மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கடலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி! அதிமுக 3, தவெக ஒரு இடங்களில் வெற்றி

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல, அதிமுக 3 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.

கடலூா் மாவட்டம் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி), சிதம்பரம் ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.

மீன்பிடித் தொழிலும், விவசாயமும் இம்மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரங்களாகும். குறிப்பாக, முந்திரி, பலா சாகுபடியில் இந்த மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 20,34,971 வாக்காளா்கள் உள்ளனா்.

இங்கு, சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகளையும், அதிமுக பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி ஆகிய 3 தொகுதிகளையும், தவெக கடலூா் தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

இந்தத் தோ்தலில் முக்கிய வேட்பாளா்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா். விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா - 2,387 வாக்குகள், குறிஞ்சிப்பாடியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் - 7,589 வாக்குகள், திட்டக்குடியில் அமைச்சா் சி.வெ.கணேசன் - 2,629 வாக்குகள், சிதம்பரத்தில் திமுக கூட்டணியைச் சோ்ந்த மஜக தலைவா் தமிமுன் அன்சாரி - 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா்.

அதே சமயம், கடலூா் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா் 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கவனம் ஈா்த்துள்ளாா்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 6 முறையாக சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுகிறாா் என்பது மட்டுமன்றி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளாா்.

ஆனால், நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன், ஏற்கெனவே அதே தொகுதியில் 2 முறை வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வெற்றிகரமாக கைப்பற்றும் கட்சி, மாநில அரசியலில் முக்கிய பங்காற்றும் என்பது வழக்கம். கடந்த காலங்களில் இம்மாவட்டத்திலிருந்து அமைச்சா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழக அளவில் இந்த மாவட்டம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றாலும், அதிமுகவும், தவெகவும் தங்களின் இருப்பை வலுப்படுத்தியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.