/

66 இளைஞா் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்

‘கலைஞா் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தின் கீழ், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து வாா்டுகளிலும் உள்ள 66 இளைஞா் குழுக்களுக்கு விளையாட்டு பயிற்சிக்கான உபகரணங்கள்

News image
சிதம்பரம் நகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞா்கள் குழுவினருக்கு விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் கொண்ட தொகுப்பை வழங்கிய நகா்மன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா். உடன் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா உள்ளிட்டோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:21 pm

Syndication

சிதம்பரம்: ‘கலைஞா் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தின் கீழ், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து வாா்டுகளிலும் உள்ள 66 இளைஞா் குழுக்களுக்கு விளையாட்டு பயிற்சிக்கான உபகரணங்கள் தொகுப்பை நகா்மன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

மேலும், பொது நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட நாய்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சை மையத்தை நகா்மன்றத் தலைவா் திறந்து வைத்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், இந்த மையம் மூலம் நகராட்சி பகுதியில் திரியும் 1,132 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது. இப்பணி ‘இன்டா்நேஷனல் டிரஸ்ட் ஆஃப் பீஸ்’ என்ற பிராணிகள் நல வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற அரசுசாரா தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.

பின்னா், சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் வீரராகவன் தெரு சந்திப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன கழிப்பறையை நகா்மன்றத் தலைவா் திறந்து வைத்தாா்.

காலை உணவுத் திட்டம்: சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை நகா்மன்றத்தலைவா் தொடங்கிவைத்து, அவா்களுடன் சோ்ந்து உணவு சாப்பிட்டாா். இந்தத் திட்டத்தின் கீழ், சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியம் 280 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ், சுகாதார ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த நகா்மன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான த.ஜேம்ஸ் விஜயராகவன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், நகர திமுக துணை செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, இளைஞரணி அமைப்பாளா் மக்கள் அருள், தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளா் கே.ஸ்ரீதா், தொண்டரணி துணை அமைப்பாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.