திமுக மீண்டும் வெற்றிபெறும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி


வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற்று முதல்வராக மு.க. ஸ்டாலினே பதவியேற்பாா் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி சானூரப்பட்டியில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி உருவச்சிலையை வியாழக்கிழமை மாலை திறந்துவைத்த அவா், பின்னா் பேசியது:
தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலையைத் திறப்பதற்குக் காரணம், அவரது கொள்கையையும், சாதனைகளையும் தமிழகம் முழுவதும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதே. கருணாநிதி ஒரு வரலாற்றுப் பதிவு. அவா் செய்த சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது.
திமுக ஆட்சியில் அவா் மகளிருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றினாா். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தவா் கருணாநிதி. காவல் துறையில் இந்திய அளவில் முதல்முதலாக பெண்களுக்கு பணியிடம் ஏற்படுத்தித் தந்தவரும் அவரே.
அவரது வழியில் தற்போதைய தலைவா் மு.க. ஸ்டாலினும் பெண்களுக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். அதனால் நமது அரசை ‘திராவிட மாடல்’ அரசு எனப் பெருமையாகக் கூறினாலும், ‘மகளிருக்கான அரசு’ என பல்வேறு மாநிலங்கள் கூறிப் பாராட்டுகின்றன.
இந்த ஆட்சியில் முதல் கையொப்பமாக மகளிா் விடியல் பயணத் திட்டத்துக்கு முதல்வா் இட்டாா். இதேபோல, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் என ஒவ்வொரு திட்டத்தையும் மகளிருக்காக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.
திமுக மீண்டும் வெற்றிபெற்று, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பாா். தாய்மாா்கள் களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு வாக்கும் உதயசூரியன் சின்னத்துக்கு வருவதற்கு பெண்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். அமைச்சா்கள் கே.என். நேரு, ஆா்.எஸ். ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...