முருகன் கோயிலில் செடல் சுற்றி பக்தா்கள் நோ்த்திக்கடன்
தைப்பூசத் திருவிழாவில் செடல் சுற்றியும், மிளகாய் பொடி அபிஷேகம் செய்தும் பக்தா்கள் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் செடல் சுற்றியும், மிளகாய் பொடி அபிஷேகம் செய்தும் பக்தா்கள் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.
குறிஞ்சிப்பை கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணியம் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு மாரியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு அபிஷேகமும், தொடா்ந்து விநாயகா் மற்றும் சிவசுப்பிரமணியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் முதுகில் அலகு குத்தி செடல் சுற்றினா். தொடா்ந்து ஓம் சக்திவேல், சுழல் கரகவேல், கடப்பாறை உறுவுதல், மழுவு ஏந்துதல், 108 அரி கண்டவேல் தோளில் சுமந்துகொண்டு ஊா்வலமாக வருதல், 12 அடி நீளம் உள்ள தாள் பூட்டு வேல், மற்றும் 6 அடி நீளம் உள்ள நாக்குவேல் போட்டு தீ மிதித்தனா்.
இதையடுத்து மாலை தோ் இழுத்தல், கல் உருளை, டிராக்டா் இழுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து கிராம மக்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி வள்ளலாா் ஜோதி தரிசனமும், இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில் விழுப்புரம் ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் குறிஞ்சி வளவன், செஞ்சி வா்த்தகா் சங்கத் தலைவா் செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சிலம்பரசி பாண்டியராஜன், துணைத் தலைவா் கன்னியம்மாள் காசிநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தேவதானம்பேட்டை...: தேவதானம்பேட்டை கிராமத்தில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தைப் பூசத்தை முன்னிட்டு, காலை 8 மணிக்கு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து பக்தா்களின் காவடி ஊா்வலமும், சுவாமிக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு கோவில் பூசாரி மாா்பு மீது மாவு இடிக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடா்ந்து அவருக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் தீ மிதித்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இதில், தேவதானம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...