நோஹாச் முல் (Nohoch Mul) என்று இந்த பிரமிடை அழைக்கிறார்கள். அதற்கு ‘பெரு மலை’ என்று அர்த்தம். யூகாட்டன் பெனிசுலாவில் உள்ள உயரமான பிரமிடு இதுதான். பூமியிலிருந்து வானத்திற்கு இணைப்பு ஏற்படுத்த கட்டப்பட்ட பாலம் போலத் தோன்றியது. இதன் உயரம் 136 அடிகள். கடும் வெயிலில் இவ்வளவு உயரம் ஏறமுடியுமா என்கிற சந்தேகம் வந்தது. இருந்தாலும் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்கிற ஆர்வத்தில் துணிந்து ஏறி விட்டோம். படிகள் கரடு முரடாகவும், மிகவும் குறுகலாகவும் இருந்ததால் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது . பிடித்து ஏறுவதற்கு நடுவில் பெரிய வடக் கயிறு ஒன்று பிரமாண்டமாகத் தொங்கியது. பாதி தூரம் வந்ததும், நம்மால் முடியாது கீழே இறங்கி விடுவோம் என்று தோன்றியது. இருந்தாலும், ஒரு வழியாக முக்கி, முனகி, தம் பிடித்து மேலே வந்து சேர்ந்தோம். உச்சியில் மிகவும் குறுகிய கல் தளமும், சிறிய வாசலுள்ள சிறிய செவ்வக வடிவ கல் மண்டபம் (கோவில்) இருந்தது. கருவறை மண் மேடிட்டு வெற்றிடமாகக் கிடந்தது. வாசலின் மேல் உள்ள நிலையின் மீது தெய்வம் ஒன்று தலை கீழாக நின்று கொண்டிருந்தது. இரும்பு வேலிக் கதவின் மேலே 'DO NOT ENTER' என்கிற அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருந்தது . அங்கிருந்து சுற்றிலும் பார்க்கையில் மயிர்கூச்செறிந்தது. பூமிக்கும் வானத்திற்கும் நடுவே தொங்கிக் கொண்டு மரங்களின் மேல் பகுதியையும், சுற்றி இருந்த இடங்களையும் முப்பரிமாணத்தில் பறவைகள் பார்ப்பது போல பார்க்க முடிந்தது. உச்சியில் இருந்த தளம் மிகவும் குறுகியதாக இருந்ததால் ‘கரணம் தப்பினால் மரணம் “ என்கிறது போல கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டாலும் மேலிருந்து கீழே உருண்டு விடுவோம் என்கிற பயம் அடிவயிற்றிலிருந்து எழுந்து உடம்பை நடுங்க வைத்தது. அதோடு மாயன் மன்னர்கள் இந்த இடத்தில் நின்று கொண்டுதான் தங்கள் கடவுளுக்கு உயிர்ப் பலி ( நரபலி) செய்வார்கள் என்பது புத்தகங்களில் படித்தது தீடிரென்று நினைவுக்கு வந்தது. உச்சியில் இருக்கும் பலி பீடத்தில் பலியிடுபவர்களை மல்லாக்க, கீழ் நோக்கி வளைத்து படுக்க வைத்து அடிநெஞ்சில் (விலா எலும்புகள் முடியும் இடத்தில்) பிறை வடிவில் அறுத்து உள்ளிருக்கும் இதயத்தை பிடுங்கி எடுத்து சாமிக்கு காணிக்கையாக்குவார்கள். பிறகு தலையை கொய்து படிகளில் உருண்டோடச் செய்வார்கள். உடலையும் படிகளின் மீது வீசி எறிவார்கள்.