/

இடம் இருக்கு; மனம் இல்லை!

ராணிப்பேட்டை, டிச. 18: ராணிப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் 38 ஆண்டு கால கோரிக்கை கனவாகவே உள்ளது. இங்கு 1973-ம் ஆண்டு சுமார் 700 ஏக்கர்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:28 pm

பெ.பாபு

ராணிப்பேட்டை, டிச. 18: ராணிப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் 38 ஆண்டு கால கோரிக்கை கனவாகவே உள்ளது.

இங்கு 1973-ம் ஆண்டு சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும்,  பொதுத்துறை நிறுவனமான பெல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களும் சிப்காட்டில் இயங்கி வருகின்றன. இவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் தோல் பொருள்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், பெருமளவு அன்னிய செலவாணியும் கிடைக்கிறது.

நூற்றுக்கணக்கானோருக்கு பணி கிடைக்க வாய்ப்பு!

இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையையொட்டி 2 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டன. இவற்றில் 6 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. 4 நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு பணி கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

இ.எஸ்.ஐ.க்கு பணம் பிடித்தம் செய்வதால் பலனில்லை!

"சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் 6 சதவீதம் இ.எஸ்.ஐ.க்காக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் சார்பில் 6.5 சதவீதம் இ.எஸ்.ஐ.க்கு செலுத்தப்படுகிறது. எனினும், இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்வதால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை' என்கின்றனர் தொழிலாளர்கள்.

இ.எஸ்.ஐ. சார்பில் ராணிப்பேட்டையில் பகுதி நேர மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதில், 2 டாக்டர்கள், 2 செவிலியர்கள், 1 மருந்தாளுநர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இந்த மருந்தகம் காலையில் சில மணி நேரமும், மாலையில் சில மணி நேரமும் மட்டுமே இயங்குகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டையில் 50 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட சிப்காட் நிர்வாகத்தால் 5 ஏக்கர் நிலம் 38 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுநாள்வரை மருத்துவமனை கட்டப்படவில்லை. இந்த இடம் இப்போது புதர் மண்டி கிடக்கிறது.

கோரிக்கை நிறைவேறுமா?

எனவே, தங்கள் ஊதியத்தில் இருந்து இ.எஸ்.ஐ.க்கு பணம் பிடித்தம் செய்ய வேண்டாம் என நிறுவன அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வழக்கம் போல பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இ.எஸ்.ஐ.க்கு பணமும் செலுத்தப்படுகிறது.

பல ஆண்டுகளாக தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வந்த போதிலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை என்பது கானல் நீராகவே மாறிவிட்டது.

இருப்பினும், இன்னமும் காலம் கடத்தாமல் இங்குள்ள மருந்தகத்தை தரம் உயர்த்தி மருத்துவமனையாக்க வேண்டும் என்றே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.