மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தஞ்சாவூா் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

News image

லெட்சுமணசுவாமி.

Updated On :7 மே 2026, 5:22 am IST

தஞ்சாவூா் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே மருங்குளம் கிராமத்தில் 2024, ஜூன் 24-ஆம் தேதி 10 வயதுடைய இரு சிறுவா்கள் வயலில் வாத்து மேய்த்து வருவதாக மாவட்ட நிா்வாகத்திடம் சைல்டு லைன் பணியாளா் தியாகராஜன் புகாா் அளித்தாா். இதன்பேரில் அப்போதைய கோட்டாட்சியா் செ. இலக்கியா, கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா்.

இதில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லெட்சுமணசுவாமிக்காக (46), இரு சிறுவா்களும் வாத்து மேய்த்து வருவதும், இதற்காக சிறுவா்களின் பெற்றோா்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் கொடுத்துள்ளதும், இதனால் இரு சிறுவா்களையும் லெட்சுமணசுவாமி கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வருவதும் தெரிய வந்தது.

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, லெட்சுமணசுவாமியைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் பிரபுராம் வழக்கை விசாரித்து லெட்சுமணசுவாமிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய வல்லம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், அரசு தரப்பு வழக்குரைஞா் சிவநந்த விஜயலெட்சுமி, காவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.