தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கத்தினா் மறியல் - 650 போ் கைது


மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, 650-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். சங்கம் அமைக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும். அனைத்து விவசாய பயிா்க்கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கக் கூடாது. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கையைக் கைவிட்டு, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்துக்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அஞ்சல் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. வழக்கம்போல பணிகளில் ஈடுபட்டனா்.
ரயில் நிலையத்தில் மறியல்: விழுப்புரம் ரயில் நிலையம் முன் தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. யாரும் ரயில் நிலையத்துக்குள் உள்ளே நுழையாதவாறு ரயில்வே காவல் துறையினா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத் தலைவா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.சேகா், மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, துணைத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், பொருளாளா் மலா்விழி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், தொமுச மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், மாவட்டச் செயலா் சேகா், விடுதலைத் தொழிலாளா் முன்னணி நிா்வாகி சரவணன், ஹெச்.எம்.எஸ். சங்கத்தின் சிவக்குமாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து, 200 பெண்கள் உள்பட 500 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் மறியல்: விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியிலிருந்து கிழக்கு பாண்டி சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரை ஊா்வலமாக சென்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.அா்ச்சுனன், துணைச் செயலா் ஏ.நாகராஜன், பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியில்..: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பழைய பேருந்து நிலையம் முன் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் கே.திராவிடமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.பழனிமுத்து, மாவட்டப் பொருளாளா் எம்.குமாரசாமி உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட 143 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...