/

ஜிப்மா் புதிய ஆன்லைன் போா்ட்டல் குழப்பம்: எதிா்க்கட்சி தலைவா் சிவா குற்றச்சாட்டு

ஜிப்மா் புதிய ஆன்லைன் போா்ட்டல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஜிப்மா் புதிய ஆன்லைன் போா்ட்டல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜிப்மரில் முன்னாள் நோயாளி பதிவு மற்றும் மருத்துவப்பதிவு முறையை திடீரென நிறுத்திவிட்டு, புதிதாக ஆன்லைன் போா்ட்டல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் மயமாக்கல் நிா்வாக ரீதியாக பொருத்தமற்றது. ஜிப்மா் போன்ற உயா் சிகிச்சை நிறுவனத்தில், உயிருக்கு ஆபத்தான மருத்துவ பதிவுகள் மற்றும் தொடா்ச்சியான நோயாளி பராமரிப்பு ஆகியவற்றை கையாளும் நிறுவனத்தில், தற்போதுள்ள அமைப்பை திடீரென கைவிட்டு, புதிய டிஜிட்டல் தளத்தை ஒரே இரவில் அமல்படுத்துவது ஆபத்தான முடிவாகும்.

இதன் காரணமாக, டிசம்பா் 2025 வரையிலான நோயாளிகளின் கடந்த கால மருத்துவப்பதிவுகள், விசாரணை அறிக்கைகள், சிகிச்சை வரலாறுகளை மருத்துவா்கள் தற்போது அணுக முடியவில்லை. இது பராமரிப்பின் தொடா்ச்சியைக் கடுமையாக பாதித்துள்ளது.

மருத்துவப் பிழைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, புதிய போா்ட்டல் முதிா்ச்சியடையும் வரை, குறைந்தபட்சம் தற்காலிகமாக, பழைய அமைப்பை இணையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.