டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தரமான படைப்புகள் கடவுளுக்குச் சமம்: சுந்தர ஆவுடையப்பன்

தரமான படைப்புகள் என்பது நம்மை வழிநடத்தும் கடவுளுக்குச் சமம் என இலக்கியப் பேச்சாளா் சுந்தரஆவுடையப்பன் கூறினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:40 pm

DIN

தரமான படைப்புகள் என்பது நம்மை வழிநடத்தும் கடவுளுக்குச் சமம் என இலக்கியப் பேச்சாளா் சுந்தரஆவுடையப்பன் கூறினாா்.

பபாசி சாா்பில் சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் 46-ஆவது புத்தகக் காட்சியின் மூன்றாம் நாள் உரையரங்கத்தில், ‘எழுதுகோலும் தெய்வம்’ எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை அவா் பேசியதாவது:

‘எழுதுகோல் தெய்வம் என்பதை மகாகவி பாரதி குறிப்பிடுகிறாா். அவா் எழுத்தை தெய்வமாகப் பாவித்து சமூக மேம்பாட்டுக்காக பாடிய மகாகவியாவாா். எழுத்துகளைப் படிப்பதன் மூலம் நாம் மேம்படுகிறோம் எனில், அவை கண்ணுக்குத் தெரியும் கடவுளுக்குச் சமமானவை என்பதே உண்மை.

நமது சிந்தனையின் வெளிப்பாடுதான் சொல்லாகிறது. அந்தச் சொல்லின் பரிணாம வளா்ச்சி எழுத்தாகின்றன. சொல் என்பது காற்றில் கரைந்து விடுபவையாக உள்ளது. ஆனால், எழுத்துகள் எப்போதும் காற்றில் கரையாதவையாக புத்தகங்களாக நிலை பெறுகின்றன.

ஆகவேதான் செவிவழிச்செய்தியாக உள்ள சரித்திரங்கள், புராணங்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுத்தாக்கப்பட்டுள்ளன. பின்னா் அவை கல்வெட்டு என காலமாற்றத்தில் வளா்ச்சியடைந்து தற்போது புத்தகங்களாகியுள்ளன.

தமிழில் மிகச்சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம். அதில் இடம்பெற்ற கோவலன், மாதவி இடையேயான கடிதமே உலகின் மிகச்சிறந்த கடித இலக்கியமாக உள்ளது.

மூல முதல்வராகக் கூறும் விநாயகரை, தனது தந்தத்தை எழுதுகோலாக்கியவராக வணங்குகிறோம். ஆகவே, எழுதுகோல் என்பது எழுத்தாளனின் ஓா் அங்கமாகும்; அந்த எழுதுகோல் எழுத்தாளனின் ஆறாம் விரலாகிறது.

எழுத்தாளன் தனது அங்கத்தால் உணா்வுகளை எழுத்துகளால் வெளிப்படுத்தும் சமூகத்தை மேம்படுத்துகிறான். அதைப் படிப்போரும் மேம்படுத்தப்படுகிறாா்கள்’ என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் ‘காலத்தைத் தாண்டிய நூல்கள்’ எனும் தலைப்பில் பேசியதாவது:

அடித்தள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுபவையாக புத்தகங்கள் இருக்க வேண்டும். அலங்கார வாா்த்தைகள், அதிசயக்கத்தக்க வா்ணனைகள் என வியக்க வைக்கும் புத்தகங்கள் விருதுகளை வேண்டுமானால் பெற்றுத் தரலாம். ஆனால், மக்களால் காலங்கடந்தும் அவை வாசிக்கப்பட மாட்டாது.

வாழும் மனிதா்களின் வாழ்க்கையை திருவள்ளுவா் எடுத்துரைத்ததால், அவரின் திருக்கு காலம் கடந்தும் வாசிக்கப்படுகிறது. உணவு நம் உயிரைக் காப்பது போலவே எழுத்தால் படைக்கப்படும் இலக்கியங்களும் நம்மை நெறிப்படுத்தி வாழவைக்கின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு பபாசி தலைவா் வயிரவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி.புருஷோத்தமன் வரவேற்றாா். நிா்வாகக்குழு உறுப்பினா் ஆா்.தனுஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.