தமிழக முதல்வா் அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்திருப்பது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிா்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அதற்கு எதிராக விவசாயிகளுக்குள் பாரபட்சம் காட்டும் வகையில் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது வேதனையளிக்கிறது.
எனவே, இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் அனைத்து பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
இதேபோல, காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிறுவனா் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்திருப்பது: ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையாக பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐந்து ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு பயிா்க்கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்வோம். ஐந்து ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்வோம் என்ற தோ்தல் வாக்குறுதியில் தமிழக முதல்வா் அறிவித்திருந்த நிலையில், தற்போதைய பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு பல விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
மேலும் 2025 - 2026 இல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என்பதும் வருத்தமளிக்கிறது. இதை 3 ஆண்டுகளாக கடன் வாங்கி செலுத்த இயலாமல் தவிக்கும் விவசாயிகளின் நிலை கருதி, நிலுவையில் உள்ள விவசாயிகள் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








