நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடை வெயிலால் காரைக்கால் கடற்கரையில் திரளும் பொதுமக்கள்: வசதிகளை மேம்படுத்துமா புதுச்சேரி அரசு?

காரைக்கால் கடற்கரைக்கு தினமும் திரளான மக்கள் செல்லும் சூழலில், கோடை காலமாக இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:59 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் கடற்கரைக்கு தினமும் திரளான மக்கள் செல்லும் சூழலில், கோடை காலமாக இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர்.
கடற்கரையில் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்ச சாதனங்கள் சீர்குலைந்தும், தூய்மையின்றியும், போதிய மின் வெளிச்சமின்றியும், அரசலாற்றங்கரை தடுப்புகளின்றியும் காணப்படுகின்றன. மக்கள் வரத்து அதிகரிக்கும் இந்த தருணத்தைக் கருத்தில் கொண்டு, கடற்கரையை சுற்றுலாவினரை ஈர்க்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் காரைக்கால் வந்து இதுகுறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
காரைக்கால் கடற்கரை சுற்றுவட்டாரம் இயற்கையாகவே அழகாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.
காரைக்கால் அரசலாற்றுப் பாலத்திலிருந்து சுமார் 1.5 கி.மீட்டர் தூரம் நேரான சாலை, சாலையின் இடதுபுறத்தில் நடைமேடை, நடைமேடையில் பொதுமக்கள் உட்காருவதற்கு கான்கிரீட் பெஞ்சுகள், வலது புறத்தில் அரசலாறு, அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரம், நீர் நிலையுடன் கூடிய அலையாத்திக் காடு, அரசு நிர்வாகத்தின் சீகல்ஸ் உணவகம், குழந்தைகள் பூங்கா, நவீன கழிப்பறை, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் வகையில் பரந்த மணல் பரப்பு, கடற்கரையிலிருந்து வெளியேற குறுக்கு சாலைகள் உள்ளிட்டவற்றை கூறலாம்.
கடற்கரையை பல்வேறு கட்டங்களாக மத்திய அரசின் சுற்றுலா நிதியில் மேம்படுத்தும் நோக்கில் முதல்கட்ட திட்டம் மட்டுமே நிறைவேறப்பட்டுள்ளது. குறுக்கு சாலைகள், நடைமேடை, உயர் மின் கம்பங்கள், பீச் மர்ஷே என்கிற தங்கும் விடுதி கட்டடம் கட்டுமானம் நிறைவு ஆகியவற்றைக் கூறலாம்.
இதில் கடற்கரையில் மக்கள் தங்கும் வசதிக்காக ரூ. 3.5 கோடியில் புனரமைத்து கட்டப்பட்ட கட்டடத்தை புதுச்சேரி அரசும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. பீச் மர்ஷே கட்டடத்துக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புப் பணி செய்யப்படாததால் இது பயன்பாட்டுக்கு வரவில்லை. கடற்கரையோரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டு, சுற்றுலாவினர் ஆர்வத்தை அரசு நிறைவேற்றவில்லை என்ற புகார் கூறப்படுகிறது.
காரைக்கால் அரசலாறு பாலத்திலிருந்து கடற்கரை சாலையில் கடற்கரைக்குச் செல்வோர் இருசக்கர வாகனம், கார்களில் மட்டுமே பயணிக்க முடியும். பேருந்தில் வந்திறங்குவோர் கடற்கரைக்குச் செல்ல வசதிகள் செய்யப்படவில்லை.
மத்திய சுற்றுலா அமைச்சக நிதியில் கட்டப்பட்ட நடைமேடை பகுதிகள் சிதிலமடைந்து நடந்து செல்லக்கூட லாயக்கற்று காணப்படுகிறது. அனைத்து கான்கிரீட் பெஞ்சுகளும் அதனுள் இருக்கும் கம்பிகளை திருட சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உருக்குலைந்து காணப்படுகின்றன.
நடைமேடையில் உள்ள குறைந்த உயரம் கொண்ட அலங்கார மின் விளக்குகள் உடைந்த நிலையில் உள்ளன. நடைமேடையில் வெளிச்சத்துக்கு வழியே இல்லை.
கடற்கரை சாலையின் வலதுபுறத்தில் அரசலாறு கடலை நோக்கி செல்கிறது.
தண்ணீர் எப்போதும் இருக்கும் இந்த ஆற்றில், மீன்பிடிப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால், கடற்கரையில் மக்கள் நடந்து செல்லும்போது பல்வேறு சிரமத்தை சந்திக்கிறார்கள். இவர்களை ஆற்றின் மறுகரையைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தும், மீனவர்கள் அதை ஏற்கவில்லை.
சாலைக்கும், ஆற்றின் கரைக்கும் நடுவே தடுப்புச் சுவர் ஆங்காங்கே உடைக்கப்பட்டு, திறந்தவெளியாக காட்சியளிக்கிறது. குழந்தைகள் பூங்கா 2 உள்ளன. ஒன்றில் எந்த வசதியும் இல்லை. மற்றொன்றில் 4 செயற்கை நீரூற்றுகள் அமைத்து, விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய மின் வசதி இங்கு செய்துத்தரப்படாததால், 4 செயற்கை நீரூற்றுகளும் ஒரே நேரத்தில் செயல்படுவதில்லை.
அரசலாற்றில் படகு குழாம் இருந்தும், நவீன புதுச்சேரியில் பயன்பாட்டில் இருப்பதுபோல் கூடுதலாகன படகுகள், நவீன படகுகள் இல்லாததால் படகு குழாம் பொலிவிழந்து காணப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலருமான ஜெ. சிவகணேஷ் கூறியது :
கடற்கரை என்பது புதுச்சேரியைக் காட்டிலும் காரைக்காலில் இயற்கையான அழகைக் கொண்டது. இதனை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். தமிழகப் பகுதியிலிருந்து மக்கள் காரைக்கால் கடற்கரைக்கு தினமும் திரளாக வருகிறார்கள். உடனடியாக கடற்கரையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஏறக்குறைய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இதனால் அரசுக்கு எந்த வருவாயும் இல்லை. உள்ளூர், வெளியூர் மக்கள் வரத்தால் வியாபாரம் பெருக வேண்டும். அதற்கான சூழல்களை அரசு ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.