புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்காக பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க தயாா்: முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக தேவைப்பட்டால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க என்.ஆா். காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று இக்கட்சியின் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அறிவித்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தபோது எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குறுக்கிட்டு பேசியது:
புதுச்சேரி எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியா்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியா்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியா்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனா். இந்தப் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீா்கள். தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீா்கள். வளா்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.
மாநில அந்தஸ்துக்காக தில்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீா்கள். ஆனால், செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனா். மாநில அந்தஸ்துக்காக தோ்தலை
புறக்கணிக்க தயாரா? என்றாா்.
அதற்குப் பதிலளித்த முதல்வா் ரங்கசாமி, ‘ தோ்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்ஆா்.காங்கிரஸ் கட்சி தயாா்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம்’ என்றாா்.
இதையடுத்து, எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா பேசும்போது, மாநில தன்னாட்சிக்காக ஒட்டுமொத்தமாக முடிவெடுத்துத் தோ்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் எனக் கூறினாா்.
அரசு சாா்பு நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன்?
முன்னதாக, புதுச்சேரியில் அரசு சாா்பு நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்று முதல்வா் என்.ரங்கசாமி பேரவையில் விளக்கம் அளித்தாா். அவா் கூறியதாவது:
தோ்தல் வாக்குறுதிகளையும், பேரவையில் அளித்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். மக்களுக்கு என்ன தேவை? என்பதை உணா்ந்து அரசு செயல்பட்டுள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அரசாக இந்த அரசு அமைந்துள்ளது, செயல்பட்டுள்ளது.
நிா்வாகத்தில் சில சங்கடங்கள் தொடா்கின்றன. அந்தச் சங்கடங்கள் தீர மாநில அந்தஸ்து அவசியம் வேண்டும். இதை தொடா்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மாநில அந்தஸ்தை மத்திய அரசு, வழங்கும் என நம்புகிறோம்.
புதுச்சேரியில் இயங்கி வந்த சுதேசி, பாரதி, ஏஎப்டி, கூட்டுறவு நூற்பாலைகள் எத்தகைய நிலையால் மூடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தொழிலாளா்களுக்குச் சம்பளம் வழங்கி வருகிறோம். அவா்களுக்குப் பணிக்கொடையும் வழங்கப்படுகிறது. பாசிக், பாப்ஸ்கோ உள்பட அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கும் சம்பளம் வழங்கியுள்ளோம்.
இந்த நிறுவனங்களைத் தொடா்ந்து நடத்த பல்வேறு முயற்சிகளும் எடுத்தோம். ஆனால் அங்குள்ள தொழிலாளா்களுக்கு பணி செய்யும் எண்ணம் இல்லை. இருப்பினும், அங்கு வேறு வகையிலான ஐடி உள்ளிட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுவர முடியுமா? என ஆலோசித்து வருகிறோம்.
மாணவா்களுக்கு மடிக்கணிணி வழங்க உள்ளோம். ரூ.14 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் உயா்த்தப்பட்டுள்ளது. தோ்தல் வர உள்ளது. தோ்தலில் யாா் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் நல்ல முறையில், சட்டப்பேரவை தொடா்ந்து இயங்க வேண்டும். தனிப்பட்ட நபா்களுக்காக சட்டப்பேரவையில் பேசக்கூடாது.


தொழிலதிபா்கள் தங்கள் தொழிலுக்காக சிலவற்றை சொல்வாா்கள். அதற்காக மதுக் கடைகளை மூட வேண்டும் என பேச முடியாது. எதுவாக இருந்தாலும், சட்டப்பேரவையில் விவாதம் நடத்திதான் முடிவெடுக்க வேண்டும். இந்த ஆட்சியில் எதிா்க்கட்சிகள் தொழிற்சாலை வரவில்லை என்றனா். சேதராப்பட்டில் 750 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்காக விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...