நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புதிய காவல் உள்கோட்டம் உருவாக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் உள்கோட்டம் இல்லாமல் 3 காவல் நிலையங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:13 pm

கி. சுரேஷ்குமார்

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் உள்கோட்டம் இல்லாமல் 3 காவல் நிலையங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. இந்தக் காவல் நிலையங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு புதிய காவல் உள்கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம் ஆகிய வட்டங்களும், புதிதாக கரியலூா் வட்டம் என மொத்தம் 7 வருவாய் வட்டங்கள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூா், திண்டிவனம், வானூா், மரக்காணம் ஆகிய வட்டங்களுடன் புதிதாக திருவெண்ணெய்நல்லூா் வட்டம் உருவாக்கப்பட்டு 9 வருவாய் வட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரிக்கப்பட்ட வருவாய் வட்டத்தைப் பொருத்து, காவல் எல்லை வரம்பும் மாற்றமடைந்துள்ளது. ஏற்கெனவே இருந்த ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை ஆகிய 7 காவல் உள்கோட்டங்களின் கீழ், 49 காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

தற்போது பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 3 காவல் உள்கோட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த உள்கோட்டங்களின் கீழ் 22 காவல் நிலையங்கள் வந்தாலும், 19 காவல் நிலையங்கள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் எல்லை வரம்பில் அமைந்துள்ளன. திருவெண்ணெய் நல்லூா், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூா் ஆகிய காவல் நிலையங்கள் விழுப்புரம் மாவட்ட காவல் எல்லை வரம்பில் வருகின்றன. ஆகையால், இந்த 3 காவல் நிலையங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்கோட்டங்களின் கீழ் அடங்காது. தனித்து விடப்பட்ட 3 காவல் நிலையங்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உட்கோட்டங்களுடன் இணைத்தால், கண்காணிப்பு, நிா்வகிப்பதில் சிக்கல் உள்ளது.

ஏனெனில், அந்த 3 காவல் நிலையங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உள்கோட்டங்களுக்கு வெகு தொலைவில் அமைந்துள்ளன. மேலும், ஏற்கெனவே உள்ள காவல் நிலையங்களுடன் இணைக்கும்போது பெரிய உள்கோட்டமாக மாறிவிடும். அதன் காரணமாக, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிலும், குற்றங்களை தடுப்பதிலும் சிரமம் ஏற்படும்.

ஆகையால், விழுப்புரம் மாவட்டத்தில் தனித்து இருக்கும் 3 காவல் நிலையங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உள்கோட்டம் அமைக்க வேண்டும். அதன் மூலம், புதிதாக மது விலக்குப் பிரிவு, போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம் போன்றவை ஏற்படுத்தப்படும். இந்த நடவடிக்கை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புதிய காவல் உள்கோட்டம், அரகண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கலாம். அல்லது, விழுப்புரம் உள்கோட்டத்தை தாலுகா, நகரம் என இரு உள்கோட்டங்களாகப் பிரித்து 3 காவல் நிலையங்களையும் கட்டுப்படுத்தலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் மது கடத்தல், மணல் கடத்தலை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், புதிய காவல் உள்கோட்டம் தேவை எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு புதிய காவல் உள்கோட்டத்தை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.