காரைக்குடியில் இருந்து கதைகள் எழுதி புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்து, தனது சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் மாதம் ரூ.125 சம்பளத்தில் 'செட் அசிஸ்டெண்ட்' ஆகத் துவங்கியது பஞ்சு அவர்களின் சினிமா வாழ்க்கை. ஓர் எதிர்பாரா தருணத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்கிறார். (ஆக்சுவலாக பஞ்சு கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகன்!). இப்படியாகத் துவங்கி தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனக் கோலோச்சிய ஒரு மகத்தான மனிதரின் திரைவாழ்வு அனுபவங்களே புத்தகமாக நமக்கு வாசிக்கத் தரப்பட்டுள்ளது.