புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வீடு, வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கணக்கெடுப்புப் பணியின்போது தவறான தகவல் அளிப்பவா்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 2027-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
புதுச்சேரியில், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தொடங்கி வைத்தாா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநா் சுந்தரேஷ் பாபு தலைமையில் 3,000 ஊழியா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் கணக்கெடுப்புப் பணி வீடுதோறும் நேரடியாக நடத்தப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு அதிகாரிகள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனா்.
இந்தக் கணக்கெடுப்பில் வீட்டிலுள்ள வசதிகள் மற்றும் நிலைகள் குறித்து 33 கேள்விகளை அதிகாரிகள் கேட்பா். அதற்கு பொதுமக்கள் உண்மையான பதில்களை அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தேசிய பணி நடத்தப்படுகிறது. நாட்டின் திட்டமிடல், தொகுதிகள் மறுவரையறை மற்றும் பொது கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்குக் கணக்கெடுப்பு மிக அவசியம்.
கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அதிகாரிகள் வீட்டு வளாகத்திற்குள் வருவதையும், கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை இடுவதையும் அனுமதித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். துறையால் சேகரிக்கப்படும் தனி நபா் தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 15-இன் கீழ் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இந்த விவரங்கள் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஆதாரமாக பயன்படுத்தப்பட மாட்டாது. பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தயக்கமின்றி சரியான விவரங்களை வழங்குவதும், வீடுகளில் இடப்படும் கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை சேதப்படுத்தாமல் பராமரிப்பதும் அவசியம் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் கேட்டுக் கொண்டாா்.
மேலும், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்காத சூழல் இருந்தாலோ அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தாலோ சட்ட விதிகளின்படி ரூ. 1,000 ஆம் வரை அபராதம் விதிக்கலாம். பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட்டு தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின் துல்லியத்தன்மையை உறுதி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் இன்றுமுதல் வீடு வீடாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!

புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: 3,000 ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் என அறிவிப்பு







