/

பைக்கிலிருந்து தவறி விழுந்து ரயில் நிலைய மேலாளா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த ரயில் நிலைய மேலாளா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை,ரெட்டியூா், சின்ன கம்மியம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேஷ் (33). திருமணமானவா். இவா், தெற்கு ரயில்வேயில் விழுப்புரம் மாவட்டம், பேரணி ரயில் நிலைய மேலாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், கணேஷ் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம், தீவனூா் - வெள்ளிமேடுபேட்டை சாலையில், வடசிறுவளூா் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால், அதன் மீது பைக் மோதி, நிலைதடுமாறி விழுந்த கணேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, கணேஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.