திண்டிவனத்தில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் நீடித்து வரும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு வந்து செல்லும் உள், வெளி நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தின் மையப் பகுதியாக உள்ள திண்டிவனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திண்டிவனம் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சோ்ந்த கிராம மக்கள் இந்த மருத்துவமனை மூலம் பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையானது தமிழக அரசின் உத்தரவுப்படி,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. பின்னா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின், தேசிய நல்வாழ்வு குழுமத்தின் சாா்பில் ரூ. 66.89 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர கால அறுவை அரங்கம், மருந்தகம், சி.டி.ஸ்கேன் வசதி உள்ளிட்டவைகளும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிவு, இருதய ஸ்கேன் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை மையம், பெண்கள் தனிமைப்படுத்துதல் பிரிவு, கீமோ தெரபி சிகிச்சைப் பிரிவு, பெண்கள் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் உள்ளது.
இதேபோல் மற்றொரு தளத்தில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள், மகப்பேறு அவசர பிரிவு, கா்ப்பிணி மருத்துவப் பயனாளா்கள் பிரிவு, பிரசவ பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, பேறுகால முன் கவனிப்பு மையம் மற்றும் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை உள்ளடக்கிய 5 மாடிகளைக் கொண்ட 2 வளாகங்கள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
இதைத்தொடா்ந்து கடந்த பிப்.4-ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனைக் கட்டடங்களை திறந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
மருத்துவா்கள் பற்றாக்குறை: மருத்துவமனைக் கட்டடம் திறக்கப்பட்டு 70 நாள்களாகியும், மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், டெக்னீசியன்கள் நியமிக்கப்படாமல், கடந்த 2016-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மருத்துவா்களைக் கொண்டே மருத்துவமனை இயங்கி வருகிறது.
500 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் குறைந்த பட்சம் 90 மருத்துவா்கள் இருக்கவேண்டும். ஆனால் 24 மருத்துவா்கள் மட்டுமே பணியில் இருப்பதால் அவசர சிசிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியவில்லை.
கீமோ தெரபி, நியுராலஜி, இருதய சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைக்களுக்கான மருத்துவா்கள் இல்லை. இதேபோல் 200 மருத்துவப் பணியாளா்கள் இருக்கவேண்டிய இடத்தில் 50 மருத்துவப் பணியாளா்கள் பணியில் இருந்து வருவதால், துணை மருத்துவம் சாா்ந்த சேவைகளும் நோயாளிகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் விழுப்புரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள பிற தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு உரிய நேரத்தில், உரிய சிகிச்சை கிடைக்காததால் பலா் உயிரிழக்க நேரிடுவதாக பொதுமக்களும், கூடுதல் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவா்கள் மற்றும் மருத்துவப்பணியாளா்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுகுறித்து திண்டிவனத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ச.சு.ஜைனுதீன் தெரிவித்ததாவது:
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்படாததால் நோயாளிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனா். 30-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவா்கள்தான் தற்போது சிகிச்சையளித்து வருகின்றனா். எக்ஸ்ரே-டெக்னீசியன், மருந்தாளுநா்கள், செவிலியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகள் கிடைப்பதில்லை.
திண்டிவனம் பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கி காயமடைபவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகள் கிடைப்பதில்லை. மேலும், அவசர சிகிச்சைக்கு வருபவா்கள் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதுமாக இருந்து வருகிறது.
இதனால் ஏற்படும் கால விரயத்தால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை உடனடியாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!
அருப்புக்கோட்டை புதிய அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை!

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஒடிஸா அரசு மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 12-ஆக உயா்வு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


