையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாமா என்று மறு பரிசீலனை செய்யலாம். ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போது அவரவர் தனிச் செயலர்கள், காவல் அதிகாரிகள், பாதுகாப்புப் படை அடங்கிய "அரசாங்க இயந்திரம்' ஆகியவற்றைப் பயன்படுத்துவது ஒரு தலைப்பட்சமானது அல்லவா? தேர்தல் முடியும் வரை ஆட்சியாளர்கள் தங்கள் பதவி அதிகாரத்தைக் கையாளக் கூடாது. வாக்குக் கேட்டு வருபவர் கட்சி உறுப்பினர் என்பதைவிட ஆட்சி உறுப்பினர் அல்லது அமைச்சர் என்பதே மக்கள் மனதில் தூக்கலாக இருக்கும். இனி வாக்காளர் தகுதி பற்றிய திருத்தம்: மனித உயிரினத்தில் முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் மனப்பக்குவம் அற்றவர்கள் என்பதால் இளைஞர்கள் யாருக்குமே வாக்குரிமை வழங்கப்படவில்லை. அவ்வாறே, சராசரி மனித வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களையும் மனத்தடுமாற்றம் மிக்கவர்கள் என்பதால் அவர்தம் வாக்குரிமையைத் தவிர்க்கலாம். அதாவது வாக்காளருக்கான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்பட வேண்டும். மூன்றாவதாக வாக்களிப்பு முறையில் சீர்திருத்தங்கள்: நம் நாட்டில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாக்காளர்கள் என்றால் ஐம்பது சதவீதம் பேர் மட்டுமே வாக்களிக்கின்றனர். அதிலும் சராசரி 50 சதவீதம் பேர் வாக்குகளால் ஒரு கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெறுகிறது. ஆக, மொத்தத்தில் நூற்றுக்கு 10-15 பேரால் ஜனநாயக ஆட்சி மலர்கிறது. இந்தப் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. வாக்களிப்பு சதவீதத்தை அதிகப்படுத்த ஒரே வழி அனைவருக்கும் வாக்காளர் அட்டைக்குப் பதில் அவரவர் வங்கிக் கடன் அட்டை, அலுவலக அடையாள அட்டை, வருமான வரிக் கணக்கு அட்டை போன்ற தனி நபர் அடையாள அட்டையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். இதன் வழி யாரும் இந்தியாவின் எந்தத் தொகுதியில் இருந்தாலும் தங்கள் சொந்தத் தொகுதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கு அந்தந்த ஊர்களில் வங்கி தானியங்கி பணம் வழங்கி இயந்திரம் அல்லது இன்டர்நெட் மையம் போன்ற மின் வாக்குச் சாவடி மூலம் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதுவே உண்மையான மின்-வாக்களிப்பு முறை. அவரவர் வாக்கைப் பதிவதற்குத் "தனிநபர் குறியீடு எண்' உதவும். அவ்வாறே, ஒருவர் தேர்தல் நாளில் ஒருமுறைக்கு மேல் வாக்களிக்க அந்த அட்டையைக் கையாள முடியாதபடி கணிப் பொறியில் ஆணைநிரல் அமைத்துத் தடுத்துவிடலாம். இந்த முறையால் பணி நிமித்தம் தேர்தல் சமயத்தில் வெளியூர் சென்றவர்கள் அல்லது அரசு வேலை காரணமாக வெளி மாநிலங்களில் பணியாற்றும் காவல்துறையினர், அரசு ஊழியர்கள் அனைவருமே இருந்த இடத்தில் இருந்தபடியே தங்கள் சொந்தத் தொகுதியில் வாக்களிக்கலாம். இதனால் எவரது வாக்குரிமையும் இழப்பாகாது. பொதுவாக வாக்குச் சாவடியில் பாதுகாப்பு இன்மையால் படித்த அல்லது நடுத்தர வகுப்பினர் வாக்குப் போடச் செல்வதில்லை. இந்த அச்ச உணர்வு மின் வாக்களிப்பு முறையால் மறையும். எந்த வாக்குச் சாவடியிலும் சென்று மின் வாக்குப் பதியலாம். தேர்தலும் சிக்கனமாக நிறைவேறும். கையில் தடவிய மையை அழித்துவிட்டு மீண்டும் எவரும் வேறு ஒருவருக்காய் வாக்களிக்க முடியாது. வாக்குப் பெட்டியும் திருட்டுப் போகாது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கட்சிக்காரர்கள் தாங்களே அச்சடித்துக் கொண்டு வந்த அந்தத் தொகுதிக்கான "கள்ளச் சீட்டுகள்' நிறைந்த போலிப் பெட்டிகளும் எண்ணிக்கைக்குச் சேர்க்கப்பட மாட்டாது. இத்தகைய மின்-வாக்குச் சாவடிகளை ரயில்வே சீட்டுப் பதிவுக் கூடங்கள் மாதிரி ஒரு மைய இணைய அலுவலகத்துடன் இணைத்துவிட்டால் நாம் அளித்த வாக்கு அந்தக் கணமே மைய அலுவலகத்தில் பதிவாகிவிடும். அது அழியாது. தொலையாது. யாராலும் அழிக்கவும் முடியாது. அகற்றவும் முடியாது. எண்ணுவதும் மிக எளிது. இவை வெறும் தேர்தல் நேர சிந்தனைகளாக மட்டும் இருந்துவிடக் கூடாது. நாடு தழுவிய விவாதம் இந்த விஷயத்தில் நடைபெற்று, நமது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும், தேர்தல் நடைபெறும் விதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும். பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சீர்திருத்தத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...