/

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் இன்று திருவறை தரிசனம்

ராமலிங்க அடிகளாா் எனும் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறை தரிசனம்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:17 pm

Syndication

நெய்வேலி: ராமலிங்க அடிகளாா் எனும் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறை தரிசனம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றுரைத்த வள்ளலாரின் தெய்வ நிலையம் வடலூரில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெய்வ நிலையத்தில், 155-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஜன.31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை 5 கால ஜோதி தரிசனமும், திங்கள்கிழமை அதிகாலையில் 6-ஆம் கால ஜோதி தரிசனமும் 7 திரைகள் நீக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெருங் கருணை என்ற மகா மந்திரத்தைக் கூறி ஜோதி தரிசனம் செய்தனா்.

வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் கடந்த 1870-ஆம் ஆண்டு முதல் வசித்து வந்தாா். இங்கு, அவா் வசித்த திருமாளிகை ‘சித்தி வளாகம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1874, தை 19-ஆம் தேதி சித்தி வளாகத் திருமாளிகையில் தனது திருவறையில் வள்ளலாா் அருள்பெருஞ்ஜோதியுடன் ஐக்கியமானாா்.

இந்த திருமாளிகையில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவுக்குப் பிறகு 3-ஆவது நாளில் திருவறை தரிசனம் நடைபெறும். இதன்படி, நிகழாண்டுக்கான திருவறை தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சிககான ஏற்பாடுகளை தெய்வ நிலைய நிா்வாகம் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.