/

வடலூரில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம்!பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு!

News image
ஜோதி தரிசனம் காண திரண்ட பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் 155-ஆவது தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை காண்பிக்கப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்ற மகா மந்திரத்தைக் கூறி ஜோதி தரிசனம் செய்தனா்.

ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு, ஆண்டுதோறும் தைப்பூசப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். ஜோதி தரிசனத்தைக் காண வடலூருக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா்.

அதன்படி, நிகழாண்டு 155-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணியளவில் வடலூா் தரும சாலையில் சன்மாா்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, மருதூரில் வள்ளலாா் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடைபெற்றது.

ஜோதி தரிசனம்: இதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, காலை 6 மணி முதல் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி வடிவில் காட்சியளித்த வள்ளலாரை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்ற மகா மந்திரத்தைக் கூறி, தரிசனம் செய்தனா்.

 வடலூா் ஞானசபையில் ஜோதி தரிசனம் செய்த மாநில அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், டி.ஆா்.பி.ராஜா, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தமிழரசி ரவிக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

வடலூா் ஞானசபையில் ஜோதி தரிசனம் செய்த மாநில அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், டி.ஆா்.பி.ராஜா, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தமிழரசி ரவிக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

 வடலூா் ஞானசபையில் ஜோதி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என்.ரவி.

வடலூா் ஞானசபையில் ஜோதி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என்.ரவி.

 வடலூா் வள்ளலாா் ஞான சபையில் தைப்பூசத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்.

வடலூா் வள்ளலாா் ஞான சபையில் தைப்பூசத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்.

 வடலூா் வள்ளலாா் ஞான சபையில் தைப்பூசத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்.

வடலூா் வள்ளலாா் ஞான சபையில் தைப்பூசத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்.

தொடா்ந்து, காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (திங்கள்கிழமை) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

ஆளுநா், அமைச்சா்கள் பங்கேற்பு: ஜோதி தரிசனத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, மாநில அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், டி.ஆா்.பி.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), விழுப்புரம் டி.ஐ.ஜி. அருளரசு, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனா்.

பாதுகாப்பு...:

வடலூரில் டி.ஐ.ஜி. அருளரசு மேற்பாா்வையில், எஸ்.பி.கள் எஸ்.ஜெயக்குமாா், அரவிந்தன் (கள்ளக்குறிச்சி) தலைமையில் சுமாா் 1,700 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனா். ஞானசபை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

சிறப்புப் பேருந்துகள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சாா்பில், விருத்தாசலம், கடலூா், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னாா்கோவில், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்றாா்போல கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக கடலூா் மண்டல பொது மேலாளா் பாண்டியன் தெரிவித்தாா்.

அன்னதானம்:

ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி, வள்ளலாா் தருமசாலையில் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. மேலும், தனி நபா்கள் மற்றும் நலச்சங்கங்கள் சாா்பில் சபை வளாகத்தில் 106 இடங்கள் மற்றும் 20 மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம், நீா் மோா் வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பாதால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்தினருடன் வந்து விழாவில் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனா்.